Advertisement

விநாயகர் சதுர்த்திக்கு ஸ்டாலின் வாழ்த்து?

Share
''போராட்டத்துல ஈடுபட முடிவு பண்ணியிருக்கா ஓய்...'' என, பெஞ்சில் அமர்ந்தார், குப்பண்ணா.

''யாரை சொல்லுதீரு...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''சிவில் சப்ளை ஊழியர்கள் மாதிரி, அதே பணியில இருக்கற கூட்டுறவுத் துறை ரேஷன் ஊழியர்கள், தங்களுக்கு ஒரே சம்பளம் வழங்கணும்... உணவு பொருட்களை, பொட்டலங்களா, பொதுமக்களுக்கு வழங்கணும்னு பல கோரிக்கைகளை, வலியுறுத்திண்டு வரா ஓய்...

''இது சம்பந்தமா, தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர், அடுத்தடுத்த போராட்டங்கள்ல ஈடுபட்டுண்டு இருக்கா... ஆனாலும், இவா கோரிக்கைகளை, அரசு காதுலயே போட்டுக்கலை ஓய்...

''சமீபத்துல, புதுக்கோட்டை மாவட்ட வழங்கல் அலுவலர்கள், பறக்கும் படை அதிகாரிகள், கெடுபிடி வசூல்ல ஈடுபடறதா நிறைய புகார்கள் வருதாம்... ''இதை எல்லாம் கண்டிச்சு, சீக்கிரமே பெரிய அளவுல போராட்டத்துல ஈடுபட, ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் தயாராகிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''இப்படியே போனா, மாவட்டமே, 'வாஷ் அவுட்' ஆயிடும்னு சொல்றாங்க...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார், அந்தோணிசாமி.

''என்ன விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''திருவண்ணாமலை வடக்கு மாவட்ட, அ.தி.மு.க., செயலரா, துாசி மோகன் இருக்கார்... தெற்கு மாவட்ட செயலரா இருந்த, அறநிலையத் துறை அமைச்சர், ராமச்சந்திரன் பதவியை பறிச்சு, 'மாஜி' அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் குடுத்துட்டாங்க...

''கலசப்பாக்கம், எம்.எல்.ஏ., பன்னீர்செல்வத்துக்கும், அக்ரிக்கும் ஏழாம் பொருத்தம்கிறதால, இதுக்கு முன்னாடி, தெற்கு மாவட்டத்துல இருந்த அந்த தொகுதியையும், அமைச்சர் ராமச்சந்திரனின் தொகுதியான ஆரணியையும், வடக்கு மாவட்டத்துக்கு தள்ளி விட்டுட்டாங்க...

''அதுக்கு பதிலா, வடக்கு மாவட்டத்துல இருந்த போளூர், கீழ்பெண்ணாத்துார் தொகுதிகளை, தெற்கு மாவட்டத்துல சேர்த்துட்டாங்க... அவங்கவங்க கோஷ்டிக்கு ஏத்த மாதிரி, மாவட்டங்களை பிரிச்சுக்கிட்டதுல, தொண்டர்கள் சோர்ந்து போயிருக்காங்க...''ஏற்கனவே, 'மாவட்டத்துல, எட்டு தொகுதிகள்ல, மூணு தான் ஆளுங்கட்சி வசம் இருக்கு...

இப்படியே போனா, வர்ற தேர்தல்ல இதுவும் கூட கையை விட்டு போயிடும்'னு, தொண்டர்கள் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்க சொல்லிட்டாவ வே...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''கந்த சஷ்டி கவசத்தை, 'கருப்பர் கூட்டம்' விமர்சித்த விவகாரத்துல, தி.மு.க.,வுக்கு எதிராக, ஹிந்து அமைப்புகள் எல்லாம் குரல் கொடுத்தாங்கல்லா... இந்த எதிர்ப்பை சரிக்கட்ட, தி.மு.க., விவசாய அணி மாநில நிர்வாகி ஒருத்தர், 'முருகப் பெருமானின் ஆடிப்பெருக்குத் திருநாளை மனதார வாழ்த்துகிறேன்'னு, முருகன் படத்தோட போஸ்டர் அடிச்சு ஒட்டினாரு வே...

''இதே மாதிரி, ஹிந்துக்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து போஸ்டர் அடிக்கணும்னு, தி.மு.க., மேலிடத்துல இருந்து உத்தரவு போட்டிருக்காவ... வர்ற, 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவுக்கும், வாழ்த்து போஸ்டர் ஒட்ட இருக்காவ... கட்சி தலைவர் ஸ்டாலினே கூட, வாழ்த்து அறிக்கை விட வாய்ப்பிருக்குன்னும் சொல்லுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''எல்லாம் தேர்தல் செய்ற மாயம்கறேன்... என்னத்தை சொல்றது போங்கோ...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • Winner 2020 -

  Winner 2020

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  முருகபெருமானுக்கும் ஆடிப்பெருகுக்கும் என்ன சம்பந்தம். ஆடி கிருத்திகைக்கு கோஷம் போட்டால் ஒத்துக்கொள்ளலாம். விநாயக சதுர்த்தி வாழ்த்துசொல்லப் போறாங்களா? இனி திமுக காரன் பிள்ளையார் சிலைமுன் அமர்ந்து ஒருவாரம் பஜனை செய்தால்கூட ஒருவனும் நம்ப மாட்டான். கொழுக்கட்டை கொடுத்தால் தின்ன வருவான்..

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  உண்மையான இந்துக்கள் இவரை போன்ற பச்சோந்திகளுக்கு ஓட்டு அரசியவாதிகளுக்கு ஒட்டு போடக்கூடாது.

 • Darmavan - Chennai,இந்தியா

  இந்த திருட்டு பச்சோந்திகளை ஹிந்துக்கள் நம்பக்கூடாது.தேர்தலுக்கு பின் பழைய நிறம் வந்துவிடும்

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  வோட்டு கைவிட்டுப் போகுமென்றால் ஆடிப்பெருக்கு என்ன, அமாவாசை, ஏகாதசிக்குக்கூட வாழ்த்து சொல்வார்கள்

Advertisement