Advertisement

டவுட் தனபாலு

Share
தமிழக பா.ஜ., தலைவர் முருகன்: துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் மரணம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் செய்தோர் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தான்குளம் சம்பவம், தமிழக காவல் துறைக்கு ஏற்பட்டுள்ள களங்கம். இச்சம்பவத்திற்கு விரைவான நீதி கிடைத்திடும் வகையில், அந்த குடும்பத்திற்கு, பா.ஜ., துணை நிற்கும்.


@@'டவுட்' தனபாலு: பாதிக்கப்பட்ட குடும்பம், கிறிஸ்துவ குடும்பம் என்பதால், பா.ஜ., ஆதரவு இருக்காது என, சிலரால் வதந்தி பரப்பி விடப்பட்டது. அதில் உண்மை இல்லை என்பதை, உங்களின் அறிக்கை, 'டவுட்' இல்லாமல் நிரூபித்து விட்டது. இப்படி நடுநிலையுடன் இருந்தால் தான், தமிழகத்தில், பா.ஜ.,வால் சொற்ப ஓட்டுகளையாவது பெற முடியும்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி: பிரதமர் மோடியின் ஒருதலைபட்ச முடிவாக, நாடு முழுதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனால், எந்த பலனும் கிடைக்காத நிலையில், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியையும் சரியாக வழங்கவில்லை. இதனால், பொருளாதாரம் சீரழிந்து விட்டது. மக்களை, மோடி அரசு கைகழுவி விட்டது.'டவுட்' தனபாலு: தமிழகம் துவங்கி, மத்திய அரசு வரை, எதிர்க்கட்சிகளை ஆளும் அரசுகள் கலந்தாலோசித்து, கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை என்ற குறைபாடு உள்ளது. இதை பார்க்கும், எதிர்க்கட்சிகளை அழைத்து பேசி, நடவடிக்கைகள் எடுத்திருந்தால், எதிர்க்கட்சிகள் வாயை மூடிக் கொண்டிருக்குமோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!
நடிகர் எஸ்.வி.சேகர்:
போலீஸ் அத்துமீறல்களுக்கு காரணம், சினிமா போலீஸ் தான். சிரிப்பு மற்றும் பொறுக்கித்தனம் என, இரண்டு விதமாக போலீசை சினிமாவில் காட்டுகின்றனர். அதுபோல நாமும் நடக்க வேண்டும் என சிலர் நினைத்துக் கொள்கின்றனர். நிழலுக்கும், நிஜத்துக்கும் வித்தியாசம் தெரியாத மனோபாவமே, இந்த குற்றங்களுக்கு காரணம். போலீஸ் பயிற்சியின் போது, இதை சரிவர சொல்லிக் கொடுக்க வேண்டும்.
'டவுட்' தனபாலு: போலீஸ் அராஜகங்களுக்கும், லஞ்சம், லாவண்யத்திற்கும், சினிமாக்கள் தான் காரணம் என்கிறீர்கள். உண்மை தான். அதில், 'டவுட்'டே கிடையாது. அதுமட்டுமின்றி, நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைகள், முறை தவறிய காதல், ஈவ் டீசிங், கடத்தல், திருட்டு போன்ற குற்றங்களுக்கும், புகைபிடித்தலுக்கும், சினிமாவும் ஒரு முக்கிய காரணம் என்கின்றனர் நடுநிலையாளர்கள்!
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (4)

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  "நான் போலீஸ் இல்லேடா ........ பொறுக்கி......... " அப்படின்னு வசனம் எழுதி படம் எடுத்தவங்களெல்லாம், இப்போ மகா யோக்கியன் மாதிரி அறிக்கை விடறாங்க ...........

 • Aaaaa - Bbbbbb,இந்தியா

  "பா.ஜ.,வால் சொற்ப ஓட்டுகளையாவது பெற முடியும்" தாமரை தமிழகத்தில்எப்போதும் மலராது என்று முடிவே செய்துவிட்டீர்களா?

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  கடைசியாக பா ஜ பிரமுகர்கள்கூட வாயைத் திறந்துவிட்டார் ஆனால் சேகர் அவர்களோ, ‘பாவம் குழந்தைகள் சினிமாவால்தான் புத்தி கேட்டுவிட்டார்கள் , விட்டுவிடுவோம்’ என்பதுபோல் பேசுகிறார். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, எல்லாவற்றுக்கும் சினிமாக்காரர்களை தண்டிக்க வேண்டும் போலிருக்கிறது

  • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

   \\கொலை, கொள்ளை, கற்பழிப்பு, எல்லாவற்றுக்கும் சினிமாக்காரர்களை தண்டிக்க வேண்டும் போலிருக்கிறது\\......... அதிலென்ன சந்தேகம்? இப்போ பள்ளியில் காதல், சிறுவயதிலேயே குடிப்பழக்கம், ரௌடியிசம், ஆசிரியர்கள் மேல் உள்ள மரியாதை குறைவு, பெற்றோர்கள் மேல் உள்ள மரியாதை குறைவு, இவை எல்லாத்துக்கும் இந்த பாழாப்போன சினிமாதானே காரணம் ..........

Advertisement