Advertisement

முடங்கவும் தெரியும்; பணிகளை முடுக்கிவிடவும் முடியும்

Share
திருப்பூர்:''ஊரடங்குக்காக, தேவையெனில், 'முடங்கவும்' தெரியும்; தளர்வு வழங்கினால், பணிகளை 'முடுக்கிவிடவும்' முடியும்'' என்பதை, திருப்பூர் மாவட்ட மக்கள் நிரூபித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம், ஆறாவது வாரமாக, 'தளர்வில்லா ஊரடங்கை', ஞாயிற்றுக்கிழமைகளில் எதிர்கொண்டது.
வீடுகளிலேயே மக்கள் முடங்கி, அரசின் நடவடிக்கைக்கு, ஒத்துழைப்பு வழங்கினர்.ஞாயிற்றுக்கிழமை என்றாலே, பொது இடங்களில், கூட்டமாக குவிதல், நண்பர்களுடன் அரட்டை, கடைகளில் பொருட்கள் வாங்க முண்டியடிப்பு, குறிப்பாக, இறைச்சிக்கடைகளில் காத்திருப்பு, வாகனங்களில் ஜாலிப்பயணம் என்று, கொரோனா தடுப்புக்கும், சமூக இடைவெளிக்கும் எதிரான செயல்கள் இருக்கும்.ஊரடங்கு அமலில் இருந்தாலும்கூட, ஞாயிற்றுக்கிழமை, இச்செயல்களை, அரசால் தடுக்க இயலவில்லை. இதனால்தான், 'தளர்வில்லா முழுமையான ஊரடங்கை' அரசு அமல்படுத்தியதோடு, இதை செயல்படுத்துவதில், கண்டிப்பையும் காட்டியது.இதனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் வர்த்தகம் முழுமையாக முடங்கினாலும்கூட, இதற்கு வர்த்தகர்களின் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தது. இறைச்சியை சுவைக்க தவறாதவர்கள்கூட, சனிக்கிழமையே, இறைச்சியை வாங்கி வைத்துக்கொண்டு, ஒத்துழைத்தனர்.
பொதுமக்கள் சிலர் கூறியதாவது:இன்னும் மூன்று வாரங்கள், 'தளர்வில்லா ஊரடங்கு' அமலாக உள்ளது. இதற்கும், ஒத்துழைப்பு நல்குவோம். ஞாயிறன்று கூட, முன்பெல்லாம், திருப்பூரில் சில பின்னலாடை நிறுவனங்கள், ஆர்டர்களை முடிப்பதற்காக இயங்கிவந்தன.ஆர்டர்கள் உள்ள காலங்களில், 24 மணி நேரமும் முடங்காமல், இந்நிறுவனங்கள் இயங்கிக்கொண்டே இருந்தன. தொழிலாளர்களும், தேனீக்கள் போல சுறுசுறுப்புடன் பணிபுரிந்து வந்தனர்.ஊரடங்கு, தொழில் நிறுவனத்தினரையும், தொழிலாளரையும் முடக்கிப்போட்டாலும், மனதளவில் பக்குவப்படுவதற்கும், எதிர்காலச்சூழலை எதிர்கொள்வதற்கும் ஏற்ற தன்மையை, இது, இவர்களிடம் உருவாக்கி இருக்கிறது.
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும்கூட, சமூக இடைவெளி பின்பற்றுதல், முக கவசம் அணிதல், கைகளை கழுவுதல் போன்றவற்றை, தனக்காக என்றில்லாமல், பிறரது நலனை, அதாவது சமூகத்தின் நன்மை கருதி, தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணம், பொதுமக்களிடம் விதைக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக, அரசு, பல நேரங்களில், நற்செயல்களுக்காக விடுக்கும் அழைப்புகளை, பொதுமக்கள், 'கண்டுகொள்ளாத' சூழ்நிலை, இனி இருக்காது. அரசின் அறிவிப்புகள் நல்லதெனில் போற்றவும், அதில் பாதகங்கள் இருந்தால், தெரிவிக்கவும், பொதுமக்களிடம் தயக்கம் இருக்காது.ஊரடங்கு தளர்வு அமலில் இருந்தபோது, முக கவசம், பாதுகாப்பு கவச உடைகள் போன்றவற்றை தயாரித்து, நம் நாடு, இவற்றின் உற்பத் தியில், 'தன்னிறைவு' பெற திருப்பூர் உதவியது.
திருப்பூர் மாவட்ட மக்களுக்கு ஊரடங்கு என்றால் 'முடங்கவும்' தெரியும்; தளர்வு வழங்கினால், விதிமுறைகளுக்குட்பட்டு பணிகளை 'முடுக்கிவிடவும்' தெரியும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.மாவட்டத்தில், கடந்த ஜூன் மாத நிலவரப்படி, மொத்த கொரோனா பாதிப்பில், 50 சதவீதம் பேர் குணமாகியிருந்தனர்.
மார்ச் முதல் மே 2ம் தேதி வரை, 114 பேர் கொரோனாவில் சிக்கி, 100 சதவீதம் மீண்டனர்.இரண்டாவது கட்டமாக, நேற்று மாலை நிலவரப்படி, 1,154 பேர் பாதிக்கப்பட்டு, 801 பேர் மீண்டு வந்துள்ளனர். கொரோனா தொற்று கண்டறியப்படும் நபர்கள், கோவை அல்லது திருப்பூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.கொரோனாவில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை, கடந்த மாதம், 55 சதவீதமாக இருந்தது; கடந்த, 10 நாட்களில், 15 சதவீதம் உயர்ந்துள்ளது.
கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறுகையில்,''கொரோனா உறுதியானவர்களை, உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, சிகிச்சை வழங்கப்படுகிறது. மூன்று முதல் ஐந்து நாட்களில் குணமாகிவிடுகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்கப்படுத்தியதும், தானாக குணமடைகின்றனர்.கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், குணமடைவோர் விகிதம், 70 சதவீதமாக உயர்ந்துள்ளது; இறந்தவர் நீங்கலாக, 28 சதவீதம் பேர் ஆரோக்கியமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement