Advertisement

கஜமுகனே... காப்பாற்று! உயிருக்கு போராடுது ஒரு யானை... காயத்துடன் அலையுது மற்றொன்று

Share
கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்டது, ஜாகிர் போராத்தி மலை கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்த வெள்ளியங்கிரி, 50, என்பவர், சிறுவாணி பிரதான குழாய் அருகே, நேற்று முன்தினம் மாலை சென்றுள்ளார். யானை பள்ளம் என்ற இடத்தில், யானை ஒன்று சுருண்டு விழுந்து கிடந்ததை பார்த்து, வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
கால்நடை மருத்துவர் சுகுமாருடன் சென்ற வனத்துறையினர், 15 வயதுடைய அந்த யானைக்கு சிகிச்சை அளித்தனர்.ஆனாலும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இரவாகி விட்டதால், சிகிச்சை கைவிடப்பட்டுள்ளது. நேற்று காலை, 12:40 மணி வரை மருத்துவரோ, வனத்துறையினரோ, ஒருவரும் அங்கு வரவில்லை. யானை உயிருக்கு போராடியபடி கிடந்தது.யானையின் வாய் உள்ளிட்ட பகுதிகளில், காட்டு ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தன. மூச்சுவிட சிரமப்பட்டு, அவ்வப்போது கால்களை அசைத்து, உயிருக்கு போராடியதை காண முடிந்தது. இந்நிலையில், மதியம், 12:40 மணியளவில் சம்பவ இடத்துக்கு சாவகாசமாக சென்ற வனத்துறையினர், யானைக்கு சிகிச்சையை தொடர்ந்தனர்.
போளுவாம்பட்டி வனச்சரகர் ஆரோக்கியசாமியிடம் பேசியபோது, ''நேற்று (நேற்று முன்தினம்) இரவு வரை, சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுவரை, 47 பாட்டில் குளூக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. வயிற்றில் நோய் தொற்று உள்ளதால், ரத்த மாதிரி எடுக்கப்பட்டுள்ளது. தொடர் சிகிச்சையால், உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது,'' என்றார்.யானை எப்போது விழுந்தது...உயிருக்கு போராடி வரும் யானை, மூன்று நாட்களுக்கும் மேலாக படுத்து கிடந்ததற்கான தடயங்கள் உள்ளதாக, அப்பகுதி பழங்குடியினர் புகார் தெரிவிக்கின்றனர். அவர்களின் புகாருக்கு தகுந்தாற் போல், யானையின் உடல் மிகவும் மெலிந்துள்ளது.பல இடங்களில் புரண்டு விழுந்துள்ளது. முள்ளாங்காடு வன சுற்றிலும் (Beat), யானைகளின் உயிருக்கு குந்தகம் விளைவிக்கும் செயல், அரங்கேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, வனப்பகுதிகளில் ரோந்தை தீவிரப்படுத்த வேண்டும்.ரயிலில் அடிபட்ட யானை எங்கே?இதனிடையே, மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட வாளையாருக்கு அருகே, நேற்று முன்தினம் இரவு, மூன்று காட்டு யானைகள் ரயில் பாதையை கடந்துள்ளன. அப்போது, கேரளாவில் இருந்து வடமாநிலத்துக்கு சென்ற சரக்கு ரயில், ஒரு யானையின் மீது மோதியுள்ளது.
அதில், காயமடைந்த யானை காட்டுக்குள் சென்றது. அந்த யானையை பிடித்து சிகிச்சையளிக்க, கும்கி யானை வெங்கடேஷ், சுயம்புவை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். போளுவாம்பட்டி வனச்சரகத்தில், இந்த இரு யானைகள் ஏற்றும் இடத்தில், லாரி தயார் நிலையில் நிறுத்தப்பட்டது.ஆனால், கொட்டும் மழையில் காட்டுக்குள் செல்வதை தவிர்க்க, திட்டம் கைவிடப்பட்டது. இதனால், காயமடைந்த யானையின் நிலையும், கேள்விக்குரியதாகி உள்ளது. காட்டின் எந்த இடத்தில், அந்த யானை உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறதோ?
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement