Advertisement

பிளாஸ்மா சிகிச்சையை தீவிரப்படுத்த முடிவு சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

Share
வளசரவாக்கம்,; ''தமிழகத்தில், பிளாஸ்மா சிகிச்சை வாயிலாக, 18 பேர் குணமடைந்துள்ளனர். பிளாஸ்மா சிகிச்சையை தீவிரப்படுத்த, கொடையாளர்களை வரவேற்கிறோம்,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.சென்னை, வளசரவாக்கம் மண்டலம், மவுன்ட் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள, 'கொரோனா ஸ்கிரீனிங் சென்டர்' மற்றும் போரூர், வன்னியர் தெருவில் நடைபெற்ற காய்ச்சல் முகாமை, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.பின், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், 39 ஆயிரத்து, 537 தெருக்கள் உள்ளன. இதில், 9,509 தெருக்களில், தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தனர். ஜூன், 19ம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்காலும், தொடர் தடுப்பு நடவடிக்கையாலும், 3ம் தேதி, தொற்று பாதிப்புள்ள தெருக்கள், 8,402 ஆக குறைந்துள்ளது.இதில், 1,107 தெருக்களில், தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. சென்னை மாநகராட்சியில், மே, 8ம் தேதி முதல் இதுவரை, 12 ஆயிரத்து, 351 காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டு, ௮ லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர்.நாளை முதல், ஊரடங்கில் தளர்வுகள் வர உள்ளன. இந்த நோய்க்கு தடுப்பு மருந்து இல்லை. இதனால், எங்கள் பகுதியில் நோய் தொற்று குறைவாக உள்ளது என, அலட்சியமாக இருக்கக் கூடாது.அனைவரும் முக கவசம்அணிவதையும், இடைவெளி கடைப்பிடிப்பதையும், கை கழுவுவதையும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அறிகுறிகள் இருந்தால், எக்காரணம் கொண்டும் மறைக்க வேண்டாம்.கொரோனா தடுப்பு சிகிச்சைக்காக, அனைத்து முன்னோடி, யுக்திகளை பயன்படுத்தி வருகிறோம். இதில், பிளாஸ்மா சிகிச்சை குறித்து, பல மாநிலங்கள் பேசுகின்றன.ஆனால், தமிழகத்தில்தான், பிளாஸ்மா வங்கி அமைத்து, 18 பேர் அந்த சிகிச்சை வாயிலாக குணமடைந்து உள்ளனர். பிளாஸ்மா சிகிச்சையை தீவிரப்படுத்த, கொடையாளர்களை வரவேற்கிறோம். மேலும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, கூட்டு மருத்துவ சிகிச்சையிலும் ஈடுபட்டு வருகிறோம்.தமிழகத்தில், 13 லட்சம் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. பிற மாநிலங்களில், இது போன்று மாதிரிகள் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் இறப்பு சதவீதம் குறைவாக உள்ளது. கொரோனா தொற்று பாதித்து இறப்பவர்கள் எண்ணிக்கை, மிகவும் குறைவாக உள்ளது. நாள்பட்ட நோய் பாதிப்பால் இறந்தாலும், கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, தொற்று உறுதி செய்யப்பட்டால், பட்டியலில் சேர்க்கிறோம்.தொற்று பாதிப்பு எண்ணிக்கையை வைத்து, பயப்பட தேவையில்லை. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், முக கவசம், கை கழுவுவது என, பழக்க வழக்கத்தையும் மாற்றம் செய்து வருகிறோம். இன்று முதல், மக்கள் ஒத்துழைப்பு இன்னும் அதிகம் தேவைப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.நான்கு மணி நேரத்தில்...மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது:சென்னையில், காய்ச்சல் முகாம், வீடு வீடாக கணக்கெடுக்கும் பணியால், நல்ல முடிவுகள் வருகின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தடுப்பு அமைக்கப்படுகிறது.பிற நபர்கள் தவறுதலாக அப்பகுதிக்கு செல்லக்கூடாது என்பதற்காகவும், சுற்றி உள்ளவர்களின் பாதுகாப்பிற்காகவும் இப்படி செய்யப்படுகிறது. தனிமைப்படுத்தப்பட்டவர்களின் தேவையை நிவர்த்தி செய்ய, ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனம், இறந்தவர்கள் உடல்களில் இருந்து கொரோனா பரவ வாய்ப்புள்ளது என, குறிப்பிட்டுள்ளது. இதனால், உறவினர்களிடம், இறந்தவர்கள் உடலை ஒப்படைக்க முடியாது. உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல் படி அடக்கம் செய்யப்படுகிறது.கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களை, ஸ்கிரீனிங் சென்டர் அழைத்துச் செல்ல, வார்டுக்கு ஒரு வாகனம் என, 200 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், தொற்று பாதிக்கப்பட்டவர்கள், நான்கு மணி நேரத்தில் பரிசோதனை முடித்து, சிகிச்சை பெற வாய்ப்பாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement