LOGIN
dinamalar telegram
Advertisement

காசுமில்லை பாசமுமில்லை

Share

இந்த கொரோனா காலத்தில் எல்லோர் வாழ்க்கையுமே பரிதாபமாகிப் போனதில், மிகவும் பரிதாபமானவர்களைக் கூட தற்போது உலகம் கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் செல்கிறது அல்லது ஒதுக்கிச் செல்கிறது.

கருணைக்கு பெயர் போன கோவையிலும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பார்வையற்ற பெரியவர் ஒருவர் நடுரோட்டில் சில நாட்களாக அல்லாடிக்கொண்டு இருந்து இருக்கிறார் முன்பெல்லாம் இப்படிப்பட்டவர்களை பார்த்த மாத்திரத்தில் யாராவது எந்த விதத்திலாவது உதவியிருப்பர்,ஆனால் இன்றைய காலகட்டம் இரண்டு மூன்று நாட்களாகியும் அவரைக் கண்டு கொள்வார் இல்லை.

தகவல் கிடைத்தும் ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிறுவனர் மகேந்திரன் அவரை மீட்டு தான் பராமரித்துவரும் கோவை மாநகராட்சி ஆதரவற்றோர் காப்பகத்தில் அனுமதித்தார்.

அவர் பெயர் ஜெயபால் வயது 75 திருநெல்வேலியைச் சார்ந்தவர் ஏழைத் தொழிலாளி மனைவி ஒரு மகள் உண்டு.மனைவி கொஞ்சம் வசதியான வீட்டைச் சார்ந்தவர் என்பதால் ஜெயபால் வருமானத்தில் வாழமுடியாமல் அடிக்கடி அவரது அம்மா வீட்டிற்கு மகளுடன் போய்விடுவார்.

ஜெயபாலும் செய்வதறியாது திகைத்துப் போனார் நல்லபடியாக சம்பாதித்து மனைவியையும் மகளையும் சந்தோஷமாக வைத்து காப்பாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அவர்களை அவரது அம்மா வீட்டில் விட்டுவிட்டு ஊரைவிட்டு கிளம்பிவிட்டார்.

பின்னர் பல ஊர்களுக்கு சென்று எல்லாவித வேலைகளையும் செய்தார் ஆனால் வந்த வருமானம் அவரது சாப்பாட்டிற்குதான் சரியாக இருந்ததே தவிர எதுவும் மிச்சமாகவில்லை

வருமானம் இல்லாவிட்டாலும் பெத்த பிள்ளைக்கு அப்பாவாக கட்டிய மனைவிக்கு கணவனாக இருப்போம் ஊரில் கிடைத்ததைவைத்து வாழ்வோம் பல ஆண்டுகள் கழித்து போவதால் மனைவியும் மகளும்கூட ஆதரிப்பர் என்ற நினைவுடன் சொந்த ஊருக்கு போனவருக்கு அவமானமே மிஞ்சியது.

வெறுங்கையோடு வந்தவருக்கு சாப்பாடு கூட கிடைக்கவில்லை அடுத்து உங்களை சந்திக்கும் போது போதுமான பணத்தோடு வருகிறேன் என்று சொல்விட்டு மீண்டும் ரோஷத்தோடு ஊரைவிட்டு வந்துவிட்டார்.

இந்த வைராக்கியம் ஜெயிப்பதும் செல்லுபடியாவதும் சினிமாவில் மட்டும்தான் போலும் கிடைத்தது எல்லாம் கூலி வேலைதான் இப்படியே நாற்பது ஆண்டுகள் போய்விட்டது கடைசியாக கோவை மில்லில் செக்யூரிட்டி வேலை பார்த்து வந்தார் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பார்வையில் கோளாறு ஏற்பட்டு அவரால் பார்க்க முடியாமல் போனது அடுத்த அடியாக கொரோனா காரணமாக மில்லை மூடிவிட்டனர்.

தங்கவும் இடம் இல்லாமல் சாப்பிடவும் வழியில்லாமல் நடு ரோட்டில் தவித்தவரைத்தான் மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.சில நாட்கள் கழித்து இங்குள்ள கண் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்ததில் இழந்த ஒரு கண் பார்வையை மீண்டும் பெற்றுள்ளார் சில நாட்கள் கழித்து அடுத்து அறுவை சிகிச்சை செய்தால் முழுப்பார்வையும் கிடைத்துவிடும் என்று கூறியுள்ளனர்.

உங்களுடைய இப்போதைய நிலையை உங்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்கலாமா என்று கேட்டபோது என்னால் காசு பணம் சேர்க்க முடியவில்லை எனது வைராக்கியத்தையும் காப்பாற்ற முடியவில்லை வருடமும் நாற்பதாகிவிட்டது அப்பவே என்னை மதிக்காதவர்கள் இனிமேல் மதிப்பார்கள் என்பது நடக்காத காரியம் தகவல் சொன்னாலும் என்னை சுமையாகவே நினைப்பர் ஆகவே மிச்ச காலத்தை நிம்மதியாக காப்பகத்திலேயே கழித்துவிடுகிறேன் என்று சொன்ன ஜெயபாலின் கண்களில் கண்ணீர், அவரே கைநீட்டி துடைத்துக் கொண்டார்.

-எல்.முருகராஜ்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • vasan - doha,கத்தார்

    இப்படியும் சில மனைவி, மகள்களும் உள்ளனர்....அதான் ஆம்பளை பணம் இருந்தால் மட்டுமே இந்த உலகத்தில் மதிக்க படுவான் இதில் அப்பனுக்கும் இந்த நிலை தான் பாவம்.......

Advertisement