Advertisement

சென்டிமென்ட்படி தொகுதி மாறும் ஸ்டாலின்!

Share
''திருச்சி, தி.மு.க.,வுல முட்டல் அதிகமாயிகிட்டே இருக்கு பா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், அன்வர்பாய்.


''என்ன விஷயமுன்னு சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.''திருச்சி, தி.மு.க.,வுல கொடிகட்டி பறந்த நேருவை, முதன்மைச் செயலர் பதவி கொடுத்து, சென்னையிலேயே முடக்கிட்டாங்க... ''திருவெறும்பூர், மணப்பாறை, திருச்சி கிழக்கு ஆகிய சட்டசபைத் தொகுதிகள் அடங்கிய பகுதிக்கு, உதயநிதியோட நண்பரான, மகேஷ் பொய்யாமொழியை, மாவட்டச் செயலராக நியமிச்சாங்க பா...'மாவட்டத்துல, நேருவுக்கு இருக்குற செல்வாக்கை குறைக்குறது தான், மகேஷோட வேலையா இருக்கு... தன் ஆதரவாளர்களுக்கு, கட்சியில பதவி வாங்கி கொடுக்குறார்... நேரு ஆதரவாளர்களை புறக்கணிக்கிறார் பா...''இதனால ஆத்திரமடைந்த, நேரு ஆதரவாளர்கள் சிலர், 'அண்ணனை பகைச்சுட்டு, திருச்சியில அரசியல் பண்ண முடியாது'ன்னு, மொபைல்போனில் பகிரங்கமாக மிரட்டிட்டு வார்றாங்களாம் பா...


''கூடிய சீக்கிரம், அடிதடியும் நடக்குமுன்னு, அக்கட்சிக்காரங்க சொல்லுறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.''ஆம்புலன்சுக்கு சொந்த காசை செலவு பண்ண வேண்டியது இருக்கேன்னு புலம்புறாங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.''என்ன விஷயமுன்னு சொல்லுங்க வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இதுவரை, ஏழு பேரு இறந்திருக்காங்க... நகராட்சியில புதைக்குறதுக்கு போதிய இட வசதியில்லாததால, சடலங்களை, திருவள்ளூருக்கு கொண்டு போறாங்க...''சுகாதாரத் துறையினர், நோயால் இறந்தவங்க உடலை, உரிய பாதுகாப்புடன், கட்டி, தயார் செய்து, புதைக்கிற இடம் வரைக்கும், ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு போய் கொடுக்கணுமுங்க... ''ஆனா, அரசு மருத்துவமனையில, உடலை எடுத்துட்டு போக, ஆம்புலன்ஸ் அனுப்ப மாட்டேங்கிறாங்க... இதனால, நகராட்சி நிர்வாக அதிகாரி, சொந்த காசை செலவு பண்ணி, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், உடலை அனுப்புறாராமுங்க..''இதுல கொடுமை என்னன்னா, தனியார் ஆம்புலன்ஸ்சு ஓட்டுறவங்களும், உடலை எடுத்துட்டு போறதுக்கு தயங்குறாங்களாம்... ரொம்ப கஷ்டமா இருக்குங்க...'' என, வருத்தப்பட்டார், அந்தோணிசாமி.''தொகுதி மாறி போட்டியிட போறா ஓய்...'' என, கடைசித் தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.''யார், யார சொல்லுறீங்க... '' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''சென்னை, கொளத்துார் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருக்குற, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில போட்டியிட நினைக்கிறார் ஓய்... ''ஏன்னா... அந்த தொகுதியில, கருணாநிதி ஜெயிச்சப்போ தான், தமிழகத்துல, தி.மு.க., ஆட்சி அமைஞ்சதாம்... அந்த, 'சென்டிமென்ட்' ஸ்டாலினுக்கும் பொருந்தும்... மேலும், கொளத்துாரு தொகுதியில, அவரோட மகன், உதயநிதி போட்டியிட போறாராம் ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.


அப்போது, அன்வர்பாய் குனிந்து எதையோ தேடினார்.''என்ன பாய் தேடுறீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.


''இல்லை... 'பகுத்தறிவு' பேசுற கும்பலைத் தான் தேடுறேன் பா...'' என, கிண்டல் அடிக்கவும், நண்பர்கள் சிரித்தபடியே நடையை கட்டினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி

    பகுத்தறிவு ஊருக்குமட்டும் உபதேசமோ

  • தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா

    நடுவீட்டில் அமர வைத்தாலும்......

  • Girija - Chennai,இந்தியா

    அன்பழகன் போட்டியிட்டது சேப்பாக்கம்

Advertisement