dinamalar telegram
Advertisement

நீதிமன்றத்தில் தோல்வியுறும் குற்ற வழக்குகள்!

Share
Tamil News
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்களுக்கு, சமூக, பொருளாதார மற்றும் கலாசார மாற்றம் முக்கிய காரணம் என்றாலும், குற்றம் செய்யத் துணிவோர் மனதில் அச்சத்தை ஏற்படுத்த தவறும், நம் நீதிமன்ற நடைமுறைகளும் காரணம்.எதிர்பாராத சூழ்நிலை, உணர்ச்சியின் உந்துதல், கோபத்தின் உச்சகட்டம் என்ற காரணங்களின் அடிப்படையில் நிகழும் குற்றங்களில் வேண்டுமானால், பின் விளைவுகளைப் பற்றி சிந்திக்கும் அவகாசம் இல்லாமல் போவதற்கு வாய்ப்புள்ளதாக எடுத்துக் கொள்ளலாம்.

தப்புக்கணக்கு போட்டவர்கள்



ஆனால், அதே சமயத்தில், அதுபோன்ற சந்தர்ப்பத்தில் கூட, சட்ட நடவடிக்கை, நீதிமன்றம் சிறை தண்டனை என்ற நினைவலை ஒரு கணம் வந்து போவதற்கும் சாத்தியம் உள்ளது.குற்றம் செய்தவர்கள் நீதிமன்றத்தில் தப்பிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை, சமுதாயத்தில் நிலவுகின்ற பட்சத்தில், அந்த நிலை ஏற்படாத வரை, குற்றம் புரிபவர்களின் செயலில் தயக்கம் ஏற்பட வாய்ப்பே இல்லை.போதிய அவகாசம் எடுத்து, பின் விளைவுகளைப் பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்தும் திட்டமிட்டு செயல்படுத்துபவர்களுக்கு இது பொருந்தாது.


அவர்கள் தப்புக்கணக்கு போட்டவர்கள் அல்லது நீதிமன்ற நடைமுறையில், தங்களுக்கு சாதகமாக உள்ள குறைபாடுகளை சரியாக கணக்குப்போட்டு வைத்திருப்பவர்கள்.காவல் துறை முன்னாள் அதிகாரி என்ற முறையில், ஆயிரம் குற்றவாளிகள் அல்ல, ஒரு சில குறறவாளிகள் தண்டனையிலிருந்து தப்பித்தாலே, அதன் கடுமையைத் தாங்கப்போவது இந்த சமுதாயம் தான். தப்பித்த அந்தக் குற்றவாளியின்மனதில் தோன்றும் மனத்துணிவு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்; அவன் கையால் எத்தனை நிரபராதிகள் தண்டிக்கப்படுவர்என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது.


அந்த தண்டனைகள் நீதிமன்றம் போல் சட்ட வரைமுறைக்கு உட்பட்ட தண்டனை அல்ல. இயற்கை நீதிக்கொள்கை என்பது, குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப் படுபவருக்கு, அவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க போதிய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது தான்.குற்றம் சிறிதும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட வேண்டும் என்பதும் சிறிதளவு சந்தேகம் எழுப்பப்பட்டாலும், அதன் பயனை, குற்றம் சுமத்தப்பட்டவருக்கு சாதகமாக நீதிமன்றம் எடுத்து, அவரை விடுதலை செய்துவிடும் என்பது தான் நம் நீதிமன்ற நடைமுறை.

அந்த நோக்கத்தோடு தன் கட்சிக்காரரான, குற்றம் சுமத்தப்பட்டவருக்காக வாதாடும் வழக்கறிஞரால் உருவாக்கப்படும் சந்தேகம், நியாயமானதாகவும், ஒரு சாதாரண மனிதனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்தை அடிப்படையாக கொண்டதாகவும் இருக்கிறதா என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு நீதிமன்றத்திடம் இருக்கிறது.

ஒரு வழக்கின் விசாரணை அதிகாரி, அந்த வழக்கை விசாரிக்கும்போது அவருக்கு கிடைக்கும் ஆதாரங்களும், தடயங்களும் ஒத்திருந்தால் மட்டுமே, குற்றஞ்சாட்டப்பட்டவரை குற்றவாளி என தீர்மானித்து, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் நிறுத்துவார்.

சாட்சியங்களின் மதிப்பீடு



தன் முன் நிறுத்தப்படும் குற்றவாளிக்கு எதிராக புலன் விசாரணை அதிகாரி சேகரித்துள்ள சாட்சியங்களை மதிப்பீடு செய்து, அதன் அடிப்படையில் குற்றவாளிக்குதண்டனை வழங்குபவர் தான் நீதிபதி.எனவே, புலன் விசாரணயை ஆய்வு செய்து தீர்ப்பளிக்கும் நீதிபதியை விட, அந்த புலன் விசாரணையை செய்து உண்மைக் குற்றவாளியை தீர்மானிக்கும் விசாரணை அதிகாரிக்கு தான், மனசாட்சி, நேர்மை, சமூக அக்கறையுடன் கூடிய கடமை, பொறுப்பு அனைத்தும் அவசியம்.

என் அனுபவத்தில், நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்படும் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எல்லாம் நிரபராதிகள் இல்லை. விசாரணை அதிகாரியின் திறமையின்மை, பாதித்தவர் உட்பட சாட்சிகளின் மனமாற்றம், குற்றவாளிகளின் சொந்த செல்வாக்கு ஆகிய காரணங்களால் தண்டனையிலிருந்து தப்பியவர்கள் தான்.

ஆயுள் தண்டனை



விசாரணை அதிகாரியின் பொறுப்பு அத்துடன் முடிந்து விடுவதில்லை.அவரது விசாரணையின் ஒவ்வொரு பகுதிமட்டுமின்றி, அதனோடு தொடர்புடையதாகக் கைப்பற்றப்பட்ட தடயங்கள், சான்று ஆவணங்கள், அவற்றை சேகரித்த சூழ்நிலை, சேகரித்த விதம், அந்த தடயம் குறித்தான நிபுணர்களின் கருத்து, அனைத்துமே குற்றவாளி மீது சுமத்தப் பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக அமைய வேண்டும்.காயம், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை போன்ற உடல்கூறு சம்பந்தப்பட்ட வழக்குகளில் மருத்துவ அதிகாரியின் சாட்சியம் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

நான் முதன் முதலாக, காவல் உதவி ஆய்வாளராக பொறுப்பேற்ற கிராமத்தில், சுகாதார அதிகாரி ஒருவர் தன் மனைவி மீது சந்தேகப்பட்டு, சவரம் செய்ய பயன்படுத்தப்படும் சிறிய பிளேடால் கழுத்தை அறுத்து, கொலை செய்து விட்டார்.அந்த வழக்கில் குற்றவாளிக்காக ஆஜரான வக்கீல், அது தற்கொலை என்று திசைதிருப்பும் நோக்கத்தில், பிரேத பரிசோதனை செய்த மருத்துவ அதிகாரியை குறுக்கு விசாரணையில் மடக்க முயற்சித்தார்.


அப்போது, அவர் வாயடைத்துப் போகும் விதத்தில் மருத்துவ அதிகாரி தன் அறிக்கைக்கான காரணத்தை, நீதிபதியிடம் உடற்கூறு நுணுக்கங்களை மிக விளக்கமாக விவரித்து விட்டார். அந்த கொலையாளிக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.அதே போல, ஒரு மருத்துவர் மீது கவனக்குறைவான சிகிச்சையால் மரணத்தை ஏற்படுத்தியதாக வந்த புகார் வழக்கை, நான் விசாரிக்க நேர்ந்தது. அந்த மருத்துவர் செல்வாக்கு மிக்கவர். மருத்துவரின் கவனக்குறைவு பற்றி, தன் பிரேத பரிசோதனை அறிக்கையில் அரசு மருத்துவ அதிகாரி தெளிவாகக் குறிப்பிட்டு விட்டார்.


அதுகுறித்து வினா வடிவில் நான் எழுப்பியிருந்த கேள்விகளுக்கும் விபரமாக அவர் பதில் அளித்தார். அதை நான் என் விசாரணையில் பதிவு செய்யப்பட்ட, அவரது வாக்குமூலத்தில் குறிப்பிட்டு விட்டேன். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, எதிர் தரப்பு வக்கீல், அரசு மருத்துவ அதிகாரியை குறுக்கு விசாரணை செய்ய தான் அதிக நேரம் எடுத்து கொண்டார். பெண் மருத்துவ அதிகாரியான அவருக்கும், எதிர்தரப்பு வக்கீலுக்கும் கடுமையான வாக்குவாதம்.

சமூக நலனில் அக்கறை



இது முற்றிலும் மருத்துவ சிகிச்சை சம்பந்தப்பட்ட வழக்கு என்பதால், பிரேத பரிசோதனை செய்த மருத்துவ அதிகாரியின் சாட்சி மட்டுமே இந்த வழக்குக்கு அடிப்படையாக இருந்தது. இருந்தாலும் மருத்துவ தொழில்நுட்பம் அடிப்படையில் சந்தேகத்தின் பலனை மருத்துவருக்குக் கொடுத்து, குற்றம் சுமத்தப்பட்ட மருத்துவரை, நீதிமன்றம் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது.


ஒரு மருத்துவ அதிகாரி தன் அறிக்கையில் கவனக்குறைவு என்று குறிப்பிட்டு விட்ட பிறகு, என்னால் ஏதும் செய்ய முடியாது; செய்யவும் கூடாது என்பது அவருக்கு மட்டுமல்ல அவர் சார்பாக என்னிடம் பேசிய பலருக்கும், என் உயர் அதிகாரிகள் உட்பட யாருக்கும் புரியவில்லை. நேர்மையான விசாரணை அதிகாரிகள் இது போன்ற நெருக்கடிகளையும், மன வருத்தங்களையும் சந்தித்து தான் தீர வேண்டும்.

ஒரு காவலர் அவரது தந்தையின் துாண்டுதலின் படி, தன் மனைவியைக்கொலை செய்த வழக்கில், நேரடியாகப் பார்த்த சாட்சிகளே இல்லாத சூழ்நிலையில், கொலையுண்ட பெண் அவரது மாமனாருக்கு எழுதிய, 22 கடிதங்கள் விசாரணயின் போது எனக்கு கிடைத்தன.அந்த கடிதங்களின் அடிப்படையிலேயே அமர்வு நீதிமன்றத்தில் எதிரிக்கு மரண தண்டனை வழங்கப் பட்டது. உச்ச நீதிமன்றத்தில் அந்த விசாரணை, நீதிபதிகளால் வெகுவாகப் பாராட்டப்பட்டு, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களிலும், அமர்வு மற்றும் உச்ச நீதிமன்றங்களிலும் காவல் புலன் விசாரணை அதிகாரிக்கு புலன் விசாரணையின்போது ஏற்படும் நடைமுறை சிரமங்கள். மக்களின் பயம் மற்றும் சிரமங்களை ஏற்றுக்கொள்வதில் காட்டும் தயக்கம் காரணமாக அவர்களின் ஒத்துழையாமைப் போக்கு ஆகியவற்றை நீதிபதிகளும், நீதியரசர்களும் நன்கு உணர்ந்து செயல்படுவதால் தான், பல வழக்குகளில் குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கிறது.

விசாரணை அதிகாரி, சாட்சிகள் வழக்கை நடத்தும் அரசு வழக்கறிஞர்,நீதிபதி ஆகியோர், திறமைமிக்கவர்களாகவும், சமூக நலனில் அக்கறை கொண்டவர்களாகவும், பொறுப்போடு நடந்து கொண்டால் மட்டுமே, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்கும். இவர்களில் யாராவது ஒருவர் தவறானவராக இருந்து விட்டால் அல்லது குற்றவாளியின் செல்வாக்குக்கு அடிபணிந்து விட்டால், நீதி அங்கு பலியிடப்பட்டு விடும்.

சமீப காலமாக நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகமாகத் தோல்வியடைந்து வருவது, திறமையின்மை மற்றும் நேர்மையின்மையின் வெளிப்பாடு என்ற வகையில் சாமானிய மக்களுக்கு அச்சத்தையும், குற்றவாளிகளுக்கு துணிவையும் கொடுத்துள்ளது. அதுவும் குற்றங்கள் மலிவதற்கு காரணமாக இருக்கலாம் என்று அஞ்சத் தோன்றுகிறது.

மா.கருணாநிதி


காவல் துறை கண்காணிப்பாளர் (ஓய்வு)

98404 88111

தொடர்புக்கு: இ - மெயில்:spkaruna@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (6)

  • A.Gomathinayagam - chennai,இந்தியா

    பணம் இருந்தால் எதையும் செய்யாலாம் ,என்பது நடைமுறைக்கு வந்த நிலையில் ,குற்றங்கள் குறையுமா ???

  • baala - coimbatore,இந்தியா

    கட்டுரை நன்றாக இருக்கிறது , ஆனால் நடத்தை கேவலமாக இருக்கிறதே, அதிகாரிகளின் லஞ்ச போக்கு, அரசியல்வாதிகளின் அராஜகம், இந்த போக்கு மாறினால் மட்டுமே நீதி நன்றாக இருந்தால் மட்டுமே நாட்டிற்கு வளர்ச்சி, இல்லையேல் கேடுகெட்ட அதிகாரிகளால் கேவல அதிகாரிகளால் நாட்டிற்கு வீழ்ச்சியே.

  • Endrum Indian - Kolkata,இந்தியா

    குற்றம் குறைய லி நிற்க ஒரே வழி தவறு கண்டேன் சுட்டேன் என்ற ஒரே சட்டம் தான். குற்றவாளிகள் இப்படி தண்டிக்கப்பட்டால் தான் குற்றவாளிகள் குற்றம் புரிய மிகவும் தயங்குவார்கள். அப்போது தான் குற்றம் குறையும் மற்றும் நிற்கும் இல்லையேல் இப்படியே தான் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் குற்றங்கள்.

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது, ஆயிரத்தில் ஒரு வார்த்தை. ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், அரசன் எவ்வழி வழி மக்கள். என்று அரசியலில் திருட்டும் புரட்டும் ஆரம்பித்ததோ என்ற நீதி படுக்கையில் விழுந்து விட்டது. தற்போது மூச்சு வாங்க்கிக்கொண்டிருக்கிறது, இறப்பது மட்டும்தான் பாக்கி. மணல் கொள்ளையில் அரசியல், தொழில்களுக்கு அனுமதி அளிப்பதில் அரசியல், தொழில்தொடங்குவதில் அரசியல், ஏன் சாலை போக்குவரத்துக்கு அனுமதியில் கூட அரசியல். மக்கள் என்ன நினைக்கிறார்கள், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் அமைச்சராய் இருந்து சம்பாதித்தார் அல்லவா, அவரிடம் ஓட்டுக்கு பணம் வாங்குவோம் என்று நினைக்கிறார்கள். அரசு மருத்துவர்களின் பிண பரிசோதனையில் கூட அரசியல், வேண்டப்பட்டவர் வண்டப்படாதவர் என்று. பிண பரிசோதனையில் கூட சி சி காமிராக்களும், நீதிமன்றமேற்பார்வையில் மறுத்தருவர்களும் வேண்டி இருக்கிறது. எதில் தான் அரசியல் என்று இல்லை., எதிலும் அரசியல்.இந்த நிலை மாற வேண்டும் இருப்பது முப்பது வருடங்களுக்கு முன் இதை எல்லாம் நாம் கேட்டிருப்போமா? நிச்சயமாக இல்லை. தனி மனித ஒழுக்கத்தையும் கூட அரசியல் கெடுத்திருக்கிறது. அந்த ஒழுக்கத்தை மீட்டு எடுக்க வேண்டும். தொடக்கப்பள்ளிகளில் ஆத்திசூடி, கொன்றை வேந்தன் பாடங்கள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும். நீதிவகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும். இதை நாம் சொல்லலாம், கேட்க யார் இருக்கிறார்கள்?

  • தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா

    போலீஸ் துறை என்று நேர்மையான அமைப்பாக நீதி நடுநிலையோடு செயல்பட்டது? கட்டுரையாளர் தன்னுடைய பனிக்காலத்தில் ஆளுங்கடிசிக்கு ஆதரவாக வழக்கு நீர்த்துப்போகும்படி சார்ஜ் சீட் போட்டதில்லையா? அல்லது வலுவற்ற ஓட்டை வாதங்களை வைத்து கேஸ் தோல்வியடையும் படி பார்த்துக்கொண்டதில்லையா? என்று போலீஸ் அரசியல்கட்ச்சிகளின் அடிவருடியாக ஏவல் விலங்காக மாறியதோ அன்றிலிருந்து பிரச்சினைதான்..பொய்வழக்கு ஜோடனை வழக்கு போடும்போது அவற்றை நீதிமன்றத்தில் தோற்கடிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு ....போலீஸ் குற்றவாளியை கண்டுபிடித்து தரவுகளோடு ஒரு தனிப்பட்ட அமைப்பிடம் தரவேண்டும் . அந்த அமைப்புதான் கேஸ் நடத்தவேண்டும் ..போலீசின் கட்டுப்பாட்டில் சிறைகள் இருக்கக்கூடாது . அது நீதித்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டும் . ஊழல் போய்கேஸ் அரசியல்வாதி தலையீடு அப்போதுதான் குறையும் .......

    • Rajagopalan Srinivasan - CHENNAI,இந்தியா

      அதுமட்டுமா? மேலதிகாரிகளின் வற்புறுத்தல், லஞ்சம் பெற்றுக்கொண்டு "பொய்" வழக்கும் போடுவது உண்டு

Advertisement