Advertisement

பெண் அதிகாரியை கண்டு அலறும் வனத் துறை!

Share
''சம்பளத்தை பிடிச்சுட்டாளேன்னு சங்கடத்துல இருக்கா ஓய்...'' என, நாயர் கடை விவாதத்தை ஆரம்பித்தார், குப்பண்ணா.

''யார் சம்பளத்தை, யாருவே பிடிச்சது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''தமிழகத்துல, நாலஞ்சு மாசமா, பள்ளிகள் எல்லாம் மூடிக் கிடக்கோல்லியோ... 'மாணவ - மாணவியரை பள்ளிக்கு வரவழைச்சு, சமூக இடைவெளியில உட்கார வச்சு, மதிய உணவு குடுக்கணும்...

''சமையல் கூடத்துல வேலை பார்க்கறவாளுக்கு சிறப்பு ஊதியம், கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கணும்'னு போன மாசம், 7ம் தேதி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்புல, ஒன்றிய அலுவலகங்கள் முன்னாடி போராட்டம் நடத்தினா ஓய்...

''இந்தப் போராட்டத்துல கலந்துண்டவா பட்டியலை சேகரிச்சு, இந்த மாச சம்பளத்துல, ஒரு தொகையை பிடிச்சுட்டா... இதனால, சத்துணவு ஊழியர்கள் நொந்து போயிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''ரொம்ப துாரம் அலைஞ்சு, வேலை பார்க்க முடியாதுன்னு சொல்லிட்டதால, தொகுதியை மாத்தி குடுத்திருக்காவ வே...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்த அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''திருச்சி மாவட்ட, அ.தி.மு.க.,வை, சமீபத்துல, மூணா பிரிச்சு, செயலர்களை அறிவிச்சாங்கல்லா... இதுல, திருச்சி கிழக்கு, மேற்கு, துறையூர் தொகுதிகள் அடங்கிய மாவட்டத்துக்கு செயலரா, சுற்றுலாத் துறை அமைச்சர் நடராஜனை நியமிச்சாவ வே...

''அவர், முதல்வரை பார்த்து, 'திருச்சி சிட்டிக்குள்ள இருக்கிற ரெண்டு தொகுதிகளை மட்டும் தான் என்னால பார்க்க முடியும்... 50 கி.மீ., தள்ளியிருக்கிற துறையூர் தொகுதியை கவனிக்க முடியாது... எனக்கு உடம்புலயும் தெம்பில்லை'ன்னு சொல்லிட்டாராம்...

''அப்புறமா தான், துறையூர் தொகுதியை, திருச்சி வடக்கு மாவட்டத்துல சேர்த்து, முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி கிட்ட குடுத்திருக்காவ வே...'' என, முடித்தார் அண்ணாச்சி.''இடமாறுதல் போட்டாலும், நகர மாட்டேன்னு அடம் பிடிக்கிறாங்க...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார், அந்தோணிசாமி.

''யாருப்பா அது...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''தேனி மாவட்டம், உத்தமபாளையம் வன சரகத்துல, மரம் வெட்டி கடத்துன விவகாரத்துல, ஒரு பெண் அதிகாரி மேல புகார் வந்துச்சுங்க... அவங்க மேல நடவடிக்கை எடுக்காம, மேலதிகாரிகள் சிலர் காப்பாத்தி விட்டிருக்காங்க...

''அப்புறமா, கம்பம் கிழக்கு வனச் சரகத்துக்கு, அதிகாரி இடமாறுதலாகி போனாங்க... அங்கேயும், 'கல்லா' கட்டுறதை நிறுத்தலை... வனத் துறை நிலங்கள்ல இருக்கிற ஏலக்காய் தோட்டங்கள், புளிய மரங்கள் எல்லாம் இவங்க கட்டுப்பாட்டுல வருதுங்க... இதுல, செமத்தியா வருமானம் பார்க்கிறாங்க...

''இது சம்பந்தமா நிறைய புகார்கள் போகவே, அவங்களை வேற இடத்துக்கு மாத்தியிருக்காங்க... ஆனா, 'ஏலக்காய் அறுவடை முடியுற வரை, இங்க இருந்து நகர மாட்டேன்'னு பிடிவாதமா, அங்கயே வேலை பார்க்கிறாங்க... இவங்க கணவரும், இதே துறையில, கால்நடை மருத்துவரா இருக்காருங்க...

''அவருக்கு மேலிட செல்வாக்கு ஜாஸ்தி... அந்த துணிச்சல்ல ஆட்டம் போடுற அதிகாரியைப் பார்த்து, தேனி வனத் துறையே திணறுதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''வாங்க கலைவாணன்... ஆத்துல, ஜீவனா நல்லாயிருக்காங்களா...'' என, நண்பரிடம் குப்பண்ணா கதை பேச, மற்றவர்கள் கிளம்பினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    வயதாகிறது, கடமையாற்ற முடியவில்லை என்றாலும், பதவியை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, கான்ட்ராக்ட், கமிஷனை ஒழுங்காக தேற்றத்தானே இவர்கள் வருகிறார்கள்

Advertisement