dinamalar telegram
Advertisement

டவுட் தனபாலு

Share
Tamil News
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால், 405 பேர் பயன் அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள், அதிக அளவு கல்விக் கட்டணத்தை செலுத்த வாய்ப்பில்லை. தனியார் கல்லுாரிகளில் இடம் கிடைத்தும், கட்டணம் செலுத்த முடியாத காரணத்தால், படிப்பு தொடர முடியாமல் போய் விடுகிறது. எனவே, கட்டணம் செலுத்துவதற்கும் அரசு உதவி செய்து, அவர்கள் மருத்துவம் படிக்க உதவ வேண்டும்.


'டவுட்' தனபாலு: 'நல்ல' கோரிக்கை தான். 'அரசு பள்ளி மாணவர்களால், மிகவும் கடினமான மருத்துவப் படிப்பை படிக்க முடியவில்லை. அதனால், அவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும், 'ஆல் பாஸ்' வழங்க வேண்டும் என, உங்களை அடுத்து, பிற கட்சிகளின் தலைவர்கள் கேட்பரோ என்பது தான், இப்போதைய மிகப்பெரிய, 'டவுட்' ஆக உள்ளது.


கர்நாடக உள்துறை அமைச்சர், பசவராஜ் பொம்மை:
சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலாவை விடுதலை செய்வதில், சிறப்பு சலுகைகள் அளிக்கப்படாது. கர்நாடக சிறைத் துறை விதிகளின் படியே, அவர் விடுதலை செய்யப்படுவார்.


'டவுட்' தனபாலு: இதைத் தான், கர்நாடக சிறைத் துறை அதிகாரிகளும், உங்களைப் போன்ற அமைச்சர்களும் தொடர்ந்து சொல்லி வருகின்றனர். அதை அறிந்தும், அறியாதது போல, சில, தமிழக குட்டிக்கட்சித் தலைவர்கள், 'இப்போது வந்து விடுவார்; இதோ வந்து விட்டார்' என, லாவணி பாடிய படியே உள்ளனர். அதெல்லாம், சும்மா பம்மாத்து என்பது, தமிழக மக்களுக்கு, 'டவுட்' இன்றி தெரிந்திருந்திருக்கும்.தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி:
பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ், ஊரக பகுதிகளில், ஒரு வீட்டிற்கான தொகை, தேசிய அளவில், 1.20 லட்சம் ரூபாயாக இருந்தாலும், தமிழக அரசு கான்கிரீட் மேற்கூரை அமைக்க, மாநில நிதியில் இருந்து, 50 ஆயிரம் ரூபாயை கூடுதலாக வழங்குகிறது. பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டம், தமிழகத்தில் முழுமையாக, வரும், 2022ம் ஆண்டுக்குள், முதல்வர் தலைமையில் நிறைவேற்றப்படும்.'டவுட்' தனபாலு: அனைவருக்கும் வீடு என்பது, ஆண்டாண்டு காலமாக, கட்சிகளின், கவர்ச்சி கோஷமாக இருக்கிறது. அனைவருக்கும் வேலை; அனைவருக்கும் உணவு; அனைவருக்கும் கல்வி இன்னும் சாத்தியமாகாத நிலையில், அனைவருக்கும் வீடு கிடைக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ என்பது தான், 'டவுட்!'இ.பி.எஸ்., தமிழக முதல்வர்:
கூட்டணிக் கட்சிகளை, கட்சித் தலைமை முடிவு செய்யும். அதேபோல, தலைமை அறிவிக்கும் வேட்பாளர்களை, அனைவரும் ஏற்க வேண்டும். 'சீட்' கிடைக்கவில்லை என, யாரும் கூறக்கூடாது. கட்சியில் கோஷ்டி பூசல் இருக்கக் கூடாது. கிளை நிர்வாகிகள் வருத்தப்படாத வகையில், நிர்வாகிகள் செயல்பட வேண்டும்.


'டவுட்' தனபாலு: ஜெ., இருக்கும் போது, வேட்பாளர்கள் பட்டியல், தொகுதி பங்கீடு, போட்டியிடும் இடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் போது, கட்சியினர், 'கப்சிப்' என இருப்பர். இந்த முறை, உங்கள் இருவர் தலைமையில் தேர்தல் நடக்க உள்ளது. கட்சியினர், 'ரியாக் ஷன்' எப்படி இருக்குமோ என்ற, 'டவுட்' இப்போதே எழுகிறதே!


காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்
: காங்கிரஸ் கட்சி சார்பில், 234 தொகுதிகளிலும் கள நிலவரம் குறித்த, 'சர்வே' எடுக்கப்பட்டு, அந்தத் தொகுப்பு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு அனுப்பப்பட உள்ளது. அதை வெளிப்படையாக தெரிவிக்க முடியாது. கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, காங்கிரஸ் கட்சியின் பலத்தை தெரிவித்து, அதற்கேற்ப தொகுதிகளை பெறுவதற்காக, சர்வே எடுத்து வைத்துள்ளோம்.


'டவுட்' தனபாலு: காங்கிரசில், சர்வே எடுப்பது; அதன்படி முடிவு எடுப்பது எல்லாம் கிடையாதே... மன்னராட்சி காலத்தில் நடந்தது போலத் தானே, இதுவரை, முடிவுகள் எடுக்கப்பட்டன. சர்வே அது, இது என இப்போது சொல்வது, தி.மு.க.,விடம் பேரம் பேசி, சட்டசபை தேர்தலில் கூடுதல் இடங்களை பெறத்தானோ என்ற, 'டவுட்' வருகிறதே!பா.ஜ., மாநில துணைத் தலைவர் அண்ணாமலை:
ஹிந்துக்களையும், மதத்தையும், பெண்களையும், தி.மு.க., இழிவாக பேசி, அரசியல் செய்து வருகிறது. இதை மக்கள் ஏற்கவில்லை என்பதை, வேல் யாத்திரைக்கு வரும் கூட்டத்தை பார்த்து அறிய முடிகிறது.'டவுட்' தனபாலு: பா.ஜ., தலைவர் முருகன் நடத்தும் வேல் யாத்திரைக்கு, கட்சித் தொண்டர்கள், மக்களை விட, உங்கள் கட்சித் தலைவர்கள் தான் அதிகம் பேர் வருகின்றனர். எல்லாரும், மாநில அளவிலான நிர்வாகிகளாகவே இருக்கின்றனர். மருந்துக்குக் கூட, மக்களோ, சாதாரண தொண்டர்களையோ பார்க்க முடியவில்லையே ஏன் என்ற, 'டவுட்' ரொம்ப நாளா இருக்குது!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    முதலில் ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று தானே குறைப்பட்டுக்கொண்டார்கள் கிடைத்ததும் செலவுக்கும் அரசே கொடுக்க வேண்டும், ஐந்து ஆண்டு ஆனதும் க்ளினிக் வைத்துத் தர வேண்டும் என்று கூட கேட்பார் போலிருக்கிறதே இவர் ஆட்சிக்கு வந்து செய்து காட்டட்டுமே

Advertisement