Advertisement

முதன்மை துறையை முன்னேற்றுவோம்

Share
கொரோனா நோய் தொற்றால் நாம் எதிர்பாராத சிக்கல்களையும் சவால்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். சில மாதங்களில் நோயின் தாக்கம் குறைந்தாலும் நோயினால் ஏற்பட்ட தாக்கம் சமூகத்தில் இருந்து குறைய நாட்கள் ஆகலாம். ஏனென்றால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மக்களிடையே பணப்புழக்கம் குறைந்திருக்கிறது. பல இளைஞர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். குறிப்பாக தொழில் துறையும், சேவைத் துறையும் கடும் நெருக்கடியை சந்தித்து இருக்கின்றன.

புதியதோர் தேசம்இந்த நெருக்கடியான காலகட்டத்தில் இளைஞர்கள் புதிய தேசத்தை உருவாக்கும் பணிகளில் புத்துணர்வோடு ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு நாடு, சேவைத் துறையை மட்டும் நம்பி இருக்கிறதோ அந்த நாட்டின் பொருளாதாரம் எப்போதுமே கம்பி மேல்தான் வழுக்கிக் கொண்டிருக்கும். சின்னத் துாறலுக்கே விழுந்துவிடும்.பல நாடுகளில் அவ்வப்போது பொருளாதார சிக்கல்கள் வந்திருக்கின்றன.


அந்த நாடுகள், சிக்கன நடவடிக்கைகள், உற்பத்திப் பெருக்கம், அவசரகால நிதி என்று எப்படியோ கடந்து மீண்டு வந்திருக்கின்றன. 1990களின் பிற்பகுதியில் தென்கிழக்காசிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார பெருமந்தம் மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளை பாதித்தது. இந்த நாடுகளில் வேலை செய்து கொண்டிருந்த பல இந்தியர்கள் நாடு திரும்ப வேண்டியிருந்தது.

இந்தியாவின் நிலைஇந்தியப் பொருளாதாரம் அப்படி சேவைத்துறையை மட்டும் நம்பி இல்லாமல் முதன்மை துறையான விவசாயம், மீன்பிடித்தல், சுரங்கம் அமைத்தல், நெசவு போன்றவற்றின் மீது கட்டி எழுப்பப்பட்டு இருப்பதால் இதுவரை பொருளாதார பெருமந்தம் போன்ற சிக்கல்களை சந்திக்கவில்லை. நம் மக்களிடையே இருக்கும் சேமிப்புப் பழக்கமும் இந்திய பொருளாதார நிலைத்தன்மைக்கு ஒரு காரணம்.ஆனால் இந்தியாவில் இப்போது நிலவும் சமூக, பொருளாதார சூழல் சிக்கலானது.


கட்டுமானத்துறை, உதிரி பாகங்களை இணைக்கும் தொழில்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளிட்ட இரண்டாம் நிலைத்துறை சார்ந்த செயல்பாடுகள் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் நிலைமை சீரடையவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாய் மண்ணுக்கு திரும்பிவிட்டார்கள். அதனால் கட்டுமானத்துறை உள்ளிட்ட வேலைகள் முழுமையாக நடைபெறவில்லை. உற்பத்தி தொழில்கள் கடும் சரிவை சந்தித்து இருக்கின்றன.

இந்த நிலையில் இருந்து மீண்டுவர இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்? பொருளாதார சிக்கல்கள் வராமல் இருப்பதற்கு நிரந்தர தீர்வு என்ன.

வேளாண்மையே வேதம்முதன்மை தொழில்களில் முனைப்போடு ஈடுபடுவதுதான் இந்த பிரச்னைக்கு தீர்வாக இருக்கும். வருமானம் குறைவாக இருக்கலாம். ஆனால் விவசாயம் உள்ளிட்ட முதன்மை துறை மூலம் வரும் வருமானம், நிலையான வருமானம் என்பதால் இளைஞர்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட முன்வர வேண்டும்.


நெல் சாகுபடி, கோதுமை சாகுபடி என்று மட்டுமில்லாமல் காய்கறிகள், பழங்கள் பயிரிடலாம். இந்த இக்கட்டான நேரத்தில் குறுகிய காலத்தில் விளைச்சல் தரக்கூடிய காய்கறிகள் பயிரிடு வதன் மூலம் உடனே வருமானம் கிடைக்கும். கீரைகள் பயிரிட்டால் பதினைந்து நாட்களில் பலன் கிடைத்துவிடும். இரண்டு மூன்று மாதங்களில் விளைகிற காய்கறி களையும் பயிரிடலாம். இயற்கையாக விளைவிக்கப்படும் காய்கறிகளுக்கு எப்போதுமே சந்தையில் மவுசு அதிகம்.

காய்கறி உற்பத்தி அதிகரிக்கும்போது நல்ல விலை போகவில்லை என்றால் விவசாயிகள் கவலைப் படத்தேவையில்லை. காய்கறிகளை பதப்படுத்தி பாதுகாக்கலாம். பாகற்காய், அவரை, வெண்டைக்காய் என்று எல்லா காய்கறிகளிலும் வற்றல் போடலாம்.மழைக் காலங்களில் நல்ல விலைபோகும். வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்தும் சம்பாதிக்கலாம். தக்காளி போன்ற அழுகிப் போகிற காய்கறிகள், பழங்கள் விற்கவில்லை என்றால் அவற்றை பதப்படுத்தி பழரசம், சாஸ் தயாரிக்கலாம். கீரை வகைகளைக் கூட வீணாக்காமல் பதப்படுத்தி கீரைப்பொடி செய்து விற்கலாம்.

உலக நாடுகள் எல்லாமே நோய்த்தொற்று சிக்கலில் இருக்கும் போது விரைவிலேயே மேற்கு ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் உணவுப் பொருள்களுக்கு அதிக தேவை ஏற்படும் அப்போது விவசாயிகளுடைய விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.'இளைஞர்கள் விளை நிலங்களுக்கு எங்கு செல்வார்கள்? தினக்கூலிகளாய் இருப்பதால்தானே இடம்பெயர்ந்து இருக்கிறார்கள்?' என்ற கேள்வி எழலாம்.

டென்னசி பள்ளத்தாக்கு திட்டம்1929 ல் அமெரிக்காவில் நிகழ்ந்த பொருளாதார சிக்கலும் தீர்வும் இப்போது பொருத்தமாக இருக்கும். அப்போது அமெரிக்காவின் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. அதனால் அமெரிக்க பொருளாதாரம் நிலைகுலைந்து போனது. பெரும் பணக்காரர்கள் ஒரே இரவில் தெருவுக்கு வந்தார்கள். அடுத்த தேர்தலில் ரூஸ்வெல்ட் ஆட்சிக்கு வந்தார். புதிய அணுகுமுறை என்ற கொள்கையை பின்பற்றி பல நிவாரணத் திட்டங்களை அறிவித்தார். அதில் வெற்றிகரமான ஒன்றுதான் டென்னசி பள்ளத்தாக்குத் திட்டம். 1933ல் கொண்டுவரப்பட்டது.


டென்னசி பள்ளத்தாக்கு பகுதியில் இருந்த நாற்பதாயிரம் ஹெக்டேர் நிலங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்பட்டன. ஒவ்வொரு அங்குலத்திலும் பொருள் உற்பத்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.அலுவலகம் சென்றவர்கள் கூட விவசாயப் பணிகளுக்கு வந்தார்கள். நீர்ப்பாசன வசதிகள் மேற்கொள்ளப்பட்டன. அணைக்கட்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பலர் இணைந்து மின்சாரம் கூட தயாரித்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை மாறி அமெரிக்க பொருளாதாரம் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

இப்போது நம்முடைய நேரம்இப்போது இளைஞர்கள் செய்ய வேண்டியது விவசாயத்திற்கு திரும்புவதுதான். நிலம் இருக்கும் இளைஞர்கள் வேறு வேலை செய்வதற்காக நகரங்களுக்கு செல்வதை தவிர்க்கலாம். நகரத்தில் இருக்கும் இளைஞர்கள் விவசாயம் செய்ய விரும்பினால் அமெரிக்காவில் நடந்தது போல அரசே தற்காலிகமாக தரிசு நிலங்களை வழங்க வேண்டும். இதனால் தரிசு நிலங்கள் விவசாய நிலங்களாக மாறும். விவசாய உற்பத்தி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்.அதேசமயம் இந்த வளர்ச்சி நிரந்தரமானதாக இருக்கும். எந்த ஒரு கட்டத்திலும் வருமான வீழ்ச்சி, பொருளாதார வீழ்ச்சி என்ற நிலை வராது.

உள்ளூர் வளங்கள்உள்ளூர் வளங்களை அறிவதில் இளைஞர்கள் இன்னும் கவனம் பெறவில்லை. நம்மை சுற்றி உள்ள உயிரிப் பல்வகைமையை அறிவதே சிறந்த பொருளாதார அறிவு. இயற்கையாக விளைந்து கிடக்கும் மூலிகைகள், வனப் பொருட்கள், வேர்கள், நார்கள் ஆகியவற்றை சந்தைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.


உள்ளூர் வளங்களை ஏற்றுமதி செய்யவும் இளைஞர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். தேடிப் பார்த்தால் நம்மைச் சுற்றி இருப்பவை எல்லாமே வளமாக இருப்பதை உணர முடியும். உள்ளூர் வளங்களை சந்தைப்படுத்தினாலே சம்பாதிக்கலாம்.விவசாயம் உள்ளிட்ட முதன்மைத்துறை வலுப்பெற்றால்தான் தொழிற்சாலைகளுக்கு மூலப்பொருட்கள் கிடைக்கும். மூலப்பொருட்கள் இருந்தால்தான் தொழிற்சாலைகள் இயங்கும். தொழிற்சாலைகள் இயங்கினால்தான் வணிகம், போக்குவரத்து, வங்கி போன்ற சேவைத் துறைகள் இயங்க முடியும்'.

ஒரு விபத்து நிகழும் போது இனிமேல் அப்படி ஒரு விபத்து நிகழ்ந்து விடக்கூடாது என்று தற்காப்பு நடவடிக்கைகளை எடுப்போம் இல்லையா? அப்படி ஒரு தற்காப்பு நடவடிக்கைதான் முதன்மை துறையை நோக்கி முதல் அடி எடுத்து வைப்பது. இது தற்காப்பு மட்டுமல்ல, வீழ்ச்சி ஏற்படாத நிலையான வளர்ச்சியை நோக்கி எழுவது.

-முனைவர் ஆதலையூர் சூரியகுமார்ஆட்சிப் பேரவைக் குழு உறுப்பினர்

பெரியார் பல்கலைக்கழகம்

சேலம். 98654 02603

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement