LOGIN
dinamalar telegram
Advertisement

ஈ.வெ.ரா.,வின் பிராமண எதிர்ப்பு ஏன்?

Share
Tamil News
தமிழகத்தின், ஏழரை கோடி தமிழர்களில் வன்னியர், முக்குலத்தோர், தாழ்த்தப்பட்டோர், நகரத்தார், பிள்ளைமார், கவுண்டர்கள், நாடார்கள், முதலியார்கள் போன்றோர் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

வன்னியர் என்று பொதுவான பெயர் இருந்தாலும், படையாச்சியார், நாயக்கர்கள் மற்றும் சில உட்பிரிவுகள், அந்த ஜாதியில் இருக்கின்றன. அதேபோல, பெரிய ஜாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் அனைத்து ஜாதியிலும் சில பல உள் பிரிவுகள், ஜாதிகள் உண்டு. நகரத்தார் என்றாலும், அவர்களிலும் உள் ஜாதிகள் உண்டு. இவர்கள் அனைவரும் தமிழ் நாட்டினர் தான்.

ஆனால், அனைவராலும், உயர் ஜாதிக்காரர்கள் என்று சொல்லப்படும் பிராமணர்கள், இந்த ஏழரை கோடி தமிழ் மக்களில், 3 அல்லது, 4 சதவீதம் பேர் தான் வாழ்கின்றனர். அதாவது, பிராமணர்கள், தமிழகத்தில், 30 லட்சம் பேர் இருப்பர் என்றே வைத்துக் கொள்ளலாம். இவர்கள், சில பெரிய ஜாதிக்காரர்களைப் போல, ஒரே இடத்தில் வாழ்வதில்லை.

வன்னியர்கள், வட மாவட்டங்களில் அதிகம் இருப்பது போல அல்லது கோவை மாவட்டத்தில் கவுண்டர்கள் அதிகம் என்பது போல அல்லது தென் மாவட்டங்களில் தேவர் சமுதாயம் அதிகமாக இருப்பது போல, பிராமணர்கள், ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் அதிகமாக இருப்பதில்லை.

எனினும், சென்னையில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மாம்பலம், நங்கநல்லுார் போன்ற இடங்களிலும், இன்னும் தெற்கே போனால், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் போன்ற ஊர்களிலும், அதைச் சுற்றியுள்ள சில சிற்றுார்களிலும், அதிக எண்ணிக்கையில் பிராமணர்களை பார்க்கலாம்.

அக்ரஹாரங்கள்அதுபோல, தஞ்சாவூர், திருச்சியிலிருந்து ஸ்ரீரங்கம் போன்ற இடங்களிலும், இன்னும் தெற்கே மதுரை, ஸ்ரீவில்லிபுத்துார் வரையிலும் பிராமணர்கள் வாழ்கின்றனர். பல ஊர்களில் அக்ரஹாரங்கள் இருந்தால், அங்கேயும் அவர்களை பார்க்கலாம்.இவர்கள் ஏன் உயர் ஜாதி எனும் பெயர் பெற்றனர் என்றால், இவர்கள் வேதம் ஓதியவர்கள். தமிழோடு, வட மொழியான சமஸ்கிருதம் கற்றவர்கள். மாமிசம் உண்ணாதவர்கள், காலையும், மாலையும் சூரியனை வணங்குபவர்கள். முப்புரி நுால் எனும் பூணுால் தரித்தவர்கள்.

சிவனையும், விஷ்ணுவையும் கும்பிடுபவர்கள்; ஆசாரமாய் விளங்குபவர்கள்.பிறர் வீட்டில் சாப்பிட மாட்டார்கள். இவர்களைப் பற்றி, ஆக்ஸ்போர்டு அகாரதியிலும், 'கூகுள்' இணையதளத்திலும் இவர்களின் குணாதிசயங்களை தெரிந்து கொள்ளலாம்.சுமார், 5,000 ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. மேலும், கபிலர், தொல்காப்பியர் போன்றவர்கள், பிராமணர்கள் என்றே வரலாறு கூறுகிறது.

சங்க காலங்களில் பல பிராமணர்கள் புலவர்களாக இருந்ததும் வரலாற்று உண்மையே. நல்லவை எது, கெட்டவை எது என்பது தெரிந்ததால், பல மன்னர்கள், பிராமணர்களை தங்கள் குருவாக ஏற்றிருந்தனர். அவர்கள், பிராமணர்கள் தனியே வாழ, தனி தெருக்களை அமைத்து, இல்லங்களையும் கட்டிக் கொடுத்தனர்.

வான சாஸ்திரம்கோவில்கள் பல கட்டி, இறைவனுக்கு பூஜை செய்ய, பிராமணர்களையே நியமித்தனர். வானவியல் தெரிந்தவர்களை நிமித்தகர்களாக (ஜோசியம்) நியமித்தனர். இப்படி கற்றவர்களாக இருந்ததால், மதுரையை எரித்த கண்ணகி, பசு, பெண்டிர், அறவோர், அந்தணர்களைத் தவிர்த்து, மற்ற இடங்களை எரிக்கச் செய்தாள். ஆழ்வார்களிலும், நாயன்மார்களிலும் பிராமணர்கள் உண்டு.

கோவில்களில் அர்ச்சகர்கள், குருக்கள், தீட்சிதர்கள், பட்டாச்சாரியார்கள் என்ற பெயரோடு, சிவா - விஷ்ணு கோவில்களில் தொண்டு செய்தனர். வான சாஸ்திரம் கண்டுபிடித்த ஆரியபட்டர் பிராமணர். அவரின் கலையைக் கற்று, ஜோதிடம் பார்த்தனர். சுக்ருதர் என்ற முனிவர் பிராமணர். இவரின் கலையை கற்று, நாட்டு மருத்துவம் அறிந்தனர். அதே போல, வராஹ மிஹிரரும் பிராமணர் தான். அவரும் ஜோதிடத்தில் வல்லுனர்.

விஷ்ணு குப்தர் என்று அறியப்பட்ட சாணக்கியர், இயேசு கிறிஸ்து பிறக்கும் முன்பே தோன்றிய பிராமணர். அவர் அரசியலிலும், பொருளாதாரத்திலும் வல்லுனர். அவர் மூலமாக பொருளாதாரத்தையும், அரசியலையும் அறிந்தனர். இப்படி தமிழருக்கு வேண்டிய எல்லாவற்றையும் கற்று, மக்கள் தொகையில் குறைவாக இருந்தாலும், அனைத்திலும் முதலாக நின்றனர்; பெருமை அடைந்தனர்.

காலம் மாறிற்று; பிரிட்டிஷ் அரசு அமைந்தது. பிரிட்டிஷ் அரசை, 'மிலேச்சர்' என்றனர். நம் மொழிகள், பண்பாடு, கலாசாரம் எதையுமே தெரியாமல் நம்மை ஆண்டனர். மெக்காலே என்ற ஆங்கிலேயே அதிகாரி, அவர்களுடைய மொழியான ஆங்கிலத்தை நம்மிடம் திணித்தார்; கல்வி முறையே மாறிற்று. இருப்பினும், அவர்களோடு உரையாட, பிராமணர்கள் ஆங்கிலம் கற்றனர். நாளடைவில், எட்டாவது படித்தவர்கள் கூட கொச்சை ஆங்கிலம் பேசினர். மெட்ரிகுலேஷன் எனும், பள்ளிப்படிப்பு முடிவு வரை படித்தவர்கள், அரசில் வேலை பார்த்தனர்.

எட்டாவது படித்த பிராமணர் கூட, தாலுகா ஆபீசில் வேலை பார்த்தார். ஆனாலும் கூட, காந்தி மகான் சொன்னார் என்பதற்காக, வெள்ளையர்களை, பிராமணர்கள் எதிர்க்கவும் ஆரம்பித்தனர். நம்மவர்களை, நம்மவரே ஆள வேண்டும் என்று பல பிராமணர்கள், விடுதலை வேள்வியில் குதித்தனர். சுப்பிரமணிய பாரதியார், வாஞ்சி நாதன், சுப்ரமணிய சிவா, வ.வே.சு., ஐயர், நீலகண்ட பிரம்மச்சாரி, ராஜாஜி, மதுரை வைத்யநாத அய்யர், கஸ்துாரி அய்யங்கார், சத்தியமூர்த்தி, விஜய ராகவாச்சாரியார் போன்றோர், வெள்ளையரை எதிர்த்துப் போராடிய பிராமணர்களில் சிலர்.

இதே நேரத்தில், வெள்ளையரை விட அற்புதமாக, அவர்கள் மொழியைப் பேசிய செந்நாப் புலவர் சீனுவாச சாஸ்திரியாரும் விளங்கினார். தமிழுக்குப் பாடுபட்ட, உ.வே.சாமிநாதய்யரும் அந்தக் காலத்தியவர் தான். இப்படி பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே, ஏன், 3,000 ஆண்டுகளுக்கு முன்பே, தமிழகத்தில் பிராமணர்கள் வாழ்ந்துள்ளனர். அறிவியல், ஜோதிடம், இசை, நாட்டியம் போன்ற கலைகளை வளர்த்தனர்.

ஏன் எதிர்க்க வேண்டும்இவ்வளவு பெருமைகள் இருந்தும், ஒரே ஒருவரால் தான், பிராமணர்களின் வாழ்வை சிதறடிக்க முடிந்தது. அவர் தான், ஈரோட்டில் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து, பெரும் வணிகராகவும் இருந்து, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து போராடிய, ஈ.வெ.ரா., அவரால் தான், பிராமண சமுதாயம், தமிழகத்தில் இன்று, மற்ற ஜாதியினரைப் போல வாழ முடியாததற்கு காரணம்.

ஈ.வெ.ராமசாமி நாயக்கர், பிராமணர்களை ஏன் எதிர்க்க வேண்டும் என பார்ப்போம்.பெரிய செல்வந்தர். பணத்திற்கு குறைவில்லாமல் இருந்தும் அவர் ஆரம்பக் கல்வியான, ஐந்தாம் வகுப்பைத் தாண்டவில்லை. அவருக்கு படிப்பு ஏறவில்லை. குறைவற்ற செல்வம் இருந்தாலும், பெற்றோர் படிக்கச் சொன்னதால், அவர் கேட்கவில்லை.

நட்பு பாராட்டியதில்லைஅவரின் வகுப்புத் தோழர் ஒருவர், 60 வருடங்களுக்கு முன், எங்கள் குடும்ப நண்பர்; முதலியார் வகுப்பைச் சேர்ந்தவர். அவர் பல விஷயங்களை என்னிடம் சொல்லியிருக்கிறார்; அவற்றை நான் எழுத முடியாது. ஆனால், ஆரம்பக் கல்வி கூட இல்லாத அவர், தன் இளம் வயதில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, ஈரோடு நகர சபை தலைவராகக் கூட இருந்திருக்கிறார். அப்போது அவரின் நெருங்கிய நண்பராக விளங்கியவர், சேலம் நகர சபைத் தலைவராக இருந்த ராஜாஜி. காங்கிரஸ் கட்சியில், தீவிரமாக ஈ.வெ.ரா., இருந்ததால், அக்கட்சி நடத்திய வட மாநில மாநாட்டிற்கெல்லாம் செல்வார்.

பல வட மாநில பெருந் தலைவர்களை, ஈ.வெ.ரா., அறிந்திருந்தாலும் அவர்கள், ஈ.வெ.ரா.,வோடு நட்பு பாராட்டியதில்லை. அதற்கு தடையாக இருந்த விஷயம், மொழி. அவர்களுக்கு தமிழ் தெரியாது. ஈ.வெ.ரா.,வுக்கோ ஹிந்தி, ஆங்கிலம் இரண்டுமே தெரியாது. அந்தத் தலைவர்கள் ராஜாஜி, சத்தியமூர்த்தி, சேலம் விஜயராகவாச்சாரி போன்றோர்களிடம் தான் பேசுவார். அப்போது ஏற்பட்டது தான், ஈ.வெ.ரா.,வின் பிராமண எதிர்ப்பு.

'பிராமணர்களைத் தான் காங்கிரஸ் கட்சி மதிக்கிறது' என்று தமிழகத்தில் பிரசாரம் செய்ய ஆரம்பித்தார்.அது மட்டுமல்ல, '2 சதவீதம் உள்ள பிராமணர்களே ஆசிரியர்களாகவும், ரயில்வே, தபால், தந்தி அலுவல்களிலும் வேலை செய்கின்றனர். பிராமணர் அல்லாதவர்களுக்கு அரசு வேலையே இல்லை' என்று விஷமப் பிரசாரம் செய்தார். இது, பிராமணர் அல்லாதவர்களிடையே வேகமாகப் பரவியது. அப்போது தோன்றியது தான், நீதிக் கட்சி.

அவர் ஆரம்பித்த நீதிக் கட்சியில், பிராமணர்களுக்கு எதிரான கொள்கை காரணமாக, சர் பி.டி.ராஜன், டி.எம்.நாயர், பனகல் அரசர், பிட்டி தியாகராயர் போன்ற, பிராமணர் அல்லாத பெரும் செல்வந்தர்கள், ஈ.வெ.ரா., பின் அணிவகுத்தனர். நாளடைவில் நீதிக் கட்சி சிதறி, ஈ.வெ.ரா., மட்டுமே தலைமை தாங்கிய திராவிடர் கழகம் உருவாயிற்று. காஞ்சிபுரம் அண்ணாதுரை போன்ற, பெரிய படிப்பு படித்தவர்கள், பிராமண எதிர்ப்புக்காகவே, திராவிடர் கழகத்தில் இணைந்தனர்.

ஈ.வெ.ரா.,வின் பிராமண எதிர்ப்பு என்பது, பிராமணர் அல்லாதோரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஈ.வெ.ரா.,வின் கடவுள் எதிர்ப்புக் கொள்கையை எதிர்த்தவர்கள் கூட, அவரின் பிராமண எதிர்ப்பில் ஒன்றுபட்டனர். அது, இன்றும் தொடர்வது தான் பெரும் சோகம். பிராமணர்களின் கடவுள் பக்தியை விட, பிராமணர் அல்லாதோரின் கடவுள் பக்தி பிரமிப்பூட்டுவதாகும். தீமிதி, அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்றவை பிராமணர்களிடம் இல்லை. அதனாலேயே பிராமணத் துவேஷத்தை, ஆத்திகர்களிடையே நஞ்சாய் பரப்பியவர், ஈ.வெ.ரா., தான்.

கடவுள் பக்தி அதிகம் உடைய பிராமணரல்லாதோர் வேலை வாய்ப்புகளிலும், கல்வி கற்பதிலும் பின் தங்கி இருந்ததால், பிராமணத் துவேஷம் தீவிரமானது. அதனால் ஏற்பட்டது தான் இட ஒதுக்கீடு.

எழுதாத சட்டமாகி விட்டதுகாந்தியடிகளால், 'ஹரிஜனங்கள்' என்றழைக்கப்பட்ட இன்றைய தலித்துகளின் முன்னேற்றத்திற்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் ஏற்கப்பட்ட இட ஒதுக்கீடு கொள்கையை, நம் அரசியல்வாதிகளின் சுய நலத்திற்காக, அவரவர் ஜாதிகளின் முன்னேற்றம் கருதி, சட்டம் இயற்றிக் கொண்டனர்.ஒரு முதல்வர், வாய் மொழியாகவே, 'பிராமணர்களுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஒதுக்கீடே இருக்கக் கூடாது' என, உத்தரவிட்டார். அது இன்றளவும் எழுதாத சட்டமாகி விட்டது.

இதற்காக தமிழக பிராமணர்கள் போராடவில்லை. பெரிய மதிப்பெண்கள் பெற்று, பெரும் படிப்பை கஷ்டப்பட்டு படித்தனர்; இப்போதும் படித்துக் கொண்டு இருக்கின்றனர்.தமிழகத்தில், பிராமணர்களுக்கு படிப்பிலும், வேலையிலும் இடமே இல்லை என்றாலும் கவலைப்பட மாட்டார்கள். இவர்களால் கொடுக்க முடியாததை, வேறு மாநிலங்களும், அன்னிய தேசங்களும் கொடுக்கும்.அதனால் தான், பிராமணர்களில் சுந்தர் பிச்சையும், சத்யா நாதெள்ளாவும், கமலா ஹாரிசும், ராமன் ராமச்சந்திரனும் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர்!

பா.சி.ராமச்சந்திரன்
மூத்த பத்திரிகையாளர்

தொடர்புக்கு:இ - -மெயில்:bsr_43@yahoo.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement