dinamalar telegram
Advertisement

ஒரு பணியிடத்துக்கு ரூ.2 கோடி பேரம்!

Share
Tamil News
''பீதியில இருக்கா ஓய்...'' என்றபடியே, திண்ணையில் அமர்ந்தார், குப்பண்ணா.

''யாருங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம், நிர்வாக வசதிக்காக, 38 மாவட்டங்களா செயல்படறது... ''அரசு நிர்ணயம் செஞ்சதை விட, கூடுதல் விலைக்கு மது விற்கற ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க, கடைகளில் ஆய்வுநடத்தணுமுன்னு, மாவட்ட மேலாளர்களை, டாஸ்மாக் தொடர்ந்து அறிவுறுத்திண்டே இருக்கு ஓய்...

''ஊழியர்கள் கொடுக்கற, கமிஷன் தொகையால, மேலாளர்கள் கண்டுக்காம இருக்கா... அதனால, நிர்வாக அறிவுரைகளை பின்பற்றாதோர் மேலே, துறை ரீதியா நடவடிக்கை எடுக்கப்படுமுன்னு, டாஸ்மாக் எச்சரிச்சுருக்கு ஓய்...

''மாவட்ட மேலாளர்களின் மோசடி குறித்த, விபரமும் சேகரிச்சுண்டு வர்றா... சீக்கிரமே, அதிரடி நடவடிக்கை இருக்கும்ன்னு பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''எல்லாம் சரி... அந்த அரசு கடையில, இனியாவது, சரியான விலையில, சரக்கு விற்பாங்களா...'' என, அந்தோணிசாமி கேட்கவும், மற்றவர்கள் சிரித்தனர்.

''சுகாதார ஆய்வாளர் ஒருத்தர், 'கொரோனா'கிட்ட சவால் விட்டு தோத்துட்டார் பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.''என்ன சொல்றீங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''சேலம் மாவட்டம், சங்ககிரி, கிடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்துல, சுகாதார ஆய்வாளராக பணிபுரியுறவர், முகக் கவசம் அணியாமல், தனிமைப் பகுதி, சோதனைச்சாவடிகள்ல, போன மாசம், 27ம் தேதி வரை வேலை பார்த்தாரு பா...''அவருகிட்ட, மற்ற துறை அலுவலர்கள், 'நீங்களே, முகக் கவசம் அணியாம இருக்கலாமா...' எனக் கேட்டபோது, 'எனக்கெல்லாம், கொரோனா வராது... உங்க வேலைய பாருங்க'ன்னு சொல்லியிருக்காரு பா...

''இப்போ அவருக்கு, கொரோனா தொற்று உறுதியாகி, சேலம் அரசு மருத்துவமனையில இருக்காரு... அவருடன் பணிபுரிந்தவங்களுக்கு, தொற்று இல்லை பா...''நோய்கிட்ட சவால் விடலாமா... அதுவும், சுகாதார துறையில இருக்குறவரு... இனியாவது, எல்லாரும் முகக் கவசம் அணியணும் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

''ஒரு பணியிடத்துக்கு, 2 கோடி ரூபாய் விலை பேசுதாவ வே...'' என, கடைசித் தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.

''என்ன சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''பதிவுத்துறை சார் - பதிவாளர் பணிக்கு, தனி மவுசு இருக்கு... இதுலயும், வசூல் அதிகம் இருக்குற இடத்துக்கு, கடுமையான போட்டி இருக்கும்... சென்னை நீலாங்கரை, சார் - பதிவாளர் பணியிடத்துக்கு, கடுமையான போட்டி நடக்குது வே... ''எப்படியாவது, இந்த இடத்தை பிடிக்க, சார் - பதிவாளர்கள் மல்லுக்கட்டி நிக்காவ... ஒருத்தர், 40 லட்சம் ரூபாய் கொடுக்குறதா பேரத்தை துவக்கியிருக்கார்...

சென்னையில இருக்குற இன்னொருத்தர், 1 கோடி ரூபாய் கொடுக்கிறதா பேரம் பேசினாரு வே... ''இவங்களை, 'ஓவர்டேக்' பண்றா மாதிரி, தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருத்தர், 2 கோடி ரூபாய் கொடுக்கிறதா சொல்லியிருக்கார்... அந்த, 'டிபார்ட்மென்ட்' உருப்படுமா வே...'' என, அலுத்தபடி நடையைக் கட்டினார், அண்ணாச்சி. மற்றவர்களும் கிளம்ப, திண்ணை அமைதியானது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (4)

 • Baskar - Paris,பிரான்ஸ்

  தி.மு.க வை சேர்ந்தவர்கள் என்ற பயம் உங்களுக்கு இல்லை என்று நம்புகிறோம்.

 • A R J U N - sennai ,இந்தியா

  .. தஞ்சாவூரைச் சேர்ந்த ஒருத்தர், 2 கோடி ரூபாய் கொடுக்கிறதா சொல்லியிருக்கார்... அந்த, 'டிபார்ட்மென்ட்' உருப்படுமா வே.....ஓஹோ..அதான் கம்பளைண்ட் கொடுத்தாக்கூட நடவடிக்கை எடுக்காது இல்லையா,

 • ravi - chennai,இந்தியா

  லஞ்சம் வாங்கி குடும்பம் நடத்தினால் அந்த குடும்பம் விளங்காது - உருப்படாமல் போகும்

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  இத்தனை கோடிக்கு ‘ஏலம் ‘ போனவர்கள் இதை ஒரே மாதத்தில் ‘எடுக்கும்’ சாமர்த்தியம் உள்ளவராகத்தான் இருப்பார்கள் ‘வாங்கும்’ மஹாஜனங்கள் தாராளமாக இதில் வரும் பங்குக்காகவே எல்லா மீறல்களையும் அனுமதிப்பார்கள்

Advertisement