Advertisement

தீவிரம்! கடலூர் துறைமுகம் விரிவாக்கப் பணிகள்...பரவனாற்றை ஆழப்படுத்த டிரஜ்ஜர் வருகை

Share
கடலுார் : கடலுார், முதுநகர் துறைமுகம் விரிவாக்கப் பணிகள் இரண்டரை மாதங்களுக்கு பிறகு மீண்டும் துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது.

கடலுாரில் பரவனாறு, உப்பனாறுஆகிய ஆறுகள் கடலில் கலக்கும் இடத்தில் 142 ஏக்கர் பரப்பளவில் முதுநகர் துறைமுகம் அமைந்துள்ளது.துறைமுகம் கரையிலிருந்து ஒரு மைல் துாரத்திலேயே இயற்கையாகவே 15 மீட்டர் ஆழம் இருப்பதால், கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக இருந்தது.ஆசியாவில் மிக பழமையான துறைமுகங்களில் இதுவும் ஒன்று. காலப்போக்கில் கடலுார் துறைமுகத்தின் முகத்துவாரப் பகுதி ஆழம் துார்ந்தது. தமிழ்நாடு பெட்ரோ பிராடக்ட் கம்பெனியில் 'ப்ரொப்லின்' வாயு இறக்குமதி செய்த போது அந்த பகுதி பொது மக்கள் எதிர்ப்பு உட்பட பல்வேறு காரணங்களால் 2002ம் ஆண்டிற்கு பிறகு கப்பல் வருவது முற்றிலும் நிறுத்தப்பட்டது.

ரூ.135 கோடி நிதிமீண்டும் கப்பல் போக்குவரத்தை துவங்கும் வகையில், 2018 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் சாகர்மாலா திட்டத்தில் கடலுார் துறைமுக விரிவாக்கப் பணிக்காக ரூ.135 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதன் மூலம் பரவனாற்றில் ஆழப்படுத்தும் பணி நடைபெற உள்ளதாகவும், பரவனாற்றின் அருகே சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் இரண்டு தளங்கள் அமைத்து, 5.68 மெட்ரிக் டன் சரக்கு கையாளும் வகையில், இந்திய தொழில் நுட்ப மையம் - (ஐஐடி) திட்ட வடிவம் ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து கடலுார் துறைமுகம் விரிவாக்கப் பணி கடந்த 2018 அக்டோபரில் துவங்கி, தீவிரமாக நடந்தது. இதற்காக துறைமுக முகத்துவாரத்தின் தெற்கு பகுதியில், 85 மீட்டர்,வடக்கு பகுதியில் 210 மீட்டர் துாரத்திற்கு அலை தடுப்பு அமைக்க, டெட்ராபேடு என்ற சிமென்ட் கான்கிரீட் கற்கள் கொட்ட முடிவு செய்யப்பட்டது.துறைமுகத்தின் வடக்கு பகுதியில், 1,000, தெற்கு பகுதியில் 2,000 என 3,000க்கும் மேற்பட்ட டெட்ராபேடு கற்கள் அடுக்கும் பணி நடந்தது. அலை தடுப்பு அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

கப்பலில் இருந்து சரக்குகளை ஏற்றவும், இறக்கவும் தலா 120மீட்டர் நீளம், 21 மீட்டர் அகலம், 4.5 மீட்டர் உயரத்தில் இரண்டு கப்பல் அணையும் தளங்கள் (வார்ப்) அமைக்கும் பணி நடந்தன. மீண்டும் துவக்கம்இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு அமலுக்கு வந்ததால், பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் பல தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டரை மாதங்களுக்கு பிறகு மீண்டும் பணிகள் துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது, பரவனாற்றில் துார்வாரும் பூர்வாங்கப் பணிகள் துவங்கியுள்ளன. அதன்படி, 1,900 மீட்டர் நீளம், 60 மீ., அகலம், 10 மீட்டர் ஆழத்தில் துார்வாரப்பட உள்ளது. இப்பணிக்காக 'ட்ரஜ்ஜர்' (துார் வாரி) வரவழைக்கப்பட்டுள்ளது. பணி விரைவில் துவங்குகிறது.துறைமுக விரிவாக்கப் பணிகள் வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் காரணமாக இரண்டரை மாதங்கள் பணிகள் நிறுத்தப்பட்டதால், பணி முடிய மேலும் சில மாதங்கள் ஆகலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement