Advertisement

டவுட் தனபாலு

Share
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்: உலகமே வியந்து பார்க்கும் வகையில், கொரோனா பாதிப்பை குறைத்து உள்ளோம். சென்னையில் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை, 40 சதவீதத்தில் இருந்து, தற்போது, 7 சதவீதம் மாறி உள்ளது. மாநிலத்தில், 18 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மற்ற அனைவரும், குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

'டவுட்' தனபாலு: கொரோனாவுக்கு எதிராக, கடந்த, ஆறு மாதங்களாக தொடர்ந்து நடத்திய போரில், தமிழக சுகாதாரத் துறை வெற்றி பெற்றுள்ளது என்பதில், யாருக்கும், 'டவுட்' இருக்க முடியாது. எனினும், தனியார் மருத்துவமனைகளில், கொரோனா சிகிச்சைக்கு, லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படுகிறதே; அதை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டதோ என்ற, 'டவுட்'டும் ஏற்படுகிறதே!

***

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: 2009ம் ஆண்டு, இலங்கை போரின்போது, தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பான, ஐ.நா., மனித உரிமை ஆணைய விசாரணையை, இலங்கை அரசு தடுத்து வந்தது. இலங்கை தமிழர்களின் உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது, இந்திய அரசின் கடமை. அதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

'டவுட்' தனபாலு: நம் நாட்டு பிரச்னைகளையே, மத்திய அரசால் முழுமையாக தீர்க்க முடியவில்லை. இந்நிலையில், இலங்கை தமிழர் விவகாரத்தில் தலையிட்டு, மூக்கறுபட மத்திய அரசு விரும்பவில்லையோ என்னவோ... இலங்கை தமிழர் விவகாரத்தை, அந்நாடு பார்த்துக் கொள்ளும்; நம் அரசியல் தலைவர்களுக்கு, இலங்கை விவகாரத்தில் ஏன் இவ்வளவு அக்கறை என்ற, 'டவுட்' எழுகிறதே!

***

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: கேரள மாநிலம், மூணாறு அருகேயுள்ள, ராஜமாலா பகுதி, தேயிலை தோட்டத்தில் வேலை செய்த, தமிழக தொழிலாளர்கள், 80க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கினர். அவர்களில், 29 பேர் மரணம் அடைந்துள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்வதாக, அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கேரள அரசுடன், தமிழக அரசு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; தமிழர் நலன் காக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: நீங்கள் சொன்னாலும், சொல்லா விட்டாலும், இரு மாநில அரசுகளும் இணைந்து, பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் செய்யும் என்பதில், யாருக்கும், 'டவுட்' வராது. அதே நேரத்தில், பாதிக்கப்பட்ட தமிழருக்கு, தமிழக கட்சிகள் ஒருங்கிணைந்து, நிவாரண நிதி மற்றும் நல உதவிகள் வழங்குமோ என்ற, 'டவுட்' கிளம்புதே!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • R. Vidya Sagar - Chennai,இந்தியா

    டவுட் தனபாலு: இலங்கை சம்பந்தமாக பேச தமிழகத்தில் ஒரே ஒரு தலைவர்தான் ஏக போக உரிமை வைத்துள்ளார். இவர் ஏன் கேப்பில் சைக்கிள் ஒட்டிக்கொண்டு இருக்கிறார்?

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    தொற்று பாத்திக்கப்பட்டோரில் பலர் வீட்டிலிருந்தே சிகிச்சை , தனிமைப்படுத்துதல், நாட்டு வைத்தியம் என்று தங்களை குணப்படுத்திக் கொண்டுவிட்டனர். பலர் மருத்துவமனைகளின் அட்டகாசம் தாங்காமல் சித்தாவின் பக்கம் சென்று விட்டனர். அவர்கள் அரசை நம்பியிருந்தால் இறப்பு விகிதம் எகிறியிருக்கும். எங்கள் உறவினர் குணமானபின் இரண்டாம், மூன்றாம் சோதனைக்குக்கூட யாரும் வரவில்லை. இந்த அழகில் உள்ளது கட்டுப்பாடு. சனிக்கிழமைகளில் ஏற்படும் தொற்று எண்ணிக்கை, டாஸ்மாக்கின் உபயம் எல்லாவற்றையும் கணக்கிடாமல் மறைத்துவிடுகிறார்களோ எனத் தோன்றுகிறது

Advertisement