Advertisement

டவுட் தனபாலு

Share
இ.பி.எஸ்., தமிழக முதல்வர்: கொரோனா தொற்று பரவலை தடுக்க, அரசு பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மருத்துவ நிபுணர்கள் குழு அளித்த ஆலோசனைகளை ஏற்று, அரசு எடுத்த நடவடிக்கைகளால், நோய் தொற்று குறைந்து கொண்டிருக்கிறது. சென்னையை போல, பிற மாவட்டங்களிலும், காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. சிகிச்சைக்கு தேவையான மருத்துவ வசதிகளை, அரசு செய்து கொடுத்துள்ளது.

'டவுட்' தனபாலு: 'கொரோனாவிலிருந்து தமிழக மக்களை காக்க' என, நீங்கள் எந்த திட்டத்தை அறிவித்தாலும், மக்கள் அதை நம்பத் தயாராக இல்லை. பல மாநில முதல்வர்கள், 'ஊரடங்கால் எந்த பயனும் இல்லை' எனக் கூறிய பின்னும், தமிழகத்தில் நீங்கள் தொடர்வது, வரவிருக்கும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்துமோ என்ற, 'டவுட்' வந்து விட்டது!

***

தி.மு.க., மருத்துவ அணி துணைத் தலைவர், டாக்டர் சரவணன்: கொரோனா தொடர்பாக, அ.தி.மு.க., அரசும், அமைச்சர்களும், கொடுக்கும் புள்ளிவிபரங்களில், குளறுபடிகள் உள்ளன; கொரோனா எதிர்ப்பு விகிதத்தை அரசு மறைக்கிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, முக கவசத்தை மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என, மார்ச், 12ல், சட்டசபையில், தி.மு.க., தான், முதல் குரல் எழுப்பியது.

'டவுட்' தனபாலு: தமிழகத்தை பொறுத்தமட்டில், 'எல்லா' விஷயங்களிலும், தி.மு.க., தான் முன்னணி என்பதில், மக்களுக்கு, 'டவுட்' இருக்க முடியாது. எனினும், தமிழக அரசுக்கு எதிராக, இப்படி தினமும், ஏதாவது ஒரு, தேவையற்ற முறைகேடு புகாரை கூற வேண்டும் என்பது, கட்சியின் சமீபத்திய கொள்கையோ என்ற, 'டவுட்டும்' மக்களுக்கு வருகிறது!

***

தமிழக, டி.ஜி.பி., திரிபாதி: ஏழு ஆண்டுகள் மற்றும் அதற்கும் குறைவான தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபடுவோரை கைது செய்வது குறித்து, உச்ச நீதிமன்றம், ௨௦௧௪ல் தீர்ப்பு அளித்து உள்ளது. அதன்படி, எந்த நபரையும், எவ்வித முகாந்திரமும் இன்றி, கைது செய்யக் கூடாது. இவற்றை முறையாக செய்யாத, விசாரணை அதிகாரிகள் மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: அத்துமீறும் போலீசார், சட்டத்தை மதித்து நடக்காத போலீசார், பணம் பறிக்கும் சில அதிகாரிகளுக்கு, இந்த நவீன கால சட்டங்களும், மக்களின் சுதந்திரமும் சரிவர தெரியவில்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது. இன்னமும், அரை டிரவுசர் போட்ட, அந்த கால போலீஸ் மாதிரியே நினைத்துக் கொண்டு, ஆங்காங்கே அராஜகங்களில் ஈடுபடுகின்றனர். அத்தகையோருக்கு, உங்கள் உத்தரவு எச்சரிக்கையாக அமையட்டும்!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    எதிர்க்கட்சி எந்த ஆலோசனையும் கொடுப்பதில்லை என்று புகார் அடுக்கும் முதல்வர் , பல பிரதிநிதிகள் தொற்றுக்கு ஆளானபின் தான், பொது மக்களை நினைத்துப் பார்த்து mukam kavanam தருகிறார். ஊரடங்கு காலத்தில், இப்போதுதான் கொரானாவிலிருந்து மீண்ட அமைச்சர் ஐநூறு பேருடன் மாலை, சால்வை என்று கூடிக் கும்மாளமிடுகிறார். அவரை ‘டச்’ பண்ண முதல்வரால் முடியவில்லை. பின் சாமானியனைக் கேள்வி கேட்க இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?

Advertisement