Advertisement

கிராம ஊராட்சிகளில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு கிடுக்கிப்பிடி!

Share
திருப்பூர்:கிராம ஊராட்சிகளில் இயங்கும் தொழிற்சாலைகள், ஏழு நாளுக்குள் கட்டணம் செலுத்தி, உரிமம் புதுப்பிப்பு செய்து கொள்ள வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.ஊராட்சிகளுக்கு சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி உள்ளிட்ட இனங்கள் மட்டுமே, முக்கிய வருவாய் இனமாக உள்ளன.
வருவாய் ஆதாரத்தை பெருக்க, கிராமங்களில் இயங்கும் நிறுவனங்களிடம், ஒருமுறை நிறுவன கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்நிறுவனங்கள், ஆண்டுதோறும், உரிமக்கட்டணம் செலுத்தி, உரிமம் புதுப்பிப்பு செய்து கொள்ள வேண்டும் என்பது அரசாணை; இதுதொடர்பாக, ஐகோர்ட் வழிகாட்டியுள்ளது.ஆனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி நிர்வாகங்கள், உரிமம் கட்டணம் வசூலிப்பதில்லை. புற்றீசல் போல நிறுவனங்கள் உருவாகிய பின்பும் கூட, உரிம புதுப்பிப்பு கட்டணம் வசூலிக்கப்படாததால், பல ஊராட்சிகள், வறுமைநிலையில் உள்ளன. இந்நிலையில், நிறுவனங்களிடம் இருந்து உரிமம் புதுப்பிப்பு கட்டணம் வசூலிக்க, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தில், அனுமதியின்றி இயங்கிய, 126 நிறுவனங்களுக்கு, உரிமம்கட்டணம் செலுத்தக்கோரி, 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. 'நோட்டீஸ் கிடைத்த ஏழு நாட்களுக்குள், உரிமம் புதுப்பிப்புக்கு விண்ணப்பிக்காவிட்டால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது.ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது;கிராம ஊராட்சி பகுதியில் இயங்கும் நிறுவனங்கள் உரிமம் பெற வேண்டும். உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு, ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,க்கள் 'நோட்டீஸ்' அனுப்ப, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மாசு கட்டுப்பாடு வாரியம், தீயணைப்பு துறை ஒப்புதலுடன், ஏழு நாட்களுக்குள் உரிமம் கேட்டு, நிறுவனத்தினர் விண்ணப்பிக்க வேண்டும்.அதன்பிறகும் உரிமம் பெறாவிட்டால், ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அடுத்தடுத்த நாட்களுக்கு, தினமும், 400 ரூபாய் வீதம், அபராதம் வசூலிக்கப்படும். இதை தவிர்க்க, நிறுவனத்தினர் தாமாக முன்வந்து, ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்து, உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement