Advertisement

வள்ளுவர் தந்த மனித வள மேம்பாட்டு சிந்தனை

Share
இன்றைய நாட்களில் அதிகமாகப் பேசப்படும் ஒரு சொல் குழுமம் என்பதாகும். குழுமம் என்பதற்கு “சட்ட ரீதியாக ஏற்படுத்தப்பட்டு ஒரு குழுவினரால் நிர்வகிக்கப்படும் நிறுவனம்” என்பது பொருளாகும்.


குழும நிறுவனம்(corporate company) பெரிதும் வருவாய் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படுவதாகும்.நாம் விரும்புகிறோமோ இல்லையோ இவற்றில் பணிபுரிய வேண்டிய கட்டாய நிலையில் இன்றைய இளைஞன் இருக்கிறான். பணிக்கு ஒருவரைத் தெரிவு செய்யும் போதே திறமையின் அடிப்படையில் தெரிவு செய்வது குழுமங்களின் அடிப்படைப் பண்பாடாகும்.


அதனாலேயே இத்தகைய நிறுவனங்கள் வெற்றிகரமாகச் செயல்படுகின்றன; ஒருவர் திறமையாகச் செயல்படும் வரையில்தான்இந்நிறுவனங்களில் அவருக்கு மதிப்பு! இது சரியா தவறா என்ற வினாவிற்கு இங்கு இடமில்லை. இது வாழ்தலுக்காகப் போராடும் மனிதனின் இன்றைய நிலை! இத்தகைய உலகில் ஒருவன் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமானால் தனது திறன்களை மேம்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!

திறன்களுக்கு முக்கியத்துவம்பணிக்கு ஒருவரைத் தெரிவு செய்யும்போது அவரது திறன்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. ஒருவரின் திறமையை முன்னிறுத்து வது குறித்துத் திருக்குறள் கூறும் சில கருத்துக்கள் சிந்தித்து உணரத்தக்கனவாக இருக்கின்றன.


திருவள்ளுவர்,“தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்தேறுக தேறும் பொருள் “என்று ஒரு குறட்பாவை வகுத்திருக்கிறார். திருக்குறளின் பொருட்பாலில் அரசியலில் கூறப்பட்டுள்ள இக்குறட்பாவின் கருத்து, 'ஓர் அரசன் ஒருவரை நன்கு ஆராய்ந்து தெரிவு செய்து கொள்ள வேண்டும்; அவ்வாறு தெரிவு செய்து பணியில் இணைத்துக் கொண்ட பின் அவர் மீது சிறிதுகூட ஐயப்பாடு கொள்ளக்கூடாது' என்பதாகும். இது குழும நிறுவனங்கள், “தகுதியின் அடிப்படையில் ஒரு பணியாளரைத் தெரிவு செய்யும் நடைமுறையை ஒத்த கருத்தாகும்.

பணியாளர் வகைகள்ஒரு நிறுவனத்தில் உகந்த சூழ்நிலைகளில் மட்டும் செயல்படுபவர்கள், எத்தகைய கடினமான சூழ்நிலைகளிலும் பணிபுரியும் வல்லமை படைத்தவர்கள், குறிப்பிட்ட அளவு மட்டும் பணிபுரிபவர்கள், புதிய தேடல் மனப்பான்மையும் புதிதாகப் படைக்கும் கற்பனைத் திறமும் கொண்டவர்கள் என்றவாறு பலதரப்பட்ட பணியாளர்கள் இருப்பார்கள்; இவர்களுள் கடினமான சூழ்நிலைகளில் பணிபுரிந்து வெற்றி பெறக்கூடியவர்களையே குழும நிறுவனங்கள் விரும்பி ஏற்றுக்கொள்ளும்.


இது 'தகுதியின் அடிப்படையில் ஒருவரைப் பணிக்குத் தெரிவு செய்தல்' எனப்படும். மேலே கூறிய குறளின் கருத்து இந்த நடைமுறையுடன் ஒத்திருப்பதை உணரலாம்.ஒரு நிறுவனத்தில் சிறப்பான பணிகளை ஆற்ற அன்பு, அறிவு, தீவிரமான விருப்பங்களின்மை, கலங்காத தன்மை முதலான பண்புகள் மிகவும் தேவை. ஒரு பணிக்கு விண்ணப்பிக்கும் அனைவரிடமும் பணிக்குரிய அடிப்படைக் கல்வித் தகுதி, அனுபவம், ஆளுமைப் பண்புகள், தோற்றத்தில் சீர்மை ஆகியவை சம அளவில் இருக்கும் என்பது தெரிந்ததுதான்!

அலுவலரின் அன்புஎனவே சமமான தகுதிகள் உடைய பலருள்ளும் ஒருசிலரை மட்டும் தேர்ந்தெடுக்க வேறு சில கூடுதல் தகுதிகள் இருக்கிறதா என்று ஆய்வு செய்து தெரிவு செய்வார்கள். இந்த நடைமுறை குறித்து வள்ளுவர் கூறுகிறார் :

'அன்பு அறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு'

இக்குறட்பாவின் பொருள், 'தலைவனிடத்து அன்பு, செய்ய வேண்டிய செயல் குறித்த அறிவு, செயல்படும்போது கலங்காமை, தேவைக்கு அதிகமாக ஆசைப்படாமலிருத்தல் ஆகிய பண்புகள் ஒருவனிடம் இருக்குமானால் அவனே பணிக்குத் தகுதியுடையவன்' என்பதாகும். இக்குறட்பா குறித்துப் பரிமேலழகர், “ஆடற்கு (ஆளும் தொழிலுக்கு) உரியானது இலக்கணம் கூறப்பட்டது” என்று உரை கூறுகின்றார்.


இக்குறட்பா ஆட்சியில் பங்கு வகிக்கும் இரண்டாம், மூன்றாம் நிலை அலுவலர்களின் திறன் பற்றிக் கூறுவதை புரிந்து கொள்ளலாம். இக்குறட்பாவில் கூறப்படும், 'அன்பு' என்ற சொல்லிற்கு நிறுவனத்தின் தலைவர் மீதுள்ள விசுவாசம் என்பதுடன் நிறுவனத்தின் பணியாளர்கள் மீதும் வாடிக்கையாளர்கள் மீதும் அலுவலர் மேற்கொள்ளும் அன்பு என்றும் சிறிது விரித்துப் பொருள் கொள்ளலாம்.

தெளிவு என்ன'அறிவு' என்பதற்கு ஓர் அலுவலர் தனது பணி குறித்த அறிவு என்பதுடன் பணிகளில் புதியன புகுத்தும் அறிவு என்றும் பணியில் நெருக்கடிகள் ஏற்படும்போது அவற்றை எதிர் கொண்டு வெற்றி காண உதவும் நுண்ணறிவு என்றும் பொருள் கொள்ளலாம்.தேற்றம் என்பதற்குத் தெளிவு என்பது பொருள்.


தெளிவு என்பது ஒரு பணியைத் தொடங்கும் போது அதனை எவ்வாறு மேற்கொண்டு முடிப்பது என்பது குறித்த வரைவுத்திட்டம் என்றும் பொருள் கொள்ள இடமிருக்கிறது. ஒரு பணியை இன்னவாறு தொடங்கி இன்ன முறையில் நடத்தி முடித்தால் இன்ன பயன் கிடைக்கும் என்று உறுதிபடத் திட்டமிடுதல் தெளிவு(தேற்றம்) எனப்படும்.நிறுவனத்தின்

வருவாய்அவாவின்மை என்பது ஒரு பணியாளர் தன்னால் நிறுவனத்திற்கு எவ்வளவு வருவாய் வரினும் அது அத்தனையும் நிறுவனத்திற்கே உரியது என்று எண்ணவேண்டும் என்பதைக் குறிக்கும். “இது நம் உழைப்பினால் வந்த பொருள்தானே! நாம் சிறிது எடுத்து கொண்டால் என்ன கெட்டு விடப் போகிறது” என்ற எண்ணம் ஒரு சிறந்த பணியாளருக்கு வந்துவிடக்கூடாது. ஏனென்றால் பணியாளர்கள் வருவதும் மாறிச் செல்வதும் இயல்பு; ஆனால் நிறுவனம் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டியது.

ஆகவே 'நிறுவனத்தின் வருவாய் நிறுவனத்திலேயே இருக்க வேண்டும்' என்று எண்ணுபவர்களைக் கண்டறிந்து பணியில் சேர்க்க வேண்டும் என்று பொருளை விரித்துக் காண்பது திருக்குறளின் பொருத்தமுடைமையைக் காட்ட உதவும்.

இன்றைய தேவைக்கு குறள்திருக்குறளுக்கு மரபு வழியாகப் பொருள் உரைப்பவர்கள் இக்குறட்பாவினை, “உரியவராகத் தெளியப்பட்டாரை அவர் செய்யவல்ல வினைகளை அறிந்து அவற்றின் கண்ணே ஆளும் திறம்” என்று அரசனை முதன்மைப்படுத்தி விளக்கம் கூறுவார்கள். ஆனால் ஒரு பனுவலை ஒரே கோணத்தில் பயிலாமல் மாறுபட்ட கோணங்களில் படித்து விளக்குவதே இன்றைய தேவை.


மாறுபட்ட கோணத்தில் பயிலும்போது பழமையான திருக்குறள் இன்றைய உலகத்தின் தேவைகளுக்கும் ஈடுகொடுத்து நிமிர்ந்து நிற்கிறது.பணியாளரின் செயல்திறன்நிறுவன மேலாண்மையில் சிறந்த கூறு அதிகாரமளித்தல். மனித வளத்தினை மிகச் சிறந்த முறையில் பயன்படுத்தி நிறுவனத்தை வளர்த்தெடுக்க வேண்டுமானால் பணி செய்யும் அலுவலர்களுக்கு உரிய மரியாதையையும் பணியைச் செய்யும்போது தேவையான அவசர முடிவுகளை மேற்கொள்ளும் அதிகாரத்தையும் வழங்க வேண்டும்.


ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்த பின்னர் அவரது செயல்பாடுகளில் மேலதிகாரி தேவையில்லாமல் அடிக்கடி தலையிடக்கூடாது; அது ஒரு பணியாளரின் செயல்திறனைப் பாதிக்கும்; தனது தொலைநோக்குப் பார்வைக்கேற்றவாறு பணியை முடிக்கும் சுதந்திரத்தைப் பணியாளருக்கு வழங்க வேண்டும்.


இதே கருத்தை,

“வினைக்குரிமை நாடிய பின்றைஅவனை
அதற்குரிய வனாகச் செயல்”

என்ற குறட்பாவில் வள்ளுவர் கூறுகிறார்.இன்றைய மனித வளச்சிந்தனையாளர்கள் உலக நாடுகள் பலவற்றில் நடைமுறையில் உள்ள மனித வள மேம்பாட்டுச் சிந்தனைகளைப் பயின்று நிறுவனங்களை நடத்தும் முறைகளை கற்பிக்கின்றனர்.


ஆனால் நமது வள்ளுவப் பேராசான் உலகியலை உற்று நோக்கி கூறியுள்ள சிந்தனைகள் இன்றைய குழும உலகிற்கும் பொருந்தக் கூடிய முறையில் அமைந்திருப்பது தமிழுக்குக் கிடைத்த பெருமை.

-முனைவர் ம. திருமலை

முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

76399 33367

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Appan - London,யுனைடெட் கிங்டம்

    EXCELLENT ...நன்றி

Advertisement