Advertisement

காங்கிரசின் மதசார்பின்மை தொடரும்!

Share
வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கலிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மதசார்பின்மை, சமூக நீதி குறித்து, காங்கிரசுக்கு யாரும் போதிக்க அவசியம் இல்லை. தேர்தலில் ஜாதி, மதம் பார்க்காமல் வேட்பாளரை நிறுத்தி, வெற்றி பெற வைத்த வரலாறு, காங்கிரசுக்கு உண்டு. அயோத்தி ராமர் கோவில் விஷயத்திலும், காங்கிரசின் நிலைப்பாடு மிக சரியானதே.

காங்., பொதுச்செயலர், பிரியங்கா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'ராமர் கோவில் பூமி பூஜை விழா தேசிய ஒருமைப்பாடு, சகோதரத்துவம், கலாசார ஒற்றுமையை அடையாளப்படுத்துகிறது. எளிமை, தைரியம், அடக்கம், தியாகம், அர்ப்பணிப்பு இவற்றின் அடையாளம், ஸ்ரீ ராமர்' என, குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரசைச் சேர்ந்த, ராஜஸ்தான் முன்னாள் முதல்வர், கமல்நாத், தன் வீட்டில், ஹனுமன் சாலிசா சத்சங் பூஜை நடத்தினார். வழக்கில் இருந்த ராமர் கோவில் பூட்டை, 1985ல் திறந்து விட்டதே, அன்றைய பிரதமர் ராஜிவ் தான் என்பதையும், கமல்நாத் நினைவூட்டி இருக்கிறார். ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் சார்பில், ராமர் கோவில் கட்ட, 11 வெள்ளி செங்கற்கள் அனுப்பப்பட்டுள்ளன. ராமரின் தாய் பிறந்த சந்டக்ஹுரியை, புனித ஸ்தலமாக்குதல் மற்றும் கவுசல்யா மாதா கோவில், துர்துரிய வால்மீகி ஆசிரமம் எழுப்ப உள்ளதாக, சத்தீஸ்கர் முதல்வர், பூபேஷ் பாகெல் அறிவித்துள்ளார்.

குஜராத் காங்கிரஸ் செயல் தலைவர், ஹர்திக் படேல், ராமர் கோவில் கட்டுவதற்கு, 21 ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளார். மேலும் அவர், 'நான், நாத்திகன் அல்ல; விரைவில் இந்தியாவிலும், குஜராத்திலும், ராமராஜ்யம் மலரும்' என, உறுதியளித்துள்ளார்.ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், காங்கிரஸ், தன் மதசார்பின்மை கொள்கையில் சமரசம் செய்துகொண்டதில்லை.

ராமர் கோவில் விவகாரத்தில், காங்கிரசின் நிலைப்பாடுகளை, வாக்காளர்களிடம் விளக்காததால், சில தேர்தல்களில், அக்கட்சி தோல்வியைத் தழுவியது.ஹிந்து, முஸ்லிம், கிருஸ்துவம் உட்பட, அனைத்து மதங்களுக்குமான கட்சி, காங்கிரஸ். அதை மக்களிடம், அக்கட்சியினர் விளக்கிக் கூற வேண்டும்.

***

அவர்களின் கதி என்ன?ம.இளங்கோவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முன்னாள் முதல்வர், ஜெயலலிதா ஆட்சியில், 2013ல் நடந்த, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், இதுவரை பணி நியமனம் பெறாமல், தவித்து வருகின்றனர்.

பேராசிரியர்களுக்கான, மத்திய - மாநில தகுதித் தேர்வுகளான, 'நெட், ஸ்லெட்' சான்றிதழ், ஆயுட்காலம் வரை செல்லும். ஆனால், ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ், ஏழு ஆண்டுகள் மட்டுமே செல்லத்தக்கது எனக் கூறப்பட்டுள்ளது.தற்போது தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ், காலாவதியாகும் சூழலை எட்டியுள்ளது. ஆறு ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர் ஒருவர் கூட, பணி நியமனம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், ஆறு ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு, பணி ஓய்வு, லட்சக்கணக்கான புதிய மாணவர் சேர்க்கை என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது போன்ற காரணங்களால், ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் ஏற்படும். ஆனால் தற்போது, 7,200 ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர் என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார். இந்த தகவல், கொரோனாவை விட, கொடியதாக உள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை என்ன? அவர்கள் பெற்ற சான்றிதழ், காலாவதி என அறிவித்தால், அவர்களின் உழைப்பும், கனவும் வீணாகிவிடாதா?எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழை, ஆயுட்காலமாக நீட்டித்தும்; 2013ல், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதலில் வேலை வழங்க வேண்டும்; அதன்பின் தமிழக அரசு, ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்தட்டும்.

***

திருந்தாத ஜென்மங்கள்!எம்.வரலட்சுமி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: 'திருடனாக பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது...' என்பது போல், 'கொரோனா' பரவலும், அப்படித் தான். அரசு கூறும் வழிகளை கடைப்பிடித்து, தனி மனித இடைவெளி, முக கவசம் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மக்கள் பின்பற்ற வேண்டும்.

மக்கள் ஒத்துழைப்பு தராமல், அரசால் மட்டும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க முடியாது. 'நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாட்டேன்; எனக்கு, நோய் வராது' என, தெனாவட்டாய் திரியும் நபர்களை, சிறையில் அடைக்க வேண்டும். ஏனெனில், அவர்கள் நோய் பரப்பும் காரணிகள்!

கடுமையான தண்டனை தான், அந்த திருந்தாத ஜென்மங்களுக்கு, தகுந்த பாடம் புகட்டும்.நோய் தொற்று பாதித்த சிலர், ஆம்புலன்சில் இருந்து இறங்கி சென்று, பக்கோடா வாங்கி வருவதும், மருத்துவமனையில் இருந்து, சுவர் ஏறி குதித்து, டீ குடிக்க செல்வதும் என, விபரீதமான செயலில் ஈடுபடுகின்றனர். நோய் குறித்த பயம், மக்களுக்கு இல்லாமல் போய் விட்டது.

மருத்துவர், செவிலியர், களப்பணியாளர், அதிகாரி, போலீசார், அமைச்சர், செய்தியாளர் என, எத்தனையோ பேர், தங்கள் உயிரை பணயம் வைத்து, தங்கள் குடும்பத்தை மறந்து, கொரோனாவுக்கு எதிராக போராடி வருகின்றனர். சிலர், தங்களின் அலட்சிய நடவடிக்கையால், அவர்களின் தியாகத்தை காயப்படுத்துகின்றனர்.

மக்களாகிய நாம், முழு ஒத்துழைப்பு தந்தால் தானே, நோயின் தாக்கம் குறையும். அரசு தரும் இலவசங்களை, கை நீட்டி வாங்கிக் கொள்வது போல், சட்ட - திட்டங்களையும் காது கொடுத்து கேட்டு, அதன்படி நடக்க வேண்டும்.கொரோனா ஒழிந்தால்தான், நாம் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும்; நம் பொருளாதார சிக்கல்களை தீர்க்க முடியும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • ஷ. ச. சேகர் - புனே, மஹராஷ்டிரா ,இந்தியா

    கோவர்தன் குடை பிடித்தார் ஆயர்பாடி கிருஷ்ணா கோவாக்சின் தடை கொடுப்பார் ஹைதராபாத் கிருஷ்ணா தினமலர் வாசகர்களுக்கு கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கொரானாவிலிருந்து மீண்ட பெரிய ‘சாதனை’ க்காக ஆயிரம் பேரை கூட்டி சால்வை, மாலை என்று கொண்டாடியும், கோழி இலவசத்துக்காக மக்களை தள்ளுமுள்ளுடன் போராட வைத்தும் ‘கட்டுப்பாட்டை’ கடைப்பிடிப்பவர்கள் நோயைப் பரப்ப மாட்டார்களா? அவர்கள் மீதெல்லாம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

Advertisement