Advertisement

டவுட் தனபாலு

Share
தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: புதிய கல்வி கொள்கையால், உயர் கல்விக்கு மாணவர்கள் செல்வது தடுக்கப்படும்; தாய்மொழி புறக்கணிக்கப்படும்; அனைவருக்கும் கல்வி கிடைக்காது. இந்தக் கல்வி கொள்கை அமலானால், பத்து ஆண்டுகளில், கல்வி, சிலருக்கு மட்டும் சொந்தமானதாகி விடும். புதிய கல்விக் கொள்கையை, தமிழக அரசு மறுக்க வேண்டும்; நிராகரிக்க வேண்டும்; எதிர்க்காமல் மவுனம் சாதிக்கக் கூடாது.

'டவுட்' தனபாலு: இப்படி நீங்கள் கொளுத்தி போட்டு விடுவீர்கள்; உங்கள் கூட்டணி கட்சித் தலைவர்கள், போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு விடுவர். இதனால், தமிழகம் அமைதியில்லாமல் மாறி விடும். எதற்கு வம்பு என, மத்திய அரசு, தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளித்து விடும். இப்படித் தானே, நல்ல பல திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைக்காமல் போகின்றன. இது தானோ, உங்கள் திட்டம் என்ற, 'டவுட்' வலுவாகிறது!

***

பத்திரிகை செய்தி: சென்னையில், தீரன் சின்னமலை படத்திற்கு, மலர் துாவி வணங்கும்போது, முதல்வர் இ.பி.எஸ்., செருப்பு அணியாமல் உள்ளார். ஆனால், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'ஷூ' அணிந்துள்ளார். இப்படங்களை, அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப அணியின், சென்னை மண்டல செயலர், 'அஸ்பயர்' சுவாமிநாதன், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டு, 'இருவருக்கும் உள்ள வித்தியாசம்' என, குறிப்பிட்டுள்ளார்.

'டவுட்' தனபாலு: இந்த கொரோனா நேரத்தில், காலில் செருப்பு, சாக்ஸ், ஷூ அணியாமல் முதல்வர், இ.பி.எஸ்., மரியாதை செலுத்தியுள்ளது, பல விதமான, 'டவுட்'டுகளை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரை அவரின் அதிகாரிகள் தவறாக வழிகாட்டி இருப்பரோ அல்லது ஸ்டாலினுக்கு அரசியல் சிக்கல் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, முதல்வர் காலில் செருப்பு அணியவில்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!

***

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: தமிழகத்தில், மருத்துவம் தவிர்த்து, மீதமுள்ள அனைத்து பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்வுகளுக்கு, வசூலிக்கப்பட்ட தேர்வுக் கட்டணத்தை, உடனே பல்கலையில் செலுத்தும்படி, கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலை உத்தரவிட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எழுதாத தேர்வுக்கு கட்டணம் வசூலிப்பது தவறு. அந்த கட்டணத்தை மாணவர்களிடம் திருப்பி கொடுத்தால், அது, கல்வி சார்ந்த பிற செலவுகளுக்கு பயன்படும்.

'டவுட்' தனபாலு: யானை வாய்க்குள் சிக்கிய கரும்பு எப்படி வெளியே வராதோ அதுபோல, கல்வி நிறுவனங்களிடம் கொடுத்த பணம், திரும்ப கிடைக்க வாய்ப்பில்லை. இதை நன்கு தெரிந்தும், எதற்கும் சொல்லி வைப்போம்; சில பயந்த நிறுவனங்கள் கொடுத்தால் லாபம் தானே என எண்ணி, அறிக்கை விட்டுள்ளீர்களோ என்ற, 'டவுட்' வருகிறது!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • Subramanian Sundararaman - Chennai,இந்தியா

    இந்தி படிக்க விருப்பமா , ஏன் என மாணவர்களிடம் ஒரு ஊடகம் கூட கேட்கவில்லை . அரசியல்வாதியிடம் கேட்டால் அவர்களுக்கு எது கொள்கையோ அதைத்தான் சொல்லுவார்கள் . ஒரு பள்ளியிலும் இந்தி கற்றல் கூடாது என அரசியல்வாதிகள் சொல்லுவார்களா ?

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    நவோதயா பள்ளிகள் ஏழைகளுக்கும் கல்வி கிடைக்குமாறு பல மாநிலங்களில் உள்ளன இங்கு அதனை அண்டவிடவே இல்லை தங்களின் பள்ளிகள் அநியாய கட்டணம் வாங்கிக் கொழிக்க வேண்டும் என்றுதான்

  • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

    நல்ல பல திட்டங்கள் தமிழகத்திற்கு கிடைக்காமல் போக, திமுக தலைமைதான் காரணம். இதைப்பற்றி மக்களுக்கென்ன கவலை? பணம் வாங்கிக்கொண்டு திமுகவுக்கு வோட்டு போடுவார்கள். பணத்திற்கு வோட்டு வங்கி இருக்கும்வரை திமுக காட்டில் மழைதான்.

Advertisement