Load Image
Advertisement

விவசாயம் செழிக்க மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டியது என்ன?

 விவசாயம் செழிக்க மத்திய, மாநில அரசுகள் செய்ய வேண்டியது என்ன?
ADVERTISEMENT
இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, இதுவரை எந்த மத்திய அரசும் விவசாய சீர்திருத்த சட்டங்களை கொண்டுவர முன்வரவில்லை. தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்கிறோம் என்கிற, ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி ஓட்டுகளை பெறுவதற்கு மட்டுமே, விவசாயிகளை பயன்படுத்தி வந்தன. தற்போது வேளாண் சீர்திருத்த சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்து, விவசாயிகளே, தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு, நேரடியாக பயனடையும் வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.


இந்த விவசாய சட்டத்தின்படி, ஒரு விவசாயி தன் விளைபொருட்களை, எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்பனை செய்யலாம். இடைத்தரகர்கள் இல்லாமல் நாடு முழுவதும் எடுத்துச்சென்று, தான் விளைவித்த விளைபொருட்களுக்கு தானே விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்யலாம். 'அரசியல்' செய்து, கமிஷன் பெற்றுவந்த மண்டி வர்த்தகர்கள் தான், இதனால் பாதிக்கப்படுவர் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.மத்திய அரசின் வேளாண் சட்டம், விவசாயிகளுக்கு உண்மையான பலனை அளிக்கிறதா என்று, அரசியல் சார்பு இல்லாமல் ஒரு விவசாயியாக கருத்து தெரிவிக்க விரும்புகிறேன்.

தனி பட்ஜெட்



விவசாய சீர்திருத்த சட்டங்களை அமல்படுத்தியுள்ள மத்திய அரசு, இதே போன்று விவசாய நல சட்டங்களை இயற்றுவதோடு மட்டுமல்லாமல், விவசாயத்தை காப்பதற்காக ஒரு தனி பட்ஜெட் அறிமுகப்படுத்த வேண்டும்.

ஆதார விலை நிர்ணயம்



மத்திய -- மாநில அரசுகள், விவசாய பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்கும்போது அந்தக் குழுக்களில், விவசாய பிரதிநிதிகள் மாநில வாரியாக பங்கு பெற வேண்டும். கரும்பு, நெல், கோதுமை எதுவானாலும், உற்பத்தி செய்வதற்கு தரமான விதைகளை அரசே, விவசாய ஆராய்ச்சி கழகம் வாயிலாக தேர்ந்தெடுத்து, சான்றிதழுடன் வழங்க வேண்டும். நிலம் உழவு செய்வது முதல் விவசாய பணியாளர் கூலி, நீர் நிர்வாகம், உரம் பூச்சிமருந்து களை எடுத்தல் உள்ளிட்ட அனைத்து விவசாயப் பணிகளுக்கும், உற்பத்தி செலவை சரியாக கணக்கிட வேண்டும். பாடுபட்ட விவசாயிகளுக்கு கட்டுப்படியான ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். தன்னிச்சையாக அதிகாரிகளை வைத்து முடிவெடுக்கக்கூடாது. விவசாய பிரதிநிதிகளுடன் கலந்து முடிவு எடுக்கவேண்டும்.

Latest Tamil News

குளிர்பதன கிடங்கு



காய்கறிகள், பழங்கள் போன்றவை நல்ல சீதோஷ்ண நிலையில், அதிகமாக விளைச்சல் தருகின்றன. அதை விவசாயிகளே இருப்பு வைத்து, நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கு, அரசு குளிர்பதன கிடங்குகள், நாடு முழுவதும் நிறுவ வேண்டும். விவசாய அடையாள அட்டை வழங்கி, குளிர்பதனக் கிடங்கில் விவசாயிகளுக்கு மட்டுமே, 100 சதவீத முன்னுரிமை வழங்க வேண்டும். குளிர்பதனக் கிடங்கில் வைக்கப்பட்டுள்ள பொருட்களின் மீது, அரசு வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில், அதனுடைய விலை மதிப்பில், 50 சதவீதத்துக்கு கடனாக வழங்கினால், விவசாயி தன்னுடைய விளைபொருளை நல்ல விலை வரும்போது விற்பனை செய்வார். கடன் பெற்ற தொகையில், உடனடியாக மாற்று விவசாயத்தையும் செய்ய முடியும்.

அடையாளம் அவசியம்



விவசாயிகளிடம் கொள்முதல் செய்பவர்கள், யார் என்பதை அடையாளம் காட்டவேண்டும். பழைய மண்டி வர்த்தகர்களை போல, புதிய கார்ப்பரேட் மண்டி வர்த்தகர்கள் உருவாகி விடுவார்களோ என்ற அச்சத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும். உதாரணத்துக்கு, அம்பானி, அதானி போன்ற பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் கோடிக்கணக்கில் முதலீடு செய்து கொள்முதல் செய்யும்போது, அவர்கள் அதிக லாபம் பெற குறைந்த விலைக்குத்தான் விளை பொருட்களை வாங்குவர். இதற்கு மத்திய, மாநில அரசுகள், விவசாய உற்பத்தி பொருட்களுக்கு ஆதார விலை நிர்ணயம் செய்து, உறுதிமொழி தர வேண்டும்.

ஏற்றுமதி வாய்ப்பு



அதிகமான விளைச்சல் வரும் காலகட்டத்தில் விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, அரசே ஒரு ஏற்றுமதி நிறுவனத்தை தொடங்க வேண்டும். அதில் விவசாயிகளை ஒருங்கிணைத்து, விளைபொருட்கள் விற்று நல்ல லாபம் வரும்போது, விவசாயிகளுக்கும் அந்த விலை ஏற்றத்தின் பயனை அடைய வழிவகை செய்ய வேண்டும்.வறட்சிக் காலங்களில் ஏற்றுமதியை முற்றிலுமாக தவிர்க்காமல், தேவையான அளவுக்கு ஊக்குவிக்க வேண்டும். விவசாய பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிகாட்டும் முறையில் அரசே விவசாயிகளுடன் தொடர்பில் இருந்து ஏற்றுமதிக்கு உதவ வேண்டும். விவசாய பணிகளுக்கு வங்கிகள் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்க வேண்டும். ஒரு சீசனில் வாழைக் காய்க்கு நல்ல விலை கிடைக்கிறது. அதை அறிந்து, அனைத்து விவசாயிகளும் வாழையை முழுவதும் பயிரிட்டு விடுகின்றனர். அபரிமிதமான விளைச்சல் வரும்போது, அந்த வாழைப்பழங்கள் வீணாகின்றன. மாம்பழங்களும், அதுபோலத்தான். இவை அனைத்தும் அதிக விளைச்சல் வரும் என்று தெரிந்த உடனே, அரசு ஏற்றுமதிக்கு வழிவகை செய்து, விவசாயிகள் பயன்பெறும்படி செய்ய வேண்டும்.

தட்டுப்பாடற்ற உரம்



நமது விவசாய பொருட்களூக்கு, எந்த நாட்டில் நல்ல விலை கிடைக்கிறதோ, அதை கண்டறிந்து அந்த விவசாய பொருளை உற்பத்தி செய்ய, ஆலோசனை வழங்கி ஊக்குவிக்க வேண்டும். அதற்கு நல்ல விதைகள், இயற்கை பராமரிப்பு முறைகள், உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க, அரசு வழிவகை செய்ய வேண்டும்.

100 நாள் விவசாய பணி



மத்திய அரசின் ஊரக வேலைவாய்ப்பு 100 நாள் திட்டத்தால், விவசாய பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காத நிலை உள்ளது. நெல் அறுவடை காலகட்டத்தில், ஆட்கள் கிடைப்பதில்லை. என்னதான், நவீன இயந்திரங்கள் வந்தாலும் ஆட்கள் பற்றாக்குறை நீடித்து வருகிறது. ரோட்டிலும், புறம்போக்கு இடத்திலும், 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி ஒதுக்கப்படுகிறது. அதனால், நாட்டுக்கும் எந்த பொருளாதார வளர்ச்சியும் இல்லை. இதை தவிர்த்து விவசாய பணிகளுக்கு அவர்களை திருப்பி விட வேண்டும். தொழிலாளர்களுக்கு மத்திய அரசு வழங்கும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், தொழிலாளிக்கு சேர வேண்டிய கூலியை அரசும், சம்பந்தப்பட்ட விவசாயியும் சமமாக பங்கிட்டு வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

மானியத்துக்கு மாற்று திட்டம்



மத்திய, மாநில அரசுகளில், தனியார் நிறுவனங்களில் பணி செய்பவர்களுக்கு, ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு கிடைக்கிறது; போனஸ் கிடைக்கிறது. எந்தப் பலனையும் பாராத ஒரே தொழில் விவசாயம் தான். இந்த இலவச மின்சாரம், மானிய உரங்கள் தான் விவசாயிக்கு போனசாக கருதப்படுகின்றன. விவசாயத்துக்கு மின் கட்டணம் செலுத்த விவசாயி தயார்; மானியம் இல்லாத உரத்தை விவசாயி பெற்றுக் கொள்ளவும் தயார். ஆனால், நெல் குவின்டால் 2,000 ரூபாய் என்று இருந்தால், இந்த இலவசத்தை எல்லாம் தவிர்த்தால், அது குவின்டால் 4,000 ரூபாய் ஆக மாறும். இவற்றை உற்பத்தி செலவில், ஆதார விலையில் நிர்ணயம் செய்து கொடுத்தால், விவசாயிகளுக்கு மானியங்கள் தேவையில்லை.ஒரு செருப்பு தயாரிக்கும் நிறுவனம், செருப்பு விலையை நிர்ணயம் செய்கிறது. மதுபானங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தினர், அதற்கான விலையை அவர்களே நிர்ணயம் செய்கின்றனர். உற்பத்தி செலவுபோக, 50 சதவீதத்துக்கு மேல் லாபம் அடைகின்றனர். உற்பத்தி செலவுக்குமேல், 25 சதவீதம் நீங்கள் விவசாயிகளுக்கு லாபம் கொடுத்தால் கூட, வேளாண் பணிகளை தயக்கமின்றி செய்வர்.

தற்கொலைக்கு தீர்வு



விவசாயிகள் ஏன் அல்லல்படுகின்றனர்; துாக்கிட்டு சாகின்றனர் என்பதை உளவியல் ரீதியாக கண்டறிவது அவசியம். விவசாயிகளின் கஷ்ட, நஷ்டங்களை அரசுகள் செவிசாய்த்து கேட்டு, அதற்கு தீர்வு காண வேண்டும். விவசாய பயிர் பாதுகாப்பு திட்ட காப்பீடு வழிமுறைகளை, விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதும் இன்றைய காலகட்டத்தில் மிக அவசியம். அது அவர்கள் தற்கொலை செய்வதில் இருந்து, மீண்டு வருவதற்கான தீர்வாக அமையும்.விவசாய சீர்திருத்த சட்டங்களை மட்டும் அமல்படுத்தினால் போதாது; அந்த விவசாயத்தை ஒரு தொழிலாக அங்கீகாரம் செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்பதே எங்களைப் போன்ற விவசாயிகளின் ஒட்டுமொத்த கருத்து; இதைச் செய்யுமா மத்திய, மாநில அரசுகள்?

- டி.ராஜ்குமார் -

விவசாயி

98430 23141



வாசகர் கருத்து (6)

  • Rengaraj - Madurai,இந்தியா

    விவசாயம் மாநில அரசின் பட்டியலில் உள்ளது என்று எல்லா அரசியல்வாதிகளும் சொல்லிக்கொண்டுதான் இருந்தார்கள், இருக்கிறார்கள். அந்த அந்த மாநில அரசுகள் இதுநாள் வரைக்கும் அதிக கடன், குறைந்த வட்டி, தள்ளுபடி, மானியம், காப்பீடு என்று ஒரு வட்டத்தில் மட்டுமே விவசாயிகளை வைத்திருந்தார்கள். இதுநாள்வரை,அவர்களை இடைத்தரகர்களிடம் இருந்து பாதுகாக்க ஏன் ஒரு தனி சட்டம் இயற்றவில்லை? இதே போன்று நெசவாளர்களுக்கு பிரச்சினை உள்ளது. உள்ளூர் சந்தைகளில் வியாபாரம் செய்யமுடியாத அளவுக்கு நிறைய குறு வியாபாரிகள் இருக்கிறார்கள். எத்தனையோ சுயஉதவி குழுக்கள் தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நல்ல முறையில் விற்பதற்கு போதுமான கட்டமைப்பு தரப்படவில்லை. அதை யாரும் பேசுவதில்லை. கூட்டுறவு சங்கங்கள் அரசியல் தலையீடு இன்றி நடக்கிறதா? தனியார் பத்துபேர் ஒன்று சேர்ந்து கூட்டுறவு சங்கம் அமைத்து அரசாங்கத்தின் டெண்டரை பெற்றுவிடுகிறார்கள். அவை எல்லாம் மாநிலங்களின் அதிகாரத்தின் கீழ்த்தானே வருகின்றன? ஏன் அவற்றை நெறிமுறைப்படுத்தவில்லை? விவசாயிக்காக வரிந்துகட்டிக்கொண்டு போராட்டம் செய்பவர்கள் நெசவாளர்கள், உள்ளூர் சந்தை பாதுகாப்பு, சிறு குறு வியாபாரிகள் நலன், என்றெல்லாம் ஏன் யோசிக்கவில்லை? அவர்களும் இன்று நிறையவிதத்தில் பாதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இடைத்தரகர்கள் கமிஷன் ஏஜெண்டுகள் என்ற போர்வையில் அரசியல்வாதிகளின் ஆதரவோடு சந்தைகளில் கல்லா கட்டுவதை யாரவது பேசியிருக்கிறார்களா? அவர்களை தடுக்கத்தான் முடிகிறதா? வாரச்சந்தை கூடும் இடங்களில் நடைபாதை வியாபாரிகளிடம் வசூல் செய்யாத தாதாக்கள் பற்றி யாருமே வாய்திறக்கவில்லை. விவசாயிகள் போன்று அவர்களும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு நிற்பவர்கள்தானே? அவரவர் தங்கள் ஊரில் கொஞ்சமாக வியாபாரம் பார்த்தாலும் நிம்மதியாக பார்க்கலாம். உள்ளூரிலேயே பெரிய வியாபாரிகள் சிறு வியாபாரிகளை நசுக்கி விடுகிறார்கள். நிம்மதியாக வியாபாரம் செய்ய விடுவதில்லை. இந்த மாதிரி சட்டம் இயற்றி மத்திய அரசு தலையிட வேண்டியிருக்கிறது.

  • Kadambur Srinivasan - Chennai,இந்தியா

    அருமையான கருத்துக்கள், அதே போல் சிறு விவசாயி யார் குறு விவசாயி யார் அவர்களுக்கு உரிய திட்டம் என்ன என்பது தெளிவு படுத்த வேண்டும் மேலும் பெரும் வியாபாரிகள் அனைவரும் வருமான வரிக்கு உட்படுத்த வேண்டும்

  • RajanRajan - kerala,இந்தியா

    முறைபடுத்திய பனைமர கள் இறக்க அனுமதித்தாலே பாதி விவசாயி பிரச்சினை தீர்ந்து விடும்.

  • RajanRajan - kerala,இந்தியா

    விவசாயி வியாபாரியாகவும் மாறும் வகையில் சட்டதிட்டங்களை அமையுங்கள். விவசாயி அடையாளம் காணும் வகையில் கார்ட் விநியோகம் விரைவு படுத்துங்கள். பினாமிகளை ஒழியுங்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement