Advertisement

ஓய்வு பெற்ற ஆசிரியை உடலை நல்லடக்கம் செய்த த.மு.மு.க.,வினர்

Share
செங்குன்றம் : கொரோனாவால் பலியான, ஓய்வு பெற்ற ஆசிரியையின் உடலை, அடக்கம் செய்ய யாரும் முன் வராத நிலையில், த.மு.மு.க.,வைச் சேர்ந்தவர்கள், நல்லடக்கம் செய்ய உதவியது, மனிதத்தை உணர்த்தியது.

சென்னை, செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல், பாலகணேச நகர், 13வது தெருவைச் சேர்ந்தவர், ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை, டார்லிங், 69. இவர், இதய நோய் மற்றும் சிறுநீரக கோளாறு காரணமாக, 25ம் தேதி, கிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு நடந்த மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அங்கு, நேற்று முன்தினம் இரவு, 8:30 மணியளவில் இறந்தார்.

அவரது இரு மகன்களும், நேற்று காலை, தாயின் உடலை பெற்றனர்.மருத்துவமனை மற்றும் மாநகராட்சி தரப்பில் இருந்து, ஆசிரியை உடலை அடக்கம் செய்ய, ஆட்கள் வரவில்லை. கொரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக, உள்ளூரைச் சேர்ந்தவர்களும் முன் வரவில்லை. இதனால், மகன்கள் செய்வதறியாது தவித்தனர்.இந்நிலையில், அவர்களது நண்பர்கள் மூலம், புழலில் உள்ள மனிதநேய மக்கள் கட்சியின், மாநில இளைஞர் அணி செயலர் ஷேக்முகமது அலிக்கு தகவல் கிடைத்தது. அவரது ஏற்பாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர், ஆசிரியையின் உடலை, அடக்கம் செய்ய உதவினர்.

அதற்காக, உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல் விதிப்படி, அவர்கள் கவச உடை அணிந்து, நேற்று காலை, 11:30 மணி அளவில், ஆசிரியையின் உடலை, அவரது மத சம்பிரதாயப்படி, நல்லுார் கிறிஸ்துவ இடுகாட்டில், நல்லடக்கம் செய்தனர்.கொரோனாவால் இறந்த ஆசிரியையின் கணவர் ஆண்ட்ரூஸ், சில தினங்களுக்கு முன், திடீர் மாரடைப்பால் இறந்தது குறிப்பிடத்தக்கது. இதனால், கணவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே, மனைவியின் உடலும் அடக்கம் செய்யப்பட்டது.

ஆசிரியையின் உடலை அடக்கம் செய்ய உதவிய, த.மு.மு.க.,வினர் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு, மனிதத்தை உணர்த்தியது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement