Advertisement

தீவிரம்! பட்ஜெட் கூட்டத் தொடருக்கான ஏற்பாடுகள்... புதுச்சேரி அமைச்சரவை இன்று கூடுகிறது

Share
புதுச்சேரி : -பட்ஜெட் கூட்டத் தொடருக்கான ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கவர்னர் உரை மற்றும் பட்ஜெட்டுக்கு இறுதி வடிவம் தருவதற்காக அமைச்சரவை இன்று மாலை கூடுகிறது.

மாநிலங்களை பொறுத்தவரை தங்களது பட்ஜெட்டை தயார் செய்து, சட்டசபையில் தாக்கல் செய்து கொள்ளலாம். ஆனால், யூனியன் பிரதேசங்கள், பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக, மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.இதுபோன்ற சூழ்நிலையில், கடந்த மார்ச் 30ம் தேதி சட்டசபை கூடிய போது, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியவில்லை. ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்களுக்கு, ரூ.2,042 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.

தொடர்ந்து, ஜூலை மாதத்துக்கு முன்பாக முழு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான திட்டமிடப் பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டன.நடப்பு 2020 -21ம் ஆண்டுக்கு 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பட்ஜெட் தயார் செய்யப்பட்டு, மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது. ஊரடங்கு காலத்தில் வருவாய் குறைவை சுட்டிக் காட்டிய மத்திய அரசு, பட்ஜெட் தொகையை குறைக்குமாறு அறிவுறுத்தியது. தொடர்ந்து, 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் மறு மதிப்பீடு செய்யப்பட்டு, மத்திய அரசின் அனுமதிக்காக மீண்டும் அனுப்பப்பட்டது.

இதற்கு மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்தது. ஆனால், உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைப்பதில் இழுபறி ஏற்பட்டது. இடைக்கால பட்ஜெட் ஜூன் மாதம் வரையிலான மூன்று மாதங்களுக்கு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு இருந்ததால், ஜூலை மாத அரசின் செலவினங்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.தொடர்ந்து, புதுச்சேரி அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினர்.இந்நிலையில், புதுச்சேரி பட்ஜெட்டிற்கு மத்திய உள்துறை ஒப்புதல் அளித்து விட்டதாக வாய்மொழியாக நேற்று தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும், அதிகாரப்பூர்வமான ஒப்புதல் கடிதம் எதுவும் நேற்று மாலை வரை வந்து சேரவில்லை.

இதற்கிடையில், வரும் 16ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக, 16, 17, 18 ஆகிய தேதிகளில் மூன்று நாட்களுக்கு மட்டும் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.பட்ஜெட் கூட்டத் தொடர், கவர்னர் உரையுடன் துவங்க உள்ளது. கவர்னர் உரையில் அரசின் கொள்கை முடிவுகள், திட்டங்கள் இடம் பெற்று இருக்கும். கவர்னர் உரையை இறுதி செய்வதற்காகவும், பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுவதற்காகவும் புதுச்சேரி அமைச்சரவை இன்று மாலை 5:00 மணிக்கு கூடுகிறது.அடுத்த ஆண்டு மே மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால், முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய முடியாது.

இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யும் வாய்ப்புள்ளது. காங்., அரசின் நிறைவு பட்ஜெட்டாக தற்போதைய பட்ஜெட் அமைய உள்ளதால், மக்களை கவரும் பல்வேறு திட்டங்களை அறிவிப்பதற்கு முதல்வர் நாராயணசாமி தீவிரமாக உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement