Advertisement

ஆந்திர போலீசாருக்கு, சல்யூட்!

Share
ஆந்திர போலீசாருக்கு, 'சல்யூட்!'


@@அ.குணசேகரன், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் மக்களிடம், மனிதநேயம் இருப்பதால் தான், சுனாமி, கொரோனா போன்ற பேரிடர் நேரங்களில், ஒருவருக்கு ஒருவர் உதவிக்கரம் நீட்டி, அந்த இக்கட்டான நிலையை கடந்து வருகிறோம்.தற்போதைய, ஊரடங்கு காலத்தில், அரசு மட்டுமின்றி, தன்னார்வலர்கள், அமைப்புகள், கட்சிகள் என, பல தரப்பில் இருந்தும், மக்களுக்கு உதவிகள் கிடைத்தன; அதனால் தான், 50 நாட்களுக்கு மேல், வருமானம் இல்லாமல் தவித்த போதும், மக்கள் யாரும் பட்டினியால் வாடவில்லை.இந்நிலையில், டில்லியில் இருந்து, சிறப்பு ரயிலில், சென்னை வந்து கொண்டிருந்த, 1,500 தமிழர்களுக்கு, 24ம் தேதியே, அவர்கள் கையில் எடுத்து வந்திருந்த உணவு தீர்ந்து விட்டது. என்ன செய்வது என, தெரியவில்லை. அதில், முதியோர், பெண்கள், குழந்தைகள் பயணித்தனர்.அந்த பயணியரில் ஒருவர், சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதனை, மொபைல்போனில் தொடர்பு கொண்டு, விஷயத்தைக் கூறியுள்ளார்.அவர், உடனடியாக, ஆந்திர மாநிலம், அனந்தபூர், எஸ்.பி. சத்திய ஏசுபாபுவை தொடர்பு கொண்டு, அந்த ரயில், ஆந்திராவுக்கு வரும் போது, பயணியருக்கு உணவு வழங்கி, உதவி செய்ய வேண்டுகோள் விடுத்துள்ளார்; மேலும், அதற்கான பணத்தை கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளார்.சத்திய ஏசுபாபு, உடனே, டி.ஜி.பி.,தாமோதர் கவுதம் சவாங் உடன் இணைந்து, உதவி செய்ய களத்தில் குதித்தனர். அந்த ரயில், குண்டக்கல் நிலையம் வந்தபோது, 1,500 பயணியருக்கும், பிரியாணி, சீரக அரிசி சாதம், கலவை சாதம், பிஸ்கட், குடிநீர் பாட்டில் ஆகியவற்றை, இன்முகத்துடன் கொடுத்து, அவர்களின் பசியை போக்கினர்.ரயில் பயணியர் அனைவரும், ஆந்திரா போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.சென்னை போலீஸ் கமிஷனர், விஸ்வநாதன், ஆந்திரா போலீசாருக்கு நன்றி கூறி, பணம் அனுப்பி வைப்பதாக கூறியதற்கு, அவர்கள் பெருந்தன்மையாக, 'வேண்டாம்' என மறுத்து, தங்களது விருந்தோம்பலை வெளிப்படுத்தி விட்டனர்.மனித நேயம் நிறைந்திருக்கும் நம் நாட்டில், எத்தனை பேரிடர் வந்தாலும் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை இருக்கிறது. சென்னை போலீஸ் கமிஷனருக்கும், ஆந்திர போலீசாருக்கும், ஒரு, 'ராயல் சல்யூட்!'


சேமிப்புதிட்டத்தை மேம்படுத்தணும்!

க.ஸ்ரீதரன், கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஊரடங்கு, பேரிடர் காலங்களில், சேமிப்பு பல விதங்களில் உதவும். எனவே, மத்திய அரசு, அனைத்து மாநிலங்களிலும், அஞ்சலக சேமிப்பை ஊக்கப்படுத்த வேண்டும். தற்போது, கொரோனா ஊரடங்கால், மக்கள் படும் துயரத்திற்கு அளவே இல்லை.வருமானமின்றி, கையில் பணமின்றி வாழ்க்கை நடத்த, தினமும் மக்கள் கஷ்டப்படுகின்றனர். நம் நாட்டில், 60 சதவீதம் மக்கள், நாளைய வாழ்க்கையை, கேள்விக்குறியுடன் தான் எதிர்பார்த்துள்ளனர்.சேமிப்பு குறித்து, பெரும்பாலான மக்களிடம் விழிப்புணர்வு இல்லை. சிறு துளி பெருவெள்ளம் என்பது போல, தினமும், மிக சிறிய தொகையை சேமித்தால், சில ஆண்டுகளில், அது பெரிய தொகையாக மாறி, அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உதவும்.எனவே மத்திய அரசு, அஞ்சலக சேமிப்பில், வட்டி விகிதங்களை மாற்றி அமைத்தும், முகவர்களின் கமிஷன்களை பரிசீலித்தும் வழிகாட்டினால், 'டிபாசிட்' தொகை குவியும்.
மாதாந்திர சேமிப்பு திட்டம், மாதாந்திர வருவாய் திட்டம், டைம் டிபாசிட் போன்ற திட்டங்களில் முதலீடு செய்யும் மக்கள், தங்களின் அவசர தேவைகளுக்கு பணம் பெறுவதற்கு, எளிமையான வழிமுறைகள் இல்லை; இதனால் மக்கள், அஞ்சலக சேமிப்பில் சேர தயக்கம் காட்டுகின்றனர்.மேலும், வட்டி விகிதங்களையும், அவசர தேவைக்கு, கணக்கை முடித்துக் கொள்ளவும், வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுதல் அவசியம். கடந்த, 2014க்கு முன், வட்டி விகிதம், வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக இருந்தது. அதற்கு பின், சேமிப்புகளுக்கு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி விகிதம் மாற்றப்பட்டு, கழுதை தேய்ந்து, கட்டெறும்பாகிக் கொண்டிருக்கிறது.
அஞ்சலக சேமிப்புத் திட்டத்தை, மத்திய அரசு மேம்படுத்த வேண்டும்.


காங்கிரசை பாராட்ட வேண்டும்!

கே.எஸ்.வி.கிருஷ்ணன், கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இப்பகுதியில், வாசகர் ஒருவர், 'மூக்கறுபட்ட பிரியங்கா' என்ற தலைப்பில், கடிதம் எழுதியிருந்தார்.அதில், 'உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை, அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க, காங்கிரஸ் சார்பில், 1,000 பஸ்கள் ஏற்பாடு செய்யப்படும்' என, அறிவிக்கப்பட்டது. அக்கட்சி கொடுத்த பட்டியலை ஆய்வு செய்த போது, அதில், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களின் எண்கள் இருந்தன.இந்த பஸ்கள் விவகாரத்தில், பிரியங்காவிற்கு மட்டுமல்ல; காங்கிரசின் மூக்கும் அறுக்கப்பட்டுள்ளது. அரசியலில், தான் ஒரு கத்துக்குட்டி என்பதையும், அவர் நிரூபித்துள்ளார் என, அந்த வாசகர் குறிப்பிட்டு இருந்தார்.அந்த பஸ்களின் விபரங்கள் உடைய பட்டியலை, ஆய்வு செய்ய, எனக்கு வாய்ப்பு கிடைத்ததால், இதை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். காங்கிரஸ் கொடுத்த பட்டியலில், எழுத்துப் பிழைகள் மட்டுமே இருந்தன; அதை நீக்கிய பின், 990 பஸ்களின் விபரங்கள், தெளிவாக இருந்தன. மற்றவை மட்டுமே, ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்கள்.அந்த வாசகருக்கு, 990 பஸ்கள் பெரிதாக தெரியவில்லை. மீதமுள்ள சொற்ப வாகனங்களை, பூதக்கண்ணாடியால் பார்த்து, அவர் கடிதம் எழுதியுள்ளார்.புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு, நடைபயணமாகச் செல்லும் துயரத்தை கண்டு, அதை நிவர்த்தி செய்ய, எதிர்க்கட்சி முன்வந்திருக்கிறது; அதை பாராட்ட வேண்டும். ஒவ்வொருவருக்கும், அரசியல் தலைவர்களைப் பற்றி வெவ்வேறு கருத்துக்கள் இருக்கலாம். அதற்காக, ஊர்ஜிதப்படாத செய்திகளின் வாதங்களை ஏற்று, பிறரை குறை கூறுவதை தவிர்க்க வேண்டும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement