Advertisement

களப்பணியாளர்கள் சம்பளத்தில் கையாடல்?

Share
சென்னை : கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள களப்பணியாளர்கள் சம்பளத்தில், மாநகராட்சி அதிகாரிகள் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில், மாநகராட்சி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, 90 நாட்களுக்கு, வீடு வீடாக, காய்ச்சல் இருக்கிறதா எனக் கண்டறிய, 11 ஆயிரத்து, 250 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்த களப்பணியில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் பிளஸ் 2 முடித்தவர்கள் அதிகளவு ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு, தினமும், 400 ரூபாய் என்ற விதத்திலும், 12 ஆயிரம் ரூபாய் சம்பளம், ஊக்கத்தொகையாக, 3,000 ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது.

ஏப்ரல் மாதத்தில் இருந்து களப்பணியில் ஈடுபட்டுள்ள அவர்களுக்கு, அம்மாதத்திற்கான சம்பளம், மே 15ம் தேதிக்கு மேல் தான் வழங்கப்பட்டன. இதனால், பலர் களப்பணியை கைவிட்டனர். இந்நிலையில், களப்பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம் முறையாக வழங்கப்படாமல், மாநராட்சி அதிகாரிகள் பலர் குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்தது தெரிய வந்துள்ளது.

பெயர் வெளியிட விரும்பாத, மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: களப்பணியாளர்கள் பலரை, மகளிர் குழுவினர் பரிந்துரைத்து பணியமர்த்தினர். அதனால், களப்பணியாளர்களின் சம்பளத்தில், 5 சதவீதம், தங்களுக்கு ஊக்கத்தொகையாக வேண்டும் என, அக்குழுவினர் கேட்டனர்.ஆனால், 'தங்களது உயிரை பணயம் வைத்து, களப்பணியில் ஈடுபட்டு வருபவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய முடியாது' எனக்கூறி, அந்த குழுவினருக்கு ஊக்கத்தொகை வழங்க, மாநராட்சி கமிஷனர் மறுத்து விட்டார்.

பின், அவர்களது சம்பளத்தை, வங்கி கணக்கில் செலுத்தவும் அறிவுறுத்தினார்.ஆனால், பல வார்டுகளில், வங்கி கணக்கில் பணம் செலுத்தாமல், ரொக்கமாக வழங்கி உள்ளனர். அதில், களப்பணியை கைவிட்டு சென்றவர்களது சம்பளத்தையும் சேர்த்து, கையாடல் செய்துள்ளனர்.மேலும், அனைவரின் சம்பளத்திலும், 500 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை பிடித்தம் செய்து வழங்கியுள்ளனர். எனவே, மாநகராட்சி கமிஷனர் தலையிட்டு, மே மாதத்திற்கான சம்பளத்தையாவது, அவர்களுக்கு முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Raj - Chennai ,இந்தியா

    ஊழல் பெருச்சாளிகள். சாகும் வரை தூக்கிலிட வேண்டும்.

Advertisement