Advertisement

ஹைவேஸ் ரோட்டில் டீல் பேசும் அமைச்சர்!

Share
''அந்த, சார் - பதிவாளரைக் காப்பாத்த, உயரதிகாரிகள் படாதபாடு பட்டுண்டு இருக்கா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.''என்ன விஷயமுன்னு விளக்கமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''மதுரை தெற்கு பதிவு மாவட்டத்துல இருக்கற, ஒரு சார் - பதிவாளர் அலுவலகத்துல, சில பத்திர பதிவுகள் முறைகேடா நடந்ததாக, வழக்கு இருக்கு... சம்பந்தப்பட்ட, சார் - பதிவாளரும் வழக்குல சேர்க்கப்பட்டு இருக்கார் ஓய்....''இந்த வழக்குல, உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்கு, பதிவுத்துறை தரப்புல, சரியான பதில் கொடுக்கலை... விவகாரம் சிக்கலானதால, பதிவுத்துறை ஐ.ஜி., பதில் அளிக்கணும்ன்னு உத்தரவு வந்துருக்கு ஓய்...''என்ன ஆனாலும், சம்பந்தப்பட்ட சார் - பதிவாளரை காப்பாத்தியே ஆகணுமுன்னு, மேலதிகாரிகள் வறிஞ்சு கட்டிண்டு வேலை பார்க்குறா... ''ஒருத்தருக்காக, ஒரு துறையே கஷ்டப்படறதைப் பார்த்தா, வசூல், எல்லா இடத்துக்கும் பாஞ்சிண்டிருக்குன்னு புரியறதுன்னு எல்லாரும் பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

அவ்வழியே சென்றவரிடம், ''விஜய் ஆனந்து... ஒரு போன் பண்ணக் கூடாதா பா...'' என, அக்கறையுடன் விசாரித்தார், அன்வர்பாய்.

''தலைவரை மாத்த முயற்சி பண்ணுறாங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அந்தோணிசாமி.'

'எங்கேன்னு, விபரமா சொல்லும் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''தமிழக மின் வாரிய தலைவராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரியான, பங்கஜ்குமார் பன்சால், ஜூன் மாசம் நியமிக்கப்பட்டாருங்க... அவரு, பல ஆயிரம் கோடி ரூபாய் பணப்புழக்கம் உள்ள மின் வாரியத்துல நடக்குற முறைகேட்டைத் தடுக்க, பண பரிவர்த்தனை, கோப்புகள் அனைத்தையும், 'டிஜிட்டல்'மயமாக்கி வராருங்க...''அதிகாரிகள் இடமாறுதல் உட்பட, நிர்வாக பணிகளிலும் தப்பு நடக்காமல் இருக்க, நடவடிக்கை எடுத்துட்டு வராருங்க... அப்புறமென்ன, மோசடியில் ஊறிபோன அதிகாரிகள் சிலர், அரசியல்வாதிகள் உதவியுடன், பன்சாலை இடமாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வராங்களாமுங்க...'' என விளக்கினார், அந்தோணிசாமி.'

'அந்த அமைச்சர், ஹைவேஸ் ரோட்டுல போறப்போ தான், 'டீல்' பேசுறாராம் பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அன்வர்பாய். ''என்ன சொல்றீர் ஓய்...'' என, அதிர்ச்சியுடன் கேட்டார், குப்பண்ணா.''அரசு சார்ந்த ஒப்பந்தம், துறை ரீதியிலான டிரான்ஸ்பர், கவனிப்பு போன்ற விவகாரங்களுக்காக, பிரத்யேக ஸ்டைல் வைச்சிருக்காரு பா...''அதாவது, 'டீல்' பேச வரும் நபர், புதுக்கோட்டை ஹைவேஸ் ரோட்டில், குறிப்பிட்ட இடத்தில் நிற்கணும்... அமைச்சர், தனி சொகுசு காருல வருவாரு... அந்த காருல, சம்பந்தப்பட்ட நபர் ஏறி, செங்கல்பட்டு வரை பயணிப்பாரு பா...''காருலயே, 'டீல்' பேசி முடிஞ்சதும், செங்கல்பட்டுல இறங்கும் அமைச்சர், அங்கிருந்து, அரசு வாகனத்துல, சென்னைக்கு போவாரு... 'டீல்' பேசிய நபரோ, வேறு ஏதேனும் ஒரு வாகனத்துல, சொந்த ஊருக்கு போவாரு பா...'' என, முடித்தார், அன்வர்பாய்.

''என்ன தான் சுத்தம், சுகாதாரம்னு பேசினாலும், உள்ளுக்குள்ள அசிங்கமா தான் இருக்கு ஓய்...'' என, குப்பண்ணா, 'கமென்ட்' அடிக்க, நண்பர்கள் இடத்தை காலி செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    அந்த அமைச்சர், ஹைவேஸ் ரோட்டுல போறப்போ தான், 'டீல்' பேசுறாராம் பா...' காரையோட்டும் டிரைவர் அவ்வளவு நம்பிக்கைக்கு உரியவர்போலும். ஏற்கனவே ஒருமுறை ரெய்டுபோது சிக்கிய பேப்பர்களை தூக்கிக்கொண்டு ஓடிய நபராக இருக்கும்.

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    பதவி இருக்கும்வரை கை அரிப்பு இருக்கும். ஒருமுறை வசமா மாட்டிக்கொண்டாலும் வருமானவரித்துறை கப்சிப்புனு இருக்கே. எனவே கைசுத்தம் சுகாதாரத்திற்கும் நேர்மைக்கும் புறம்பாகத்தான் இருக்கும்..

  • Uthiran - chennai,இந்தியா

    முன்னாள் துறை செயலரை மத்திய அரசு விசாரணை செய்ய ஆரம்பித்து விட்டது. அடுத்தது மந்திரியா?

Advertisement