dinamalar telegram
Advertisement

பெண் எழுத்து புறக்கணிக்கப்படுகிறதா: தமிழ் மாணிக்கம் சு.தமிழ்ச்செல்வி

Share
Tamil News
தென் மாவட்டங்களிலிருந்து ஆடுகளுடன் மேய்ச்சல் நிலம் தேடி வெயில், மழை, பனி, புயல் என அத்தனை இயற்கைச் சீற்றங்களை எதிர்கொண்டு வாழ்க்கை நடத்தும் மக்களின் கண்ணீர் காவியத்தை 'கீதாரி' நாவலில் கடைந்தெடுத்துத் தந்திருக்கிறார்.

மாணிக்கம், அளம், பொன்னாச்சரம், ஆறுகாட்டுத்துறை, கண்ணகி, கற்றாழை, தொப்புள்கொடி என இவரது நாவல்கள் எளிய மக்களின் வலியை பேசுகின்றன. சிறந்த நாவலுக்கான தமிழக அரசின் விருது 'மாணிக்கம்' நாவலுக்கு கிடைத்தது. இவர் திருவாரூர் மாவட்டம் கற்பகநாதர்குளத்தில் பிறந்த எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி. கடலுார் மாவட்டம் கோ.ஆதனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தலைமையாசிரியையாக பணிபுரிகிறார்.இவருடன் ஒரு நேர்காணல்...

எளிய கிராமத்து குடும்பப் பின்னணியில் பிறந்தவர் நீங்கள். இலக்கிய வாழ்வின் மீது ஆர்வம் வந்தது எப்படி?நான் பிறந்த ஊர், அதன் வாழ்க்கை முறை, நிலத்தோற்றம் இவையே பின்னாளில் எழுதுவதற்கான கருப்பொருட்களை தந்தன. சிறுவயது முதலே அம்மா, அக்காக்களிடம் கதை கேட்டு வளர்ந்ததெல்லாம் சாதகமான காரணிகளே. எனது புனைவுகளின் ஆன்மாவாக எங்கள் மக்களின் பண்பாடும், வாழ்வோடு அவர்கள் நடத்தும் போராட்டமுமே அமைந்திருக்கிறது. இந்த வகையில் எளிய கிராமத்து பிறப்பும், வளர்ப்புமே என்னை எழுதத் துாண்டின. எனது திருமணம், அதன் மூலம் உருவான குடும்ப சூழலும் எழுத இயைந்த சூழலை உருவாக்கித் தந்தது. எனது கணவர் கரிகாலனும் எழுத்தாளர். இவ்வாறு எழுத உகந்த நிலமையே எனது வாழ்வில் தொடர்ந்து அமைந்திருக்கிறது.

உழைக்கும் பெண்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் சிக்கல்கள், இழப்புகளையே கதை மாந்தர்களாக நாவல்களில் பதிவு செய்யக் காரணம்?இதுவே எனக்கு பரிச்சியமான சூழல். நான் பார்த்த, பழகிய மனிதர்கள் இவர்கள். நான் ஒரு பெண்ணாக இருப்பதால் பெண்களின் பாடுகளை அறிவது எனக்கு எளிதாக இருக்கிறது. நான் கண்ட, துய்த்த யதார்த்தமே புனைவைவிட மோசமானதாக இருக்கிறது. இவர்களது வாழ்வை எழுதுவதே நான் இவர்களுக்கு செய்கிற நன்றியாக உணர்கிறேன்.

அறிவு சமூகத்தில் பெண் எழுத்து புறக்கணிக்கப்படுகிறது என 2016 ல் கருத்தை பதிவு செய்தீர்கள். அச்சூழ்நிலையில் மாற்றம், முன்னேற்றம் தெரிகிறதா?இப்போது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. முகநுால் போன்ற சமூக ஊடகங்கள் பெண்களின் வெளிப்பாட்டுக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன. இவற்றை பயிற்சிக்களமாகக் கொண்டு பெண்கள் அடுத்தத் தளத்துக்கு முன்னேறுவது அவசியம்.

பெண்கள் அதிகம் ஈடுபடாத துறையாக விமர்சனத்துறை உள்ளது. இதற்கு வராததற்கு பெண்கள் முன் உள்ள சவால்களாக எதை பார்க்கிறீர்கள்?படைப்பு என்பது புனைவு சார்ந்தது. இது கற்பனை சார்ந்தது. படைப்பில் ஒரு விஷயத்தை உருவகமாக மாற்றிவிட முடியும். ஆனால் விமர்சனம் தர்க்கம் சார்ந்தது. ஒன்றை ஒட்டியும், வெட்டியும், ஆதரித்தும், மறுத்தும் பேச வேண்டியுள்ளது. இன்னும் அத்தகைய சுதந்திர வெளி நம் சமூகத்தில் முழுமையாக உருப்பெறவில்லை. ஆனாலும் இப்போது பெண்கள் விமர்சனக்கலையில் ஈடுபடவே செய்கிறார்கள்.

'கண்ணகி' நாவலுக்கு எதிர் விமர்சனம் அதிகம் இருந்தது. அதை எப்படி எதிர்கொண்டீர்கள்?இலக்கியம் பொதுத்தளம். இதில் பாராட்டு, எதிர்மறை விமர்சனங்கள், குற்றம் கண்டுபிடித்தல் இருக்கவே செய்யும். இத்தகைய விமர்சனங்களில் உண்மை இருந்தால் பொருட்படுத்துவேன். நாம் எழுதியதை எல்லோரும் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தவறானது.

இலக்கியப் பணியில் மறக்க முடியாத அனுபவம்?எனது ஒட்டுமொத்த படைப்பிற்காகவும் எங்களூர்க்காரர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடமிருந்து பொற்கிழி விருது பெறும் வாய்ப்பு அமைந்தது. எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், பிரபஞ்சன் போன்றோரிடம் பழக அமைந்த சந்தர்ப்பங்கள் மறக்க இயலாதவை.

உங்கள் எழுத்தில் மனநிறைவைத் தந்த படைப்பு?அனைத்தும் நிறைவை அளித்தவையே. நிறைவைத்தராத அனுபவங்களை எழுதத் தேர்ந்தெடுக்கவே மாட்டேன்.

அடுத்த படைப்பு?துாத்துக்குடி கடற்கரை வாழ்வை மையமாகக் கொண்டது. இறந்த காலமும், நிகழ் காலமும் இணைந்த படைப்பு.

வாசித்ததில் வியந்த, பிடித்தமான படைப்பு?வைக்கம் முகம்மது பஷீர், டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கி, அம்பை இப்படி நிறைய பேருடைய படைப்புகள் இருக்கின்றன.

கருத்துப் பரிமாற thamizhselvi1971@gmail.com

பாரதி
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (3)

  • A.Gomathinayagam - chennai,இந்தியா

    தற்பொழுது மின் ஊடகம், முக நூல், வாட்டஸ் அப் வந்த பிறகு ஏகப்பட்ட தரமான சிறிய, பெரிய படைப்புகள் மாற்று சிந்தனையுடன் அளித்து இளைய தலைமுறைகள் சாதனை செய்கிறார்கள். அவைகளை பாலினம் பார்த்து யாரும் படிப்பதில்லை. இன்று அனைவரும் விரும்புவது சுருக்கமான வித்தியாசமான படைப்புகளையே

  • Loganathaiyyan - Kolkata,இந்தியா

    பெண் எழுத்து புறக்கணிக்கப்படுகிறதா?

  • ஆல்வின், பெங்களூர் - ,

    பொதுவாக புத்தகம் படிப்பவர்கள் கதை அல்லது எழுத்து ஒட்டத்தை உள்வாங்கி படிப்பது வழக்கம். வாசிக்கும் போது எழுத்தாளரின் அடையாளம் வாசிப்பவர்களின் மனதில் புலப்படுவது இல்லை. வாசிக்க தொடங்கும் முன் எழுத்தாளர் பற்றிய தேர்வு மனதில் தோன்றுவதை மறுக்க முடியாது. ஆனால் அது பாலின பேதம் சார்ந்தது அல்ல. படிப்பதில் ஏற்படும் தாக்கங்கள் மீண்டும் அந்த எழுத்தாளர் பற்றிய சிந்தனையை தூண்டுகிறது. இந்த கேள்வி புறக்கணிக்க தக்கது.

Advertisement