Advertisement

கடனாளியாக சாக மாட்டோம்!

Share
கடனாளியாக சாக மாட்டோம்!


க.உமாமகேஸ்வரி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நான், சென்னை மற்றும் கர்நாடகா மாநிலத்திற்கான, 'தமிழச்சி சானிட்டரி நாப்கின்ஸ்' வினியோகஸ்தராக உள்ளேன்.கடந்த, ஐந்து ஆண்டுகளாக, மகளிர் சுய உதவிக் குழு நடத்தி வருகிறோம். தனியார் வங்கி சாரா நிதி நிறுவனத்தில், கடன் பெற்று, சுயதொழில் மேற்கொண்டுள்ளோம்.
மற்ற குழுக்கள் எப்படி என்று தெரியாது; ஆனால், எங்கள் குழுவில், ஒரு தவணை கூட, தாமதமாக கட்டியது கிடையாது.ஊரடங்கால், சாதாரண மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்கள் குழுவில் உள்ள பெண்கள் அனைவருமே, பூ விற்பனை, தையல் தொழில், தள்ளுவண்டி டிபன் கடை என, தினக்கூலிகள். அவர்களின் கணவர்களும், ஆட்டோ ஓட்டுனர், எலக்ட்ரீஷியன், கார்பென்டர் என, அன்றாட வருவாயை நம்பி, குடும்பம் நடத்துவோர் தான். ஊரடங்கால், மூன்று மாதங்களாக வேலை இழந்து, தினமும் உணவிற்காக, கஷ்டப்பட்டு வருகின்றனர்.நாங்கள், அன்றாடம் உழைத்தால் மட்டுமே, வருவாய் கிடைக்கும். மகளிர் சுய உதவிக் குழு வழியாக பெற்ற கடனிற்கு, ஐந்து ஆண்டுகளாக, 1 ரூபாய் குறையாமல் வட்டியும், முதலும் கட்டி வந்துள்ளோம்.வங்கியை ஏமாற்ற வேண்டிய, அவசியம் இல்லை. ஆனால் தற்போது, வங்கியில் இருந்து, கடனை கட்டும்படி, தினமும், போன் செய்கின்றனர். மேலும், 'கடனுக்கான வட்டி, அசலைத் தாண்டும்' என கூறுவதால், நாங்கள் அனைவரும்
அதிர்ச்சியடைந்துள்ளோம்.வருமானம் இன்றி தவிக்கும் நாங்கள், எப்படி கடனை கட்ட முடியும்?மத்திய, மாநில அரசு மற்றும் நிதி நிறுவனத்திற்கு, எங்கள் குழுவினர் சார்பாக, இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன்...நாங்கள், கடனாளியாக சாக விரும்பவில்லை. ஆறு மாதத்திற்கு பின், நிலைமை சரியாகும் என, எல்லாரையும் போல, நாங்களும் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.எனவே, தவணை காலத்தை, வட்டி இல்லாமல் நீட்டித்துக் கொடுத்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால், எங்களின் பலருக்கு வேலையே இல்லை; சிலருக்கு, பாதி சம்பளம் தான் கிடைக்கிறது.
இந்நிலையில், குடும்பத்தின் சாப்பாட்டை பார்ப்பதா, கடனை அடைப்பதா தெரியவில்லை. கடனை தள்ளுபடி செய்ய வேண்டாம்; கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள்.
தயவு செய்து, கருணை காட்டுங்கள்.

இனியும்தாமதிக்கக்கூடாது!எஸ்.பாலசுப்பிரமணியன், காஞ்சிபுரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இந்தியாவில், இந்தாண்டு இறுதிக்குள், வழக்கத்தைவிட கூடுதலாக, 2 கோடி குழந்தைகள் பிறப்பர்' என, ஐ.நா., தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவுக்கு அடுத்தபடியாக, சீனாவில், 1.35 கோடியும்; நைஜீரியாவில், 60 லட்சம் குழந்தைகளும் கூடுதலாக பிறப்பர் என, கணிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில், வேலை வாய்ப்பின்மை, வறுமை, சுகாதாரமின்மை, இட நெருக்கடி உட்பட, பெரும்பால சமூக பிரச்னைகளுக்கு, மக்கள் தொகை பெருக்கம் தான் காரணம்.இனியும், குடும்ப கட்டுப்பாடு விஷயத்தில், அலட்சியமாக இருக்கக் கூடாது. நம் நாட்டில், அனைத்து
திருமணங்களும், கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும்; இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது என, சட்டம் இயற்ற வேண்டும்.இரண்டாவது குழந்தை பிரசவத்தின் போதே, தாய் அல்லது தந்தைக்கு, குடும்பக் கட்டுப்பாட்டு சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கான, முழு செலவையும், அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பெருகி வரும் மக்கள்தொகையை, கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். இதில், பொருளாதாரமோ, மதமோ குறுக்கே நிற்கக் கூடாது. நாட்டின் நலனுக்காக, மத்திய அரசு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவலத்தைதடுக்க வேண்டும்!கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா நோய் தொற்று காரணமாக, சென்னை கோயம்பேடில் இயங்கி வந்த மார்க்கெட் மூடப்பட்டு, திருமழிசையில், காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இங்கு, சில்லரை விற்பனைக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது; மொத்த விற்பனை மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.திருமழிசையில், சேமிப்பு கிடங்கு இல்லாததால், தினமும், 2 லட்சம் கிலோ காய்கறி வீணாகுகிறது; அதை, குப்பையில் கொட்டுகின்றனர் என்ற செய்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதே போல, காய்கறி பயிரிட்டுள்ள விவசாயிகளும், போதிய விலை கிடைக்காததால், சாலையோரங்களில் கொட்டி வருகின்றனர்.ஒரு புறம், மக்களுக்கு காய்கறி கிடைக்கவில்லை; மறுபுறம், உரிய விலை கிடைக்காததால், வீணாக கொட்டப்படுகிறது. இந்த அவல நிலையை, உடனே தடுக்க வேண்டும்.விவசாயிகளிடம் இருந்து, காய்கறியை, அரசே கொள்முதல் செய்ய வேண்டும். அதை, சேமிப்பு கிடங்குகளில் வைத்து, முறையாக பராமரிக்க, வினியோகிக்க, ஒரு துறையை ஏற்படுத்த வேண்டும். கொரோனா கற்றுக்கொடுத்துள்ள பாடத்தை உணர்ந்து, உணவு விஷயத்தில், இனி மேலும் அக்கறையுடன் இருக்க வேண்டும்.

உண்மை என்ன?என்.ஆசைத்தம்பி, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், சென்னை தவிர்த்து மற்ற பகுதிகளில் குறைந்திருந்த, கொரோனா வைரஸ் பாதிப்பு, சமீப நாட்களில், அதிகரிக்க துவங்கியுள்ளது. பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப அனுமதிக்கப்பட்டதுமே, தொற்று எண்ணிக்கை கடுமையாக உயர்ந்ததற்கு காரணம்.தொற்று நோயின் தீவிரம் கருதி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, ஜூலையில் நடத்தவும்; பள்ளிகளை, ஆகஸ்ட்டில் திறக்கவும், கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மருத்துவம், காவல் துறை மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு, மனரீதியில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.சென்னையில், அரசு மருத்துவமனைகள், கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன. திருமண மண்டபங்கள், மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகின்றன.
இட நெருக்கடி காரணமாக, வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட சிலரை, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும்படி, மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். சென்னையை பொருத்த வரையில், கொரோனா, சமூகபரவலாக மாறி விட்டதோ என, எண்ணத் தோன்றுகிறது. நோய் குறித்த அச்ச உணர்வுடன், மக்கள் நடமாடி வருகின்றனர். தமிழக அரசு, கொரோனா பாதிப்பு குறித்து, உண்மை நிலையை, மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (3)

  • veeramani - karaikudi,இந்தியா

    சென்னை மாநகர மக்கள் மார்ச், ஏப்ரலில் தன்னிச்சையாக சுற்றியது தற்போது எப்படி உள்ளது பாருங்கள். இரண்டாம் உலகப்போரின் போது எம்ப்டன் கப்பல் சென்னையில் குண்டு போட்டதுபோல் தற்சமய நிலை உள்ளது. அணைத்து ஆபீஸ்களும் சென்னையில் இருப்பதால் தமிழக மக்கள் அனைவரும் போனவரை வேண்டியுள்ளது. தற்சமயம் சென்னை கோஸ்ட் சிட்டியாக உள்ளது. அம்மாவின் அரசு இனிமேலாவது வரக்கூடிய சில பல தொழில்களை தெந்தமிழகத்திற்கு மாற்றவேண்டும். மக்கள் குவிப்பும் குறையும். பணப்புழக்கம் நன்குஇருக்கும்.

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    அம்மணி, நீங்க உழைத்து, அரைக்காசு கால் காசாக சேர்த்தாவது கடனடைக்கிறேன் என்கிறீர்கள், அதனால்தான் வங்கிகள் நெருக்குகின்றன நீரவ், மல்லையா போல் ஆயிரம் கோடி வாங்கி நாட்டை விட்டு ஓடுபவர்களுக்கு பத்திரமாக விசா வாங்கிக் கொடுத்து அனுப்பி வைப்பார்கள் பாரத நீதி இதுதான்

  • venkat Iyer - nagai,இந்தியா

    கே.ஆர் உபேந்திரன் திருமிழசையில் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி குப்பையில் கொட்டப்படுவது குறித்து மீடியாவில் வெளிவந்த செய்தியை பார்த்து கூறியுள்ளார்.உண்மையில் ஆரம்ப நாட்களில் காய்கறி வரத்தும் குறைவாக இருந்தது.வாங்குபவர்களின் வரத்தும் மிகவும் குறைவாக வந்ததால் உடனடியாக வீணா போகும் காய்கறிகள் குப்பையில் கொட்டப்பட்டு உண்மைதான்.இப்போது தகவல் பரவி சென்னை மற்றும் சுற்றி உள்ள பல மாவட்ட கிராமங்களில் இருந்து காய்கறி கடையாளர்கள் பலர் வந்து வாங்கி செல்கின்றனர்.அதோடு கொயம்பேடு காய்கறி விற்பனையை விட கூடுதலாக செல்வதற்கு வாய்ப்புகள் ஏற்படும் நிலையும் இருக்கிறது.ஊரடங்கு உத்தரவினால் வாகன சோதனையில் அன்றாடம் காய்கறி வண்டிகளுக்கு பாஸ் அளித்து இப்போது பிரச்சனை இல்லாமல் சாதகமான நிலை உருவாகி உள்ளது.அதிகப்படியாக வரும் காய்கறிகளை ஏலம் விடுவதும் கடனில் விற்றுப் பின் பணம் கொடுக்க ஏஜெண்ட் சொல்வதால் காய்கறி தேக்கம் எதுவும் கிடையாது. நடப்பு நிலையை அறிந்து எழுதுங்கள்.இப்படி நீங்கள் கூறுவதால் விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வரும் வரத்து குறைய வாய்ப்பு ஏற்படும்.

Advertisement