Advertisement

வேதா இல்லம் அருகில் தயாராகுது பங்களா!

Share
வேதா இல்லம் அருகில் தயாராகுது பங்களா!


@@''தப்பு செஞ்சிட்டு, யாகம் நடத்துனா சரியா போச்சா வே...'' எனக் கேட்டபடியே, அன்வர்பாய் வீட்டு முற்றத்தில் அமர்ந்தார்,
அண்ணாச்சி.''அதெப்படி சரியாகும் ஓய்...'' என, எதிர் கேள்வி போட்டார், குப்பண்ணா.''ராணிப்பேட்டை போலீஸ் அதிகாரி ஒருத்தர் இப்படித்தான் நினைக்காரு... மணல் கடத்தல், காட்டன் சூதாட்டம், லாட்டரி விற்பனை கும்பல் கூட கூட்டணி வச்சு, கோடிக்கணக்குல வாரி குவிச்சாரு வே...
''மணல் கடத்தல்ல ஈடுபட்டிருந்த, வி.சி., பிரமுகர் ஒருத்தரை, தனிப்படை போலீசார் சமீபத்துல கைது செஞ்சாவ... அவரோ, 'அதிகாரிக்கு வாரா வாரம், லட்சக்கணக்குல மாமூல் குடுத்தேன்'னு வாக்குமூலம் குடுத்துட்டாரு வே...
''ஏற்கனவே, அதிகாரி மேல, டி.ஐ.ஜி.,க்கு ஏகப்பட்ட புகார்கள் போயிருக்கு... இதனால உஷாரான அதிகாரி, தன் மேல நடவடிக்கை வந்துடக் கூடாதுன்னு, ஸ்டேஷன்ல, புரோகிதர்களை வச்சு யாகம், கலச பூஜைகளை எல்லாம் நடத்தியிருக்காரு...
''எல்லாத்தையும் முடிச்சிட்டு, 'மெடிக்கல் லீவ்'லயும் போயிட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
மொபைல் போனை எடுத்து பார்த்த அன்வர்பாய், ''திருநாவுக்கரசு, 'மெசேஜ்' அனுப்பி இருக்கார்...'' என, முணுமுணுத்தபடியே, ''இந்த போலீஸ் ஸ்டோரியையும் கேளுங்க பா...'' என்றபடியே
தொடர்ந்தார்...
''கள்ளக்குறிச்சி மாவட்டம், கொரட்டங்குறிச்சி கிராமத்துல, உளுந்துார்பேட்டை போலீஸ் அதிகாரிகள் ரெண்டு பேர், சமீபத்துல ரோந்து போனாங்க... அங்க, பணம் வச்சு சூதாடிட்டு இருந்த முக்கிய
பிரமுகர்கள் சிலரை பிடிச்சாங்க பா...
''அவங்களிடம், 15 லட்சம் ரூபாய், ரெண்டு கார்களையும் பறிமுதல் செஞ்சாங்க... பிரமுகர்களை அதிகாலை, 2:00 மணிக்கு ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனாங்க பா...
''முக்கிய பிரமுகர்கள், 'பணத்தை எடுத்துட்டு எங்களை விட்டுடுங்க'ன்னு கெஞ்சி இருக்காங்க... சரின்னு ரெண்டு அதிகாரிகளும், பணத்தை அமுக்கிட்டு, அப்பாவிகள் நாலு பேரை பிடிச்சு, 400 ரூபாய் மட்டும் பறிமுதல் பண்ணதா, வழக்கு போட்டு, கதையை முடிச்சிட்டாங்க...
''இது, எஸ்.பி.,க்கு தெரிய வர, விசாரணை நடந்துட்டு இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
ஒலித்த மொபைலை எடுத்த அந்தோணிசாமி, ''ஜெயசந்திரன், வினோத்குமார் வந்தா, நாளைக்கு எனக்கு போன் பண்ண சொல்லுங்க...'' என, பேசி வைத்து, ''போயஸ் கார்டன்ல, முன்னாள் முதல்வர், ஜெ., வீட்டுக்குப் பக்கத்துலயே, பெரிய பங்களா ரெடியாகுதுங்கோ...'' எனக் கூவினார்.
''என்ன வே... வித்தியாசமான குரல்ல கூவுதீரு... வில்லங்க சமாச்சாரமா...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
''வில்லங்கமா இல்லையான்னு, அந்த ஆண்டவருக்கு தான் தெரியும்... சென்னைல, போயஸ் கார்டன்ல, ஜெ., வீடான வேதா நிலையம் இருக்கே... அதுக்குப் பக்கத்துல, ௧௦ கிரவுண்டு... கேட்டுக்குங்க... ௧௦ கிரவுண்டு இடத்துல, ஒரு பெரிய பங்களா
உருவாகிட்டு இருக்கு... ''யாருக்குன்னு நினைக்குறீங்க... ஜெயில்லேர்ந்து சீக்கிரமா வெளியேற, 'பிளான்' இருக்காம்... அதுக்கெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு... நேரா வந்து, தலைக்கு குளிச்சு, பழையபடி சபதம் எடுத்து, இந்த பங்களாவுல தான் குடியேறப் போறாங்களாம்... போதுமா... யாருன்னு புரிஞ்சிருக்குமே...'' எனக் கூறி நிறுத்தினார்
அந்தோணிசாமி.'புரிஞ்சு போச்சு' என்பதை, சைகையில் சொல்லியபடியே, பெரியவர்கள் கிளம்பினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (2)

  • Baskar - Paris,பிரான்ஸ்

    முதலில் கோரோனோவில் இருந்து வெளி வரட்டும் .மற்றவைகளை அப்புறம் பார்க்கலாம்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    வேதா இல்லத்தை பார்த்தால் தோழியையே பார்த்தாற்போலிருக்கும் , உள்ளே போய் இருக்க முடியாமல் வாரிசுகள் வந்துவிட்டார்கள் என்ற எண்ணமாக இருக்கும்

Advertisement