LOGIN
dinamalar telegram
Advertisement

ஆடை உற்பத்தி நிறுவனங்கள் நன்மதிப்பு! ஆர்டர்கள் தேடிவரும்

Share
Tamil News
திருப்பூர்:ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தங்கள் குறைகளை சரிசெய்து கொள்ளவேண்டும்; வர்த்தகர் மத்தியில் நன்மதிப்பு உயர்ந்தால், ஆர்டர்கள் தேடிவரும் என்கிறார், ஏற்றுமதியாளர் சங்க தலைவர்.
திருப்பூரில் உள்ள ஆடை ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, அமெரிக்கா, ஐரோப்பா உட்பட பல்வேறு நாடுகளிலிருந்து, ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் வரத்துவங்கியுள்ளன. கொரோனா பாதிப்புகளிலிருந்து, நிறுவனங்கள் படிப்படியாக மீண்டெழுந்து வருகின்றன.வைரஸ் பரவல், உலகளாவிய வர்த்தகர் மத்தியில், சீனா மீது எதிர்மறை எண்ணங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சீனாவுக்கு மட்டுமே ஆடை தயாரிப்பு ஆர்டர் வழங்கிய வர்த்தகர்கள், தற்போது, இந்தியா, வங்கதேசம், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகளவு ஆர்டர் வழங்க ஆர்வம் காட்டுகின்றனர்.
இதுகுறித்து, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களில் குளிர் கால ஆடை தயாரிப்பு நடக்கிறது. வசந்தம், கோடை கால ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள் புக்கிங் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நிறுவனமும், தங்கள் குறைகளை ஆராய்ந்து சரி செய்து கொள்ள வேண்டும்.ஒரே சீரான தரத்தில், குறித்த காலத்துக்குள் ஆடை தயாரிப்பது மிக முக்கியம்.
அதிக எண்ணிக்கையில் ஆடைகள் தயாரித்து, வர்த்தகர் கேட்பதை விட குறைந்த எண்ணிக்கையில் அனுப்பும் நிலை முற்றிலும் மாற வேண்டும். இதனால், நிறுவனங்களின் உற்பத்தி செலவினம், நேரம் வீணடிக்கப்படுகிறது. வர்த்தகர் மத்தியில் நிறுவனத்தின் மதிப்பும் குறைகிறது.பிழைகள் இன்றி, சரியான எண்ணிக்கையில் ஆடை தயாரிக்க வேண்டும். உற்பத்தியில் ஏற்படும் தாமதங்கள், செலவினத்தை அதிகரிக்கச் செய்யும். நிறுவனங்கள், எல்லா வகையிலும் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். வர்த்தகர் மத்தியில் நன்மதிப்பு உயர்வதன் மூலம், அதிகளவு ஆர்டர்களை கைப்பற்ற முடியும்.சாதாரண ஆடை தயாரிப்பில் போட்டி அதிகரித்துள்ளது; அதனால், அவற்றின் விலையும் குறைக்கப்படுகிறது.
ஒவ்வொரு நிறுவனமும் மதிப்பு கூட்டப்பட்ட ஆடை தயாரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆர்டர் குறைவாக உள்ளது என்பதற்காக, லாபத்தை வர்த்தகருக்கு விட்டுக்கொடுத்து ஆர்டர் பெற நினைப்பது தவறு.இது, குறிப்பிட்ட நிறுவன வளர்ச்சியை மட்டு மின்றி, ஒட்டுமொத்த தொழில்துறையையும் பாதிக்க செய்துவிடும். சாதகமான சூழல் உருவாகியுள்ளதால், எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement