Advertisement

அசத்தல்! ஆன்லைன் சேவையில் போக்குவரத்து துறை...கொரோனா காலத்தில் நெரிசலுக்கு முற்றுப்புள்ளி

Share
புதுச்சேரி : பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டிய கட்டாயமான சூழலில், போக்குவரத்து துறை அனைத்து சேவைகளையும் ஆன்லைன் மூலமாக வழங்கி முன்னோடியாக திகழ்கிறது.


கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழ்நிலையில், மக்கள் தேவையில்லாமல் வெளியில் நடமாடக்கூடாது; பொது இடங்களுக்கு சென்றால் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.இந்த நெருக்கடியான சூழல் எப்போது மாறும் என்பது தெரியவில்லை. இதனால், மக்களுடன் நெருங்கிய தொடர்புடைய அரசின் துறைகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு, முழுவதுமாக ஆன் லைன் சேவைக்கு மாறுவது காலத்தின் கட்டாயமாகி விட்டது.இந்த விஷயத்தில் போக்குவரத்து துறை தொலைநோக்கு பார்வையுடன் முக்கியமான சேவைகள் அனைத்தையும் ஆன் லைன் மூலமாக வழங்கும் பணிகளை ஏற்கனவே துவக்கி விட்டது.


தற்போது, 90 சதவீத சேவைகள் ஆன் லைன் மூலமாகவே வழங்கப்பட்டு முன்னோடியாக திகழ்கிறது.நடையாய் நடக்க வேண்டாம். கடந்த காலங்களில் லைசன்ஸ், எல்.எல்.ஆர்., பெறுவது, புதுப்பிப்பது, முகவரி மாற்றம், திருத்தம் செய்வது போன்ற சேவைகளுக்கு, போக்குவரத்து அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விண்ணப்பம் பெற வேண்டும்.பின், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை அலுவலகத்தில் சமர்ப்பித்து, கட்டணம் செலுத்த வேண் டும். போட்டோ எடுப்பதற்கு, தேர்வுக்கு என பலமுறை போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். தற்போது, ஆன் லைனில் விண்ணப்பித்து, ஆன் லைனிலேயே பணத்தை செலுத்திவிட்டு, பிரிண்ட் எடுத்து சென்றல் போதும்.


எல்.எல்.ஆர்., என்றால் எழுத்து தேர்வு எழுதவும், லைசன்ஸ் என்றால் ஓட்டி காண்பிக்கவும் ஒருமுறை நேரில் சென்றால் போதும்.தேர்வுக்கு கட்டுப்பாடுதற்போது, ஆன் லைன் மூலமாக லைசன்ஸ், எல்.எல்.ஆர்., பெற விண்ணப்பிக்கும் அனைவரையும், கொரோனா பீதியால் ஒரே நாளில் அழைக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, புதுச்சேரி, உழவர்கரை போக்குவரத்து அலுவலகங்களில் 5 பேர் கொண்ட 4 குழுவாக தலா 20 பேர் அழைக்கப்படுகின்றனர். அதுபோல, வில்லியனுார், பாகூர் அலுவலகங்களில் தலா 10 பேர் அழைக்கப்படுகின்றனர்.லைசன்ஸ் பெற வாகனத்தை ஓட்டி காட்டுவதற்கு வருபவர்களும், எல்.எல்.ஆர்., பெற ஆன் லைன் தேர்வு எழுத வருபவர்களும் முக கவசம் அணிந்து, சானிடைசர் மூலமாக கைகளை சுத்தமாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.


சமூக இடைவெளியை கடைபிடித்து தேர்வுகள் நடத்தப்படுகிறது. கூட்ட நெரிசல் குறையும் அதுபோல, புதிய வாகனங்களை புதிவு செய்வது, வாகன உரிமையாளர் பெயர் மாற்றம், ரத்து செய்வது, முகவரி மாற்றம், எப்.சி., எடுப்பது உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஆன் லைனில் கொண்டு வரப்பட்டுள்ளது.சாலை வரியை ஆன் லைனில் செலுத்துவதற்கான பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. பஸ்கள் தொடர்பான விபரங்களை பதிவு செய்தால் இந்த பணியும் முடிந்து விடும். இதற்கு பிறகு, போக்கு வரத்து அலுவலக வளாகத்தில் உள்ள கட்டண மையத்தை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆன் லைன் சேவைகளால் கால தாமதம் தவிர்க்கப்படுவதுடன், போக்குவரத்து அலுவலகத்தில் எதிர்காலத்தில் கூட்ட நெரிசல் பெரிதும் குறைந்து விடும் என்பது நிச்சயம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Balaji - COIMBATORE,இந்தியா

    தமிழக அரசின் பெரும்பாலான துறைகளின் இணைய தளத்தில் , அதிகபட்சம் வெறும் டாகுமெண்ட்ஸ்தான் இருக்கும். இணைய சேவை என்ற பக்கத்தை சொடுக்கினால், கணிணி சேவை மையம் இருக்கும் முகவரி அல்லது மின்னஞ்சல் முகவரிதான் இருக்கும்... வெட்கக்கேடு... மத்திய அரசின் போக்குவரத்து துறை 2 / 3 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த நாடு முழுவதற்கும் உண்டான VAHAN எனப்படும் வாகனங்களின் போர்டல், எல்லா மாநிலங்களும் தங்களின் வாகன விவரங்களை போர்டலில் பதிவேற்றிய பிறகு வெகு தாமதமாக கடைசியில்தான் நமது 'தமிழண்டா' மாநிலம் பதிவேற்றியது.. எனது சொந்த அனுபவம். அரசு கருவூலத்தில் எனது தாயாரின் பென்சன் சம்பந்தமாக என்றபோது நான் நேரில் கண்ட காட்சி. அலுவலகத்தில் ஒரு பணியை தொடங்கி முடிக்கும் வரை, வெவ்வேறு அதிகாரிகள் அதை அப்ரூவ் செய்ய வேண்டும்.. (பழைய காகிதங்கள் சார்ந்த ஃபைல் முறை Red Tapism எனப்படும்).. எல்லா அலுவலகங்களும் கணிணிமயமான பின் அப்படிப்பட்ட ஒப்புதல்கள் அந்தந்த அதிகாரிகளின் கணிணியில் அவர்கள் தங்களுக்குண்டான password பதிவிட்டு அவர்களின் ஒப்புதலை குறிப்பிட்ட பணியில் பதிவிட வேண்டும்.. ஆனால் நான் கண்ட காட்சி.. நான் தொடர்பு கொண்ட கடைநிலை ஊழியர் என்னை மேலதிகாரியை சென்று என் விண்ணப்பத்தில் (காகிதம்) ஒப்புதல் கையெழுத்து வாங்கி வரச் சொன்னார். ஒரு அரை மணி காத்திருந்த பிறகு அதில் வெற்றி பெற்று மீண்டும் அந்த ஊழியரிடம் வந்தேன். அவர் அந்த விண்ணப்பத்தை வாங்கிக் கொண்டு கணிணியில் சுமார் நான்கு முறை ஒவ்வொரு அதிகாரியின் login / password ஐ அவரே பதிவிட்டு, ஒவ்வொருவர் சார்பாக அவரே எல்லா ஒப்புதல்களையும் கணிணியில் பதிவிட்டார். (கணிணி துறையில் சிறிது அனுபவம் உள்ளவன் என்ற முறையில் அக்காட்சியை கண்ட எனக்கு அழுவதா இல்லை சிரிப்பதா என தெரியவில்லை) கடைசியாக போக்குவரத்து துறை... இணைய சேவை யா?.. (எனது கால்..) எந்த RTO ஆஃபீஸ் போனாலும், அதன் சமீபமாக எதற்கு இத்தனை நகல் எடுக்கும் கடைகள்? எல்லோரும் ஏஜெண்டுகள் மற்றும் ஊழலின் ப்ரோக்கர்கள்.. எனது DL புதுப்பிக்க என்றபோது, அரசின் துறை சார்ந்த இணையம் வாயிலாக அப்பாயிண்ட்மெண்ட் சமர்ப்பித்தால், அது RTO ஆஃபீஸுக்கு உள்ளே இருக்கும் இன்ஸ்பெக்டர் ஆல், அலுவலகத்தில் இருக்கும் அவரது கணிணியில் அவரால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். இந்த பணி வெளியில் இருக்கும் நகல் எடுக்கும் கடை நடத்துபவர், அவரது கடையில் இருக்கும் கணிணியில், அரசின் இணையதளத்தில், (அந்த அதிகாரி சார்பாக) அவரே login செய்து அப்பாயிண்ட்மெண்ட் ஒப்புதல் படிவம் ப்ரிண்ட் எடுத்து மற்ற காகிதங்களுடன் அலுவலகத்தின் உள்ளே சென்று சமர்ப்பிக்கிறார்... இதை தவிர்க்க நாமே நேரடியாக சமர்ப்பிக்காலாம் என்றால் ஏதாவது காரணத்தினால் 10 நிமிட வேலைக்கு நாம் 2 நாட்கள் அலைய வைத்து விடுவார்கள். ஒழியுது சனியன் என்ற மனப்பாண்மையில் நாமும் நகல் கடை ஏஜெண்ட் ஐ அணுகி நம் வேலையை அரை நாளில் முடித்து இந்தியா கிரிக்கெட்டில் உலகக் கோப்பையை வென்ற சந்தோஷத்தில் திரும்புகிறோம்.. நாங்க யாரு? தமிழண்டா.. வெட்க கேடு

Advertisement