dinamalar telegram
Advertisement

ஈரோடு அருகே மதம் மாற்ற முயற்சி: அரசு பள்ளி ஆசிரியை இருவர் சஸ்பெண்ட்

Share
ஈரோடு: மதம் மாற்ற முயற்சி மேற்கொண்ட, அரசு துவக்கப்பள்ளி ஆசிரியை இருவர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஒன்றியம், ஆனந்தம்பாளையம் பஞ்சாயத்து, செல்லாத்தாபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில், உதவி தலைமை ஆசிரியையாக அருள்மணி, 42, ஆசிரியையாக சரண்யா, 37, ஆகியோர் பணிபுரிகின்றனர். இந்நிலையில், ஈரோடு கலெக்டர் கதிரவனிடம், மொடக்குறிச்சியை சேர்ந்த சுந்தர நாராயணன் தலைமையில், பா.ஜ.,வினர் கடந்த, 9ல் மனு கொடுத்தனர். அதில், 'கடந்த, 6ல், ஏழை இந்து மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து, கிறிஸ்தவ மத புத்தகங்கள், சி.டி.,க்கள், பொம்மைகளை இரு ஆசிரியைகளும் வழங்கியுள்ளனர். மேலும், கிறிஸ்தவராக மதம் மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இது தொடர்பாக, எனக்கு வந்த புகார்படி, வட்டார கல்வி அலுவலர் ஆய்வு நடத்தினார். அப்போது, இரு ஆசிரியைகளும் அங்கிருந்து தப்பி சென்றனர். அவர்கள் அறை மற்றும் மேஜையில் இருந்து, கிறிஸ்தவ மத போஸ்டர்கள், புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன. அரசு பள்ளி மாணவ, மாணவிகளை மதம் மாற்றத்தில் ஈடுபடுத்தும் ஆசிரியைகளை, பணியிட மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இதையடுத்து, மாணவ,மாணவிகளின் பெற்றோர், அப்பகுதியை சேர்ந்தவர்கள், வட்டார கல்வி அலுவலர் ஆகியோரிடம், பள்ளி கல்வித்துறையினர் தனித்தனியே விசாரணை நடத்தினர். இறுதியில் உதவி தலைமை ஆசிரியை அருள்மணி, ஆசிரியை சரண்யா ஆகியோர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை, ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் மாதேசன் உறுதி செய்தார். இருவர் மீதும், துறை ரீதியான விசாரணை விரைவில் நடைபெறும் என, பள்ளி கல்வி துறையினர் தெரிவித்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement