LOGIN
dinamalar telegram
Advertisement

நாட்டின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே.

Share


பழமையான இந்தியாவை புரட்டிப் பார்த்தால் மனதை காயப்படுத்தும் அளவிற்கு பல கசப்பான விஷயங்கள் நடந்துள்ளன.

பதினெட்டாம் நுாற்றாண்டின் ஆரம்பத்தில் கல்வி என்பது எல்லோருக்குமானதாக இல்லை அது உயர்சாதியினருக்கு மட்டுமே ஒன்றாக இருந்தது.

இந்த காலகட்டத்தில்தான் சாவித்திரிபாய் 1831 ல் மகராஷ்ட்ரா மாநிலத்தில்
உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாய குடும்பத்தில் பிறந்தார்.அக்காலத்தில் நிலவிய குழந்தை திருமணத்தின் அடிப்படையில் அவரது ஒன்பதாவது வயதில் ஜோதிராவ் புலேவை மணந்தார்.ஜோதிராவ் தன்னைச் சுற்றி பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை வெறுத்தார், இதனை வேரறுக்க தன் மனைவியையே களத்தில் இறக்கினார்.

அக்கால பெண்களுக்கு எதெல்லாம் மறுக்கப்பட்டதோ அதை எல்லாம் வழங்க முடிவு செய்தார், அதன் அடிப்படையில் மனைவியை கல்வி கற்பிக்க அனுப்பித்தார் எந்த கல்வி நிலையமும் ஏற்காத நிலையில் தானே கற்றுக் கொடுத்தார் கணவரின் லட்சியத்தை புரிந்து கொண்டு படிக்க ஆரம்பித்த சாவித்ரி ஒரு கட்டத்தில் கல்விதான் பெண்களை உயர்த்தும் ஒரே ஆயுதம் என்பதை உணர்ந்தார் தீவிரமாக உழைக்க ஆரம்பித்தார்.

ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேர்ந்தார் சிறந்த மாணவியாக தேர்ந்தார் அதன்பிறகு 1848,ல், இந்திய வரலாற்றிலேயே, முதல் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை, புனேயிலுள்ள பீடே வாடு என்ற இடத்தில், 9 பெண் குழந்தைகளுடன், தொடங்கினர். அந்த பள்ளியின் முதல் ஆசிரியரும் அவரே கூட்டித்துடைக்கும் ஆயாவும் அவரே.பத்து வயதில் திருமணம் முடிந்து பதினோரு வயதில் விவரம் தெரியாமலே விதவையாகிவிடும் பெண் குழந்தைகளாகப் பார்த்து பார்த்து சேர்த்து படிக்கவைத்தார்.

இதை எதிர்பார்க்காத பழமைவாதிகள் சாவித்திரியை பலவாறாக எதிர்த்தனர் அவர் பள்ளிக்கு போகும் வழியில் நின்று இழி மொழி பேசினர் சாணத்தை வீசினர் ,பெண் கல்வியை முனைப்பாகக் கொண்டு செல்லும் தனக்கு கிடைத்த பரிது இதெல்லாம் என்று எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு பள்ளிக்கு வந்ததும் சாணம் வீசப்பட்ட புடவையை மாற்றிவிட்டு வேறு புடவை கட்டிக்கொண்டு பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தினார்.இதற்காகவே ஒவ்வொரு நாளும் தான் கொண்டு போகும் உணவுப்பையில் ஒரு மாற்றுப்புடவை வைத்திருப்பார்.

ஒரு பள்ளி ஒன்பது பள்ளியானது எல்லா பள்ளிகளிலும் புறக்கணிக்கப்பட்ட குழந்தைகள் மட்டுமே படிக்கவைக்கப்பட்டனர், பிரிட்டிஷ் அரசாங்கம் இப்படிப்பட்ட பள்ளிகளை சோதித்துவிட்டு அரசாங்கம் நடத்தும் பள்ளிகளைவிட சிறப்பாக இருக்கிறது இயங்குகிறது என்று சொன்னதுடன் சிறந்த ஆசிரியர் என்று சாவித்ரியை பாரட்டி பரிசும் கொடுத்தனர்.

அதன் பிறகு சாவித்ரியின் குரலுக்கு பெரிய மரியாதை ஏற்பட்டது.விதவை பெண்களுக்கு மொட்டை போடுவதை கடுமையாக எதிர்த்தவர் இதற்காக நாவிதர்களை அழைத்து அந்த அவலத்தை விவரித்து அவர்களைக் கொண்டே நாங்கள் இனி விதவைப் பெண்களுக்கு மொட்டை போடமாட்டோம் என உறுதி எடுக்க வைத்தார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு பொதுக்கிணற்றில் தண்ணீர் தராத போது தன் வீட்டுக்கிணற்றை திறந்துவிட்டு யார் எவ்வளவு தண்ணீர் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னவர்.1852ல் இவர் தொடங்கி வைத்த 'மஹிளா சேவா மண்டல்' (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டது.1853ம் ஜனவரி 28ம் நாள், விதவைகளுக்கும்,குழந்தைகளுக்குமான மருத்துவ மனை அமைத்தார்.

1897 ல் நாட்டில் பிளேக் நோய் ஏற்பட்டு மக்கள் கொத்து கொத்தாக மடிந்தனர் இன்றைய கொரோனா காலம் போலவே அப்போதும் மருத்துவர்கள் பலர் நோயாளிகளை கவனிக்க தயங்கினர் உடனே வெளிநாட்டில் மருத்துவராக இருந்த தனது மகனை வரவழைத்து ஊருக்கு வெளியே தற்காலிக மருத்துவமனை அமைத்து பிளேக் பாதித்த நோயாளிகளுக்கு வைத்தியத்திற்கு ஏற்பாடு செய்து அவர்களை பிழைக்க வைத்தார்.

அப்படி ஊருக்குள் உறவுகளால் கைவிடப்பட்ட கங்கராம் என்ற பிளேக் பாதித்த நோயாளியைப் பற்றிக்கேள்விப்பட்டு சாவித்ரி தானே அவரை மீட்டு எடுத்துக் கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்தார். இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த கங்கராம்தான் சாவித்ரியின் ஆசிரியை பணியை எதிர்த்து அவர் மீது நாள் தவறாமல் சாணத்தை கரைத்து ஊற்றியவர்,சில நாள் சிகிச்சைக்கு பிறகு கங்கராம் பிழைத்துக் கொண்டார் ஆனால் அவர் மூலமாக ஏற்பட்ட தொற்றின் தீவிரம் காரணமாக 1897, மார்ச் 10 ம் நாள் மரணமடைந்தார் சாவித்திரி பாய் புலே.

பெண் சமூக சீர்திருத்தவாதிகளை சிறப்பிக்கும் வகையில், மகாராஷ்டிர அரசு சாவித்திரிபாய் புலேயில் பெயரில் ஒரு விருதினை ஏற்படுத்தி உள்ளது அங்குள்ள ஒரு பல்கலைக்கு இவரது பெயரை வைத்து சிறப்பித்துள்ளது சிறப்பு தபால் தலை வெளியிட்டு கவுரவித்துள்ளது.

இதெல்லாம் தரும் சந்தோஷத்தைவிட ,நாட்டில் படிக்காத பெண்களே இல்லை என்ற ஒரு நிலை உருவாகும் நாளே அந்த புனித ஆத்மாவிற்கு நிறைய மனநிறைவைக் கொடுக்கும்.

நாட்டின் பெண் கல்விக்காக பாடுபட்ட முதல் பெண் ஆசிரியரான சாவித்ரியை ஆசிரியர் தினமான இன்று அவரை நினைத்து போற்றுவோம்.

-எல்.முருகராஜ்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • .Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்

    இந்திய நாட்டில் முதன் முதலில் " மஹாத்மா" எனப்பட்டவரும் ஜோதிராவ் புலே அவர்களே.

Advertisement