Advertisement

வைரஸ் தடுப்பு அட்டையுடன் வலம் வரும் அமைச்சர்!

Share
''விஜயகாந்துக்காக அலகு குத்தினவரின் முதுகுல குத்திட்டாளேன்னு புலம்பறா ஓய்...'' என, அரட்டையை ஆரம்பித்தார், குப்பண்ணா

.''தே.மு.தி.க., தகவலாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''ஆமாம்... அந்தக் கட்சியின், நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலரா இருந்தவர் வைத்தியலிங்கம்... ''விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டப்ப, அவர் குணமாக வேண்டி, வைத்தியலிங்கம் உடம்பு முழுக்க அலகு குத்தி, காவடி எல்லாம் எடுத்தார் ஓய்...

''இப்ப, நாகையை பிரிச்சு, புதுசா மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கியிருக்காளே... புதிய மாவட்டத்துக்கு செயலரா, தன்னை தான் நியமிப்பான்னு, கட்சியினரிடம் வைத்தியலிங்கம் சொல்லிண்டு இருந்தார் ஓய்...

''ஆனா, விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், வேற ஒருத்தருக்கு மாவட்டச் செயலர் பதவியை குடுத்துட்டு, வைத்தியை, இளைஞர் அணி துணைச் செயலரா ஓரங்கட்டிட்டார்... ''இதனால, வைத்தி தரப்பு அதிர்ச்சியாகிடுத்து... இந்தப் பிரச்னையை, விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கவனத்துக்கு எடுத்துண்டு போயிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''கண்ணு மண்ணு தெரியாத ஜாதிப் பாசத்துல செயல்படுறாருங்க...'' என, அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார், அந்தோணிசாமி.

''யாரைச் சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''திருச்சி ஜெயில்ல இருக்கிற ஒரு அதிகாரியை தான் சொல்றேன்... தன் சமுதாயத்தைச் சேர்ந்த சிறை போலீசாருக்கு, லேசான வேலைகளை ஒதுக்குறாருங்க... சமீபத்துல, அவரது சமுதாய தலைவரது நினைவு நாளுக்கு, 12 போலீசாருக்கு, 'லீவ்' குடுத்து, அஞ்சலி செலுத்த அனுப்பி வச்சிருக்காருங்க...

''இந்த சமுதாய பாசம், சிறை வளாக குடியிருப்புல, மது விருந்து நடக்குற அளவுக்கு இருக்குதுங்க... தன் சமுதாயத்தைச் சேர்ந்த கைதிகளுக்கு கூட, நிறைய சலுகைகள் தர்றார்... சீனியர்களை கூட மதிக்காம இவர் செயல்படுறது, சிறை போலீசார் மத்தியில அதிருப்தியை ஏற்படுத்தியிருக்குங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''சதீஷ்குமார் இங்கன உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த அண்ணாச்சியே, ''அமைச்சர் கழுத்துல தொங்குற அட்டை தான், இப்ப மதுரையில பரபரப்பான பேச்சா இருக்கு வே...'' என்றார்.

''கண்டிப்பா, செல்லுார் ராஜுவா தான் இருக்கும்... சரிதானா ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''கரெக்டா சொன்னீர்... கொரோனா பாதிப்புல மீண்ட அமைச்சர் ராஜு, வெளியிடங்களுக்கு போறப்ப, கழுத்துல ஐ.டி., கார்டு மாதிரி ஒண்ணை தொங்க விட்டிருக்காரு... விசாரிச்சப்ப, அது, 'வைரஸ் பிளாக்கர் டிஸ்இன்பெக் ஷன் கார்டு'ன்னும், ஜப்பான் தயாரிப்புன்னும் சொல்லுதாவ வே...

''இந்த அட்டையை கழுத்துல மாட்டியிருந்தா, சுத்தியிருக்கிற வைரஸ்களை அழிச்சிடுமாம்... 500 ரூபாய் மதிப்புள்ள அட்டையை, ஒரு மாசம் வரை போட்டுக்கலாம்னு சொல்லுதாவ... இதுல எந்த அளவுக்கு உண்மை இருக்குன்னு தான் தெரியலை வே...'' என்றார், அண்ணாச்சி.

''அது சரி... தெர்மாகோல் போட்டு அணையை மூடுனவராச்சே... அவர் செஞ்சா சரியா தான் இருக்கும் பா...'' என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • N S Sankaran - Chennai,இந்தியா

  சுத்தி இருக்கிற வைரஸ்களை அழிச்சிறுமா? மாறு வேஷத்துல அறிவாலயம் பக்கம் ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வாங்க தலைவரே.

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  ஒரு பலனை எதிர்பார்த்து செஞ்சா இப்படித்தான் ஆகும் என்பது வைத்தியலிங்கம் அவர்களுக்கு தெரியாதது அதிசயம்தான் .....

 • veeramani - karaikudi,இந்தியா

  இந்த செய்தியில் மாண்புமிகு அமைச்சர் திரு ராஜு அவர்கள் பற்றிய கருது வாசகர்களுக்கு உடன்பாடில்லை. தெர்மோகோல் பற்றிய உங்களது வாசகம்.. அமைச்சர் நிச்சயம் அவ்வாறு சொல்லியிருக்கமாட்டார், பிடபிள்யு டீ அதிகாரிகளின் கருத்தாகக்கூட இருக்கலாம் அல்லவா. தயவுசெய்து இதுமாதிரியான தர்மசங்கடமான செய்திகளையும், வார்த்தைகளையும் பிரசுரிக்காதீர்கள்..

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  இப்படி ஒரு அட்டை இருப்பது தெரிந்தால் மார்க்கெட்டில் விட்டு, பொதுமக்களுக்கு உதவலாமே இவரைப்போல் தொற்று வந்து குணமானவர்களுக்கு உதவும் மனம் இல்லைபோலும்

Advertisement