LOGIN
dinamalar telegram
Advertisement

நிவேதிதையை குருவாக ஏற்ற பாரதியார்!

Share
Tamil News
நுாறு ஆண்டுகளுக்கு முன், சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு அருகில் டாக்டர் எம்.ஜி.நஞ்சுண்டராவுக்குச் சொந்தமான ஒரு வீடு இருந்தது.அந்த வீட்டில் தான் மகாகவி சுப்ரமணிய பாரதியார் வாழ்ந்து வந்தார்.பாரதியார் தினந்தோறும் பார்த்தசாரதி கோவிலுக்குச் செல்லும் வழக்கமுடையவர். அவ்விதம் செல்லும் போது, அங்கு அவர் கோவில் யானைக்குத் தேங்காய், பழம் கொடுப்பதையும் தன் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

துாக்கி எறிந்த யானைஅவர், ஒரு நாள் கோவில் யானைக்கு வழக்கம் போல் தேங்காய், பழம் கொடுத்தார். அப்போது அந்தக் கோவில் யானை, பாரதியாரைத் தன் துதிக்கையால் துாக்கி எறிந்துவிட்டது. மதம் பிடித்த யானையின் சேஷ்டையால், பாரதியாரின் தேகம் முழுதும் ஊமைக் காயங்கள். இவை பாரதியாருக்கு மரண வலியைத் தந்தன. இந்தச் சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்குள் இறைவனுடன் கலக்கும் இறுதி நாள் வந்தது. பாரதியார் தன், 37வது வயதில் நஞ்சுண்டராவ் வீட்டில், 1921ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 11ம் நாள் மண்ணுலகில் இருந்து மறைந்தார்.அடுத்த நாள் காலை, 8:00 மணிக்கு பாரதியார் சடலம், கிருஷ்ணாம்பேட்டை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.சடலத்தை பரலி சு.நெல்லையப்பர், லட்சுமண ஐயர், குவளைக்கண்ணன், ஹரிஹர் சர்மா, யதிராஜ் சுரேந்திர நாத் ஆர்யா ஆகியோர் சுமந்து சென்றனர். இந்தச் சவ ஊர்வலத்தில்கலந்து கொண்டவர்களின்எண்ணிக்கை இருபதுக்கும்குறைவாகவே இருந்தது.அன்று உடல் தான் மறைந்தது. ஆனால், இன்றும் அவரது கவிதை மறையவில்லை. உலகையே வசீகரிக்கும் ஞானப் பொக்கிஷமாகப் பிரகாசிக்கிறது.

புத்தம் புதிய கவிதை: சின்னசாமி ஐயர், இலக்குமிஅம்மாள் தம்பதியினருக்கு, 1882 டிசம்பர், 11ம் நாள் துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்தார். பாரதி எட்டயபுரத்தில், தன்னுடைய ஏழாவது வயதில் கதைகள் எழுத ஆரம்பித்தார். பாரதி, 1893ம் ஆண்டு தன், 11ம் வயதில், 'பச்சைத் திருமயில் வீரன்' என்று முதல் வரியைக் கொண்ட ஒரு பாடலை எழுதினார். இதுவே, பாரதி எழுதி உலகத்துக்குத் தெரிந்த முதல் பாடல்.
அவரது கவிதை ஆற்றலை, முதன் முதலில்புரிந்து கொண்டவர் சிவஞானயோகியார் சுவாமிகள். அவர், பாரதியின் நாவில் கலைமகள் எழுந்தருளியிருப்பதை உணர்ந்தார். அவருக்குப், 'பாரதி' என்ற பட்டம் வழங்கினார்.பாரதியாரை கவர்ந்த எழுத்து:
'இந்தியா' என்ற பத்திரிகையின் முதல் இதழில், 'யானையும், யானைக் கூட்டமும்' என்ற தலைப்பில் சகோதரி நிவேதிதையின் ஒரு கட்டுரை வெளிவந்தது.'ஒரு யானை தனியாக இருந்தால், அதை நாம் சுலபமாக ஜெயித்துவிட முடியும். ஆனால், ஒரு யானைக் கூட்டத்தையே தாக்கி, அதை ஜெயிக்கக் கூடிய மனிதன் எங்கே இருக்கிறான்? பொதுக் கருத்தைக் கருதி ஒரு தேசத்திலே பெரும்பான்மையான ஜனங்கள் ஒரே மனதுடன் உழைக்க நிச்சயித்து விடுவார்களானால், அவர்களுக்கு அபரிமிதமான பலம் ஏற்பட்டு விடுகிறது. அவர்களை எதிர்க்க எவராலும் முடியாது.'இந்தியாவில் இன்றைக்கு நாம் ஒற்றுமையை ஏற்படுத்தாவிட்டால், என்றைக்கும் அதை யாராலும் செய்ய முடியாது. ஒரு உடலை எப்படி இரண்டு கூறுகளாகப்பிரிக்க முடியாதோ, அப்படி இந்தியாவை, 'வடநாடு' என்றும், 'தென்னாடு' என்றும் தொடர்பற்ற இரண்டு பகுதிகளாகப் பிரிக்க முடியாது.'நாம் பலவீனர்கள், நாம் பிளவுபட்டு விட்டோம். நாம் துர்பாக்கிய சாலிகள், ஆதரவற்றவர்கள் ஆகிவிட்டோம்' என்றெல்லாம் பேசுபவர்கள் இருக்கின்றனர். நம்மைத் தாழ்த்தும் இது போன்ற கருத்துக்களை, நாம் காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது. புதிய நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும்' என்றார் சகோதரி நிவேதிதை.


தேச பக்தி:
பாரதி, 1909ல் வெளிவந்த, 'ஸ்வதேச கீதங்கள்' முன்னுரையில், 'சென்ற சுபகிருது வருஷத்திலே பாரத நாட்டில் சர்வ சுபங்களுக்கு மூலாதாரமாகிய தேசபக்தி என்ற நவீன மார்க்கம் தோன்றியது. நல்லோர்களின் சிந்தை எல்லாம் உடனே புளகாங்கீதமாயின' என்று குறிப்பிடுகிறான்.'சுதந்திரம் என் பிறப்புரிமை' என்று கர்ஜித்த லோகமான்ய பாலகங்காதர திலகர், பாரதியாரை பெரிதும் கவர்ந்தார். 'எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே!' என்று தாய்நாட்டைப் போற்றிப் பாடினான்.

சுயநல வெறி'செப்பு மொழி பதினெட்டுடையாள் எனிற் சிந்தனை ஒன்றுடையாள்' என்று ஒற்றுமை உணர்வை உருவாக்கினான்.'ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில், அன்னியர் வந்து புகல் என்ன நீதி? - ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள் சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ!' என்று தாய் அன்பைக் கூறி வேற்றுமைகளைக் களைய முற்பட்டான்.

தெய்வீகப் புலவன்: வேதங்களையும், உபநிடதங்களையும் படித்த பாரதி, அதை மக்களுக்குப் புரியும் படி சுலபமாகக் கூறினான். பறவையின் வேகமாக, நாயின் நன்றியாக, மரத்தின் உயிராற்றலாக, அலைகடலின் கொந்தளிப்பாக, அதிகாலையில் சிவப்பாக தெரிவது எல்லாம் பரம்பொருள்தானே! எனவே, 'ஒன்றே அனைத்தும்! அனைத்தும் அதுவே!' என்கிற வேதாந்தக் கருத்துக்களை எடுத்துரைத்தான். 'ஒன்று பரம்பொருள்; நாம் அதன் மக்கள்!' எனவே, 'அந்தப் பரம்பொருளை அடைய, காவித் துணி வேண்டா, கற்றைச் சடை வேண்டா, பாவித்தல் போதும், பரமநிலை யெய்துதற்கே' என்றான்.'சுத்த அறிவே சிவம்' என்றான். துாய உள்ளுணர்வு மூலம் ஆண்டவனை உணர முடியும் என்றான்.


பாரதியாரின் பார்வை: காசியில் நடந்த காங்கிரஸ் மகாசபை, பாரதியாரைப் புது மனிதனாக மாற்றியது.1906ல் தாதாபாய் நவுரோஜி, காங்கிரஸ் தலைவராயிருந்தார். 'சுய ராஜ்யம்' என்னும் கோஷத்தையும் கிளப்பி விட்டார். பாரதியார், இந்த மாநாட்டுக்குச் சென்று திரும்பும் வழியில் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தார். கோல்கட்டா அருகில், 'டம் டம்' என்ற ஊரில் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.அவர் பாரதியாரிடம் பொதுவாகப் பல விஷயங்களைப் பேசிவிட்டு, 'அன்பு மகனே! உனக்கு இன்னும் விவாஹம் ஆகவில்லையா?' என்று கேட்டாராம்.பாரதியார், 'தாயே! எனக்கு விவாஹமாகி இரண்டு வயதான பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது' என்றார். 'நிரம்ப சந்தோஷம்! ஆனால், மனைவியை ஏன் உடன் அழைத்து வரவில்லை?' என்றார் அம்மையார். 'இன்னும் எங்களில் மனைவியைச் சரி சமமாகப் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும் வழக்கம் இல்லை.

மேலும், காங்கிரசுக்கு அவளை அழைத்து வந்தால், என்ன பிரயோசனம்?' என்றார் பாரதியார்.இதைக் கேட்டு அம்மையாருக்கு கோபம் உண்டாயிற்று. 'மகனே! புருஷர்கள் அனேகம் பேர், படித்தும் ஒன்றும் அறியாத சுயநல வெறி கொண்டவர்களாக இருக்கின்றனர். ஸ்திரீகளை அடிமைகள் என்று கருதுகின்றனர். ஒரு சிலர் உன் போன்ற அறிவாளிகள். அவர்களும் கூட, இப்படி அறியாமையில் மூழ்கி, ஸ்திரீகளுக்குச் சம உரிமையும், தகுந்த கல்வியும் கொடுக்காவிட்டால் எப்படி நாடு சமூகச் சீர்திருத்தம் அடையும்?' என்று அன்பாகக் கடிந்து கொண்டார். பாரதியார் வெட்கித் தலை குனிந்தார்.பின், 'சரி, போனது போகட்டும்! இனிமேலாவதுஅவளைத் தனி என்று நினைக்காமல், உன் சொந்தக்கரம் என மதித்து, மனத்தில் அவளைத் தெய்வம் என்று போற்றி நடந்து வருதல் வேண்டும்' என்றாராம்.அன்று முதல் சகோதரிநிவேதிதையைத் தன் ஞான குருவாக பாரதி ஏற்றார்.

பெண்ணின் பெருமைபின், 'புதுமைப் பெண், பெண்மை வாழ்க, பெண்கள் விடுதலைக் கும்மி' போன்ற பாடல்களைப் படைத்தான். 'பெண் உயராவிட்டால் ஆண் உயர மாட்டான். ஸ்திரீகளை மிருகங்களாக வைத்து நாம் மாத்திரம் மஹரிஷிகளாக முயலுதல் மடத்தனம்' என்று கூறினான்.பெண்களின் கவுரவத்தை உயர்த்தும் பொருட்டு, ஒரு செயல் திட்டமாக, 10 கட்டளைகளைக் கொடுத்தான்.

* பெண்களை ருதுவாகும் முன் விவாஹம் செய்து கொடுக்கக் கூடாது.
* அவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாஹம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தக் கூடாது.
* விவாஹம் செய்து கொண்ட பின், அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது.
* பிதுரார்ஜியத்தில் பெண் குழந்தைகளுக்கு சமபாகம் கொடுக்க வேண்டும்.
* புருஷன் இறந்த பின் ஸ்திரீ மறுபடி விவாஹம் செய்து கொள்வதைத் தடுக்கக்கூடாது.
* விவாஹமே இல்லாமல் தனியாக இருந்து வியாபாரம், கைத்தொழில் முதலியவற்றால் கவுரவமாக வாழ விரும்பும் ஸ்திரீகளை, யதேச்சையான தொழில் செய்து ஜீவிக்க இடம் கொடுக்க வேண்டும்.
* பெண்கள் கணவனைத் தவிர வேறு புருஷருடன் பேசக் கூடாதென்றும், பழகக் கூடாதென்றும், பயத்தாலும், பொறாமையாலும் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையை ஒழித்துவிட வேண்டும்.*பெண்களுக்கும் ஆண்களைப் போலவே உயர்தரக் கல்விதர வேண்டும்.
*தகுதியுடன் அவர்கள், அரசாட்சியில் எவ்வித உத்யோகம் பெற விரும்பினாலும் அதைச் சட்டம் தடுக்கக் கூடாது.* பெண்களுக்கும் ராஜாங்க உரிமைகளிலே அவசியம் பங்கு கொடுக்க வேண்டும்.


அமரகவி பாரதியாரின், 100வது நினைவு நாள்
: பாரதியின் பேனா, பாமர மக்களின் இதயத் துடிப்பாக விளங்கியது. எளிய சொற்கள், புதிய உயிர், புதிய உணர்வு, புதிய பரிமாணம், பண்டிதன், பாமரன் வேறுபாடின்றி அனைவருக்கும் புரியும் கவிதை. நொண்டிச் சிந்து, காவடிச்சிந்து, வழிநடைச் சிந்து போன்ற நாட்டுப்புற இசை மரபுகளில், மறவன்,கோணங்கி, அம்மாக்கண்ணு, வண்டிக்காரன் போன்ற மண் சார்ந்த கவிதைகளைப் படைத்தான் பாரதி. அவனது கவிதைகளின் சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது. பராசக்தியால் செய்யப்படுவது தான் கவிதை என்ற உள்ளுணர்வே, அவனை பாட்டுக்கொரு புலவன் பாரதி என்று பிரமிக்க வைத்தது. பாரதியின் கவிதை, எந்நாளும் அழியாத மகா காவியம்.பாரதியாரது, 100வது நினைவு நாளில் அவனை வணங்குவோம். அவன் காட்டிய வழியில் நடப்போம் என்று உறுதி பூணுவோமாக!
வி.சண்முகநாதன் முன்னாள் ஆளுநர் : 99992 00840

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

 • ganapati sb - coimbatore,இந்தியா

  நல்லதோர் வீணை செய்தெ.. வல்லமை தாராயோ .. சிவசக்தி என பராசக்தியை பாடிய பாரதி நடைமுறையிலும் பெண்களுக்கு உரிய உரிமைகள் வழங்க உத்வேகம் அளித்தது அருமையான செயல்

 • Shekar Raghavan - muscat,ஓமன்

  எல்லாம் சரி, தங்களின் தொடர்பின் மூலம் பாராளுமன்றம் முதல் பஞ்சாயத்து வரை பெண்களுக்கான இடஒதிக்கீட்ட நிறைவேற்றி பாரதியின் கனவை நிறைவேற்றுங்கள்

 • RUPA - KOLKATA,இந்தியா

  INDIAVIL IRUTTU ADIKA PATTA MUTHAL TAMILAN BHARTHI THAN, AVARAI VELI KONDUVARA ETHANAI PER PADUPATTARGAL , AVARKALIYUM SERTHU INTHA NALIL VANGUKIREN.

 • natarajan s - chennai,இந்தியா

  >>எவர்களுக்கு இஷ்டமில்லாத புருஷனை விவாஹம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தக் கூடாது. விவாஹம் செய்து கொண்ட பின், அவள் புருஷனை விட்டு நீங்க இடம் கொடுக்க வேண்டும். அதன் பொருட்டு அவளை அவமானப்படுத்தக் கூடாது. பிதுரார்ஜியத்தில் பெண் குழந்தைகளுக்கு சமபாகம் கொடுக்க வேண்டும். புருஷன் இறந்த பின் ஸ்திரீ மறுபடி விவாஹம் செய்து கொள்வதைத் தடுக்கக்கூடாது.>> இதெல்லாம் பெரியார் தான் சொன்னார் என்றுதான் கற்பிக்க பட்டு உள்ளது , இது என்ன புது கதை, இது திராவிடத்தை ஒழிக்க நடக்கும் முயற்சி செல்லாது செல்லாது .

Advertisement