Advertisement

மாறுமா காங்., கலாசாரம்?

Share
ராஜஸ்தான் மாநிலத்தில், காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் இடையே, நீண்ட நாட்களாக, நீருபூத்த நெருப்பாக இருந்த மோதல், தற்போது, பகிரங்கமாக வெடித்துள்ளது.கெலாட்டிற்கு எதிராக, சச்சின் போர்க்கொடி துாக்கியதால், அவரின் துணை முதல்வர் பதவியும், மாநில, காங்., தலைவர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில், 2013ல், காங்., படுதோல்வியை தழுவியது. அதன்பின், மாநில காங்., தலைவரான சச்சின் பைலட், தன் தீவிர முயற்சியால், 2018 சட்டசபை தேர்தலில், காங்கிரசை ஆட்சி பீடத்தில் அமர்த்தினார். அதற்கு பிரதிபலனாக, தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என, எதிர்பார்த்தார். ஆனால், காங்., மேலிடம் ஏமாற்றி விட்டது. ஏற்கனவே முதல்வராக இருந்தவரான, அசோக் கெலாட்டை முதல்வராக்கி விட்டு, சச்சினுக்கு துணை முதல்வர் பதவியை வழங்கியது.

இதேபோல, மத்திய பிரதேச மாநிலத்தில், காங்., ஆட்சியை பிடித்த போதும், அங்கு கட்சி வெற்றி பெற, மிகவும் உறுதுணையாக இருந்த இளம் தலைவரான, ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு முதல்வர் பதவியை வழங்காமல், மூத்த தலைவரான கமல்நாத்திற்கு வழங்கியது. அதனால், அங்கும் இருவருக்கும் இடையே மோதல் உருவாகி, இறுதியில் கமல்நாத் அரசு கவிழ்ந்து, மீண்டும், பா.ஜ., அரசு பதவியேற்றது.


காங்கிரசில் நீண்ட காலமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜ.,வுக்கு தாவி விட்டார். அதுபோன்ற நிலைமை, இன்னும் ராஜஸ்தானில் உருவாகவில்லை என்றாலும், பிரச்னை கிட்டத்தட்ட அந்த அளவுக்கு சென்றுள்ளது. ஆனால், பா.ஜ.,வில் சேரப்போவதில்லை என, சச்சின் பைலட் கூறியுள்ளார். அதனால், காங்., மேலிடம், அவரை சமாதானப்படுத்த முற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


காங்கிரசில் உள்ள இளம் தலைவர்கள், சமீப காலங்களில், கட்சி மேலிடத்திற்கு எதிராக, இதுபோன்று போர்க்கொடி துாக்குவதற்கு, தங்களின் எதிர்காலம் தொடர்பாக, அவர்கள் மத்தியில் எழுந்துள்ள அச்சமே காரணம். அதுமட்டுமின்றி, இளம் தலைவர்களுக்கு முக்கியத்துவம் தருவதில், காங்., மேலிடம் பாராமுகமாக இருப்பதும் மற்றொரு பிரச்னை.


ஜவஹர்லால் நேரு, இந்திரா, ராஜிவ், ராகுல் போன்றோர் எல்லாம், 40 முதல் 48 வயதிற்குள், காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வந்தவர்கள். அதிலும், இந்திராவும், ராஜிவும், இந்த வயதிற்குள் பிரதமர் பதவியையும் அலங்கரித்தவர்கள். அப்படி இருக்கையில், கட்சிக்காக உழைக்கும், வெற்றிக்காக பாடுபடும், இளம் தலைவர்களுக்கு மட்டும், முதல்வர் பதவியை கொடுக்க, காங்., மேலிடம் தயங்குவது ஏன் என, தெரியவில்லை.


இந்த விஷயத்தில், தங்கள் குடும்பத்தினருக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி என்ற கொள்கையை, அவர்கள் பின்பற்றுகின்றனர்.கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், காங்., தோல்வி அடைந்ததும், கட்சி தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். அப்போது, 'நானோ அல்லது என் குடும்பத்தை சேர்ந்தவர்களோ, கட்சி தலைவர் பொறுப்பை ஏற்கப்போவதில்லை' என்றார். அதன்படி பார்த்தால், தகுதியான இளம் காங்., தலைவர்களில் ஒருவர், கட்சி தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்; அப்படி எதுவும் நடக்கவில்லை. அதற்கு மாறாக, ஏற்கனவே தலைவர் பதவியில் இருந்தவரான, சோனியா தான், மீண்டும் இடைக்கால தலைவரானார். இன்னும் புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.


உட்கட்சி பூசலை தீர்ப்பதில் அக்கறை காட்டாதது, போர்க்கொடி துாக்கும் இளம் தலைவர்களின் குரலுக்கு செவி சாய்க்காமல் இருப்பது, எந்த விஷயத்திலும் மிகவும் தாமதமாக முடிவெடுப்பது, காங்கிரசில் நீண்ட காலமாக உள்ள கலாசாரம். அதனால், அதிருப்தி அடைந்த பல தலைவர்கள், அந்தக் கட்சியை விட்டு வெளியேறி, மாற்று கட்சியில் சேர்ந்தோ அல்லது தனி கட்சி துவக்கியோ, மாநிலங்களில் ஆட்சியை பிடித்துள்ளனர் அல்லது செல்வாக்குடன் திகழ்கின்றனர்.அதற்கு உதாரணமாக, சரத்பவார், மம்தா பானர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டியை கூறலாம். அந்த வரிசையில் தான், தற்போது, ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் போன்றவர்கள் உருவாகியுள்ளனர். இப்போதாவது, காங்., மேலிடம் விழித்துக் கொள்வது நல்லது. இளம் தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, கட்சிக்கு புத்துயிரூட்ட வேண்டும்.


அதேநேரத்தில், ராஜஸ்தானை பொறுத்த மட்டில், காங்கிரஸ், - பா.ஜ., மட்டுமே, மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. இந்த இரு கட்சிகளில் இருந்து வெளியேறி, அங்கு புதிதாக தனிக்கட்சி துவக்கிய யாரும், இதுவரை சாதித்ததாக வரலாறு இல்லை. அதனால், பா.ஜ.,வில் சேரப்போவதில்லை என, அறிவித்துள்ள சச்சின் பைலட், புதிய கட்சி துவக்குவாரா என்பது சந்தேகமே. அப்படியே துவக்கினாலும், மம்தா, ஜெகன்மோகன் ரெட்டி போல சாதிக்க முடியுமா என்பதற்கு, காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement