Advertisement

மக்கள் என்ன செய்ய வேண்டும்?

Share
கொரோனா வைரஸ், உலகம் முழுதும் பெருந்தொற்றாக பரவி, பல துன்பங்களையும், பெருமளவு உயிர் சேதத்தையும் விளைவித்து வருகிறது. நம் நாட்டில், அரசு, பல கட்டங்களாக ஊரடங்ககை அமல்படுத்தி, கொரோனா தொற்று அதிகமாகாமல் தடுக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.


ஆயினும் தொற்று குறைந்த பாடில்லை. இப்படியே, கால வரையின்றி ஊரடங்கை தொடர முடியாது என்பது யதார்த்தம். ஆகவே, மக்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்து, செயலாற்ற வேண்டியது அவசியம்.

இந்நிலையில், மக்களை நோயிலிருந்தும் அது பற்றிய பீதியிலிருந்தும் எப்படி பாதுகாப்பது என்பது தான் இப்போதைய கேள்வி.கொரோனா தொற்று ஏற்படாத வண்ணம், மக்கள் தங்களை கவனமாக பாதுகாத்து, தங்கள் வேலைகளை தொடரும் படியான அவசியம் ஏற்பட்டுள்ளது. அதற்கு மனதளவில், நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

கடந்த, ஆறு மாத நிகழ்வுகளை கண்காணித்ததில், எல்லா அறிவுரைகளையும், பாதுகாப்பு நெறிமுறைகளையும் சட்டை செய்யாமல், தங்கள் விருப்பம் போல சுற்றித்திரிந்த பலருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்களால், பிறருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. அத்தகையோரின் அலட்சியம் காரணமாகவே, இவ்வளவு தீவிரமான நோய் தடுப்பு முயற்சிகளுக்கு பிறகும், நோய் தொற்று அதிகமாகியபடியே இருக்கிறது.

கவனம் தேவை
நோய் தொற்று உள்ளவர்களில், 80 சதவீதம் பேர், எவ்வித அறிகுறியில்லாமல், மிக சாதாரணமாக நடமாடிக் கொண்டிருப்பர். 15 சதவீதம் பேர், மிகவும் லேசான அறிகுறிகள் தோன்றி, எந்தவித சிரமமும் இன்றி, இயல்பு நிலைக்குத் திரும்புவர். மீதி இருக்கும், 5 சதவீதம் பேரை, 'பலகீனமான பிரிவு' எனப்படும், 'வல்னரபில் குரூப்' என்கின்றனர். இத்தகையோர், 60 வயதை கடந்த முதியோர் மற்றும் ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், சிறுநீரக நோய், நுரையீரல் நோய் போன்றவற்றால் ஏற்கனவே அவதிப்படுவோர். இவர்களுக்கு தொற்று ஏற்பட்டால், சற்று தீவிரமான அறிகுறிகளை காட்டும்; உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்.

இந்த, 5 சதவீத மக்களை தான், அதிக கவனத்தோடும், பரிவோடும், பாதுகாத்து வர வேண்டும். ஆகவே, சாதாரணமான ஆரோக்கியமான மக்கள் எந்தவித உடல் நோய்களும் இல்லாதோர், கொரோனா பற்றி தேவையற்ற பீதி அடைய வேண்டியதில்லை. ஆனால், அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். சற்றும் அலட்சியம் காட்டாமல், மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


குறிப்பாக:
*மிகவும் அவசியமான தேவைகளுக்கு மட்டும், கட்டாயம், 'மாஸ்க்' அணிந்து வெளியே செல்ல வேண்டும்

*வெளியே செல்லும்போது, தனிமனித இடைவெளியை, 3 முதல், 6 அடி வரை தவறாமல் பின்பற்ற வேண்டும். கை குலுக்குவது, கட்டி தழுவுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்

*சானிடைசர் இருக்கும் இடத்தில் எல்லாம், அதை பயன்படுத்த வேண்டும்; வீட்டிற்கு வந்தவுடன், சோப் கொண்டு கை கழுவ வேண்டும்

*மக்கள் நெருக்கம் நிறைந்த இடங்களில், குறிப்பாக கட்டடங்களுக்குள் இருக்கும் கூட்டங்களுக்கு போகாமல் தவிர்க்க வேண்டும்.

இந்த, நான்கு நெறிமுறைகளையும் தவறாமல் முழு ஈடுபாட்டு டன் கடைப்பிடிப்பதன் மூலம், தொற்று ஏற்படாமல் நிச்சயமாக தவிர்க்க முடியும்.

நம் தேவை என்ன?
மருத்துவ உலகில், கீழ்கண்ட அறிவுரைகள் சொல்லப்படுகின்றன.

*மாஸ்க் அணிவது, 'வென்டிலேட்டரை' விட நல்லது

*வீட்டிலிருப்பது, மருத்துவமனை, ஐ.சி.யு.,வில் இருப்பதை விட நல்லது

*வருமுன் காப்பது, மருத்துவம் செய்வதை விட நல்லது.

எனவே, இதை நாம் புரிந்து, நமக்கு எது வேண்டும் என்று தீர்மானித்து செயல்பட வேண்டும்.இந்த வைரஸ் இன்னும் சில காலத்திற்கு நம்மை விட்டு போகப் போவதில்லை. வைரஸ் எதிர்ப்பு மருந்துகளும், தடுப்பு மருந்துகளும் எவ்வளவு விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்பதை பொருத்து தான் நிம்மதி கிடைக்கும்.

இன்று முடிவுக்கு வரும் என்ற தவறான நம்பிக்கையை தவிர்ப்பது அவசியம். இன்னும் கொஞ்ச காலத்திற்கு, பழைய வாழ்க்கை முறையில் நாம் வாழ முடியாது. கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கை முறையை, நீண்ட காலம் நாம் கடைப்பிடித்தே ஆக வேண்டும்.இந்த வைரஸ் தொற்று குறித்து, மனவியல் வல்லுனர்கள், பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை தெரிவிக்கின்றனர்.

*கொரோனா தொடர்பாக என்னவெல்லாம் உங்களுக்கு தெரிய வேண்டுமோ, அவை தெரிந்து விட்டன. எனவே, கொரோனா குறித்த செய்திகளைத் தொடர்ந்து பார்ப்பதை தவிர்க்கவும்

*இறப்பு எண்ணிக்கை குறித்த செய்திகளை பார்ப்பதை தவிருங்கள்

*வலைதளங்களில் சென்று, கொரோனா குறித்த புதிய தகவல்களை தேடாதீர்கள்; அந்த தகவல்கள், உங்கள் மனவலிமையை பாதிக்கும்

*உங்களுக்கு தெரிந்த ஒருவர், கொரோனா தொற்றால் இறந்து விட்டால், அந்த செய்தியை பலருக்கும் அனுப்பாதீர்கள். அது, அவர்கள் மனதில் பய உணர்வை ஏற்படுத்துவதோ, 'டிப்ரஷன்' என்ற மன அழுத்த நோயையோ ஏற்படுத்தி விடும்.

பீதி வேண்டாம்
ஊரடங்கு சமயத்தில் உங்களுக்கு காய்ச்சல் வந்தால், கொரோனா என்று பீதி கொள்ள வேண்டாம். உடனே, 'டெஸ்ட்' செய்து கொள்ள வேண்டும் என்று அவசரப்படவும் வேண்டாம். அது, சாதாரண ப்ளூ காய்ச்சலாகக் கூட இருக்கலாம். உங்கள் மருத்துவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர் பரிந்துரைப்படி, 'பாரசிட்டமால்' மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு அல்லது மூன்று நாட்களில் அது குறையவில்லை என்றால், மருத்துவர் பரிந்துரைத் தால் மட்டுமே, கொரோனா டெஸ்ட்டுக்கு செல்லுங்கள்.

நம்பிக்கையுடன் இருப்போம்
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க, இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, கனடா போன்ற நாடுகளில் ஆய்வில் உள்ளன. செப்டம்பர் முதல், தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என்று நம்பப்படுகிறது. எனினும், இப்போதைக்கு நாம் தற்காப்பு, தடுப்பு நெறிமுறைகளை எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் மிக கவனமாக கடைப்பிடிக்க வேண்டும்; அதில் நிதானமும், பொறுமையும் வேண்டும். ஏராளமான நம்பிக்கைக் கீற்றுகள் தென்படுகின்றன. அவை யாவும் ஒன்றாகி நம்பிக்கை நட்சத்திரமாக, விடிவெள்ளி யாகி, வெகுவிரைவில் வரும். அந்த நாளை நம்பிக்கையுடன், பொறுமையுடன் காத்திருந்து எதிர்கொள்வோம்.

டாக்டர் எஸ்.ஏகநாத பிள்ளை

முன்னாள் பேராசிரியர்,

மதுரை மருத்துவக் கல்லூரி


தொடர்புக்கு: 98421- 68136

இமெயில்:ahanathapillai@gmail.com

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • ஆப்பு -

    இதையேத்தானே இத்தனை நாளா மக்களை ரவுண்டு கட்டி அடிக்கும் போது சொல்லிக்கிட்டிருக்கோம். இப்போ பொருகாதாரமும் படுத்திருச்சு... கொரோனாவும் அதிகமாயிருச்சு.

Advertisement