Advertisement

மணல் மாபியாக்களிடம் இருந்து பாலவேடு ஏரி மீட்கப்படுமா?

Share
ஆவடி சுற்றுவட்டார பகுதி மக்களின், நீராதாரமும், வாழ்வாதாரமுமாக விளங்குகிறது, பாலவேடு ஏரி. ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் மணல் மாபியாக்களிடம் சிக்கி உள்ள இந்த ஏரியை மீட்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.ஆவடி அடுத்த, பட்டாபிராம் அருகே, சென்னை- - மீஞ்சூர் வெளிவட்ட சாலையோரம், 384 ஏக்கர் பரப்பில், பாலவேடு ஏரி அமைந்துள்ளது. ஆவடி தாலுகாவில் உள்ள, 20 பெரிய ஏரிகளில், மூன்றாவது இடத்தில், பாலவேடு ஏரி உள்ளது. பாலவேடு ஏரி, பட்டாபிராம், முத்தாப்புதுப்பேட்டை, பாலவேடு உள்ளிட்ட பகுதிகளின், நீராதாரமாக விளங்கி வருவதோடு, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது.அவர்கள், ஏரியை குத்தகைக்கு எடுத்து, மீன் வளர்த்து, பிழைப்பு நடத்தி வருகின்றனர். முழு ஊரடங்கு காலத்திலும், இந்த ஏரியில், அதிகாரிகளின் துணையுடன், மீன் வியாபாரம் ஜோராக நடந்தது.இவ்வாறு, பலருக்கு வாழ்வளிக்கும் இந்த ஏரி, மணல் மாபியாக்களாலும், ஆக்கிரமிப்பாளர்களாலும், அழிவை சந்தித்து வருகிறது.ஏரியில், மணல் மாபியாக்களால் தோண்டப்பட்ட பள்ளங்களில், நீர் தேங்கி, தற்போது, புதைகுழிகளாக மாறியுள்ளன. அதில், குளிக்க சென்ற பலர், உயிரிழக்கும், துயர சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.மேலும், சில தனியார் கல்வி நிறுவனங்கள், கம்பி வேலி அமைத்து, ஏரியை வளைத்து போடும் முயற்சியில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.சென்னை புறநகர் பகுதியான இங்கு, நிலத்தின் மதிப்பு அதிகரித்து வருவதால், 10 ஆண்டுகளில், ஆக்கிரமிப்புகள் பல மடங்கு பெருகியுள்ளன. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி, இதுவரை துார் வாரப்படவில்லை. அதிகாரிகளின் அலட்சிய போக்கால், ஏரி பராமரிப்பின்றி அழிந்து வருகிறது.வருங்கால தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து, ஆக்கிரமிப்பிற்கு துணை போகும் அதிகாரிகளை தண்டித்து, ஏரியை பாதுகாக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தாகம் தணித்த ஏரி!
என் சிறு வயதில் இருந்தே, இந்த ஏரியை பார்த்து வருகிறேன். கோடையில் கடும் வறட்சி ஏற்படும் போது, இந்த ஏரி தான், சுற்றியுள்ள, எட்டு கிராம மக்களின் தாகத்தை தீர்த்தது. தற்போது, ஆக்கிரமிப்பாளர்களாலும், மணல் மாபியாக்களாலும், ஏரி கூறுபோடப்பட்டு வருகிறது. ஏரியை மீட்க, உயர் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகளை தடுக்க, ஏரியை சுற்றிலும், அதிகாரிகள் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும். - நமது நிருபர் -
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement