Advertisement

எப்படி சமாளிக்க போகிறோம்?

Share
எப்படி சமாளிக்க போகிறோம்?


வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய,'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில், 40 சதவீத மக்கள், வறுமை கோட்டிற்கு கீழே உள்ளனர். 'கொரோனா' ஊரடங்கால், இவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கு, அரசு தரும் நிவாரணம், யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது. ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உள்ளோருக்கு, மூன்று மாதத்திற்கு தேவையான உணவு பொருட்களும், 5,000 ரூபாயும் வழங்க வேண்டும்.அரசியல் கட்சிகள், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, உதவவே இல்லையே ஏன்? தேர்தல் நேரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கட்சிகளால், இப்போது ஏன் கொடுக்க முடியாது? அவர்களுக்கு ஓட்டு தான், தேவை; மக்கள் அல்ல!தேசிய கட்சிகளுக்கு, ஆண்டுதோறும் அன்பளிப்பு என்ற பெயரில், கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஆதாரங்கள் கிடைக்கின்றன. அந்த பணத்தை, நாட்டிற்காக இப்போது கொடுத்து உதவலாம்.பேரிடர் காலத்தில் உதவாத பணத்தை வைத்து, அந்த கட்சிகள் என்ன செய்யப் போகின்றன?புயல், பெருவெள்ளம், சுனாமி, வைரஸ் தொற்று போன்ற பேரிடர் காலங்களில், கட்சிகள் ஒன்றிணைந்து, மக்களுக்கு உதவிக்கரம் நீட்டாமல், அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது, நம் நாட்டின் சாபக்கேடு.ஊரடங்கு முடிந்த பின், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்திக்கும் என்றும், வேலை இழப்பும், பெருமளவில் இருக்கும் என்றும், பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதன் விளைவாக, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து, சமூகக் குற்றங்கள் பெருக வாய்ப்பு உள்ளது.இத்தனை சவால்களை, அரசு எப்படி எதிர்கொள்ளப் போகிறது; பொருளாதாரத்தை எப்படி துாக்கி நிறுத்தப்போகிறது என்பது தான், மிகப்பெரிய கேள்வி.நோய் தொற்று பரவல் நின்றால் தான், பொருளாதார முன்னேற்றத்தில் கவனம் செலுத்த முடியும். எனவே மக்கள், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், நோய் தொற்று பரவலை தடுக்க வேண்டும்.முதலில் மீனை கொடுங்கள்!

பா.பாலசுப்ரமணியன், புதுச்சேரியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கொரோனா எனும் கொடிய தாக்குதலில் இருந்து, நாட்டின் பொருளாதாரம் மீண்டு எழ, மத்திய நிதி அமைச்சரின், 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்ட அறிவிப்புக்கள் வரவேற்புக்கு உரியவையே. ஆனால், நடைமுறை உண்மைளையும் பார்க்க வேண்டும். வங்கிகளின் மூலம், கடனை வாரி வழங்குவதால் மட்டுமே, மக்களிடம் பணப்புழக்கம் ஏற்பட்டு விடாது. மக்களிடம் வாங்கும் சக்தி குறைந்துள்ளதால், பொருட்களை வாங்க மாட்டார்கள். விற்பனை குறையும் என்பதால், வியாபாரிகள் நன்கு யோசித்து, அளவோடு தான், கடன் வாங்குவர்.வியாபாரிகளுக்கு, கடன் வழங்கலாம். ஆனால், வாங்கிய கடனை, வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்றால், விற்பனை சிறப்பாக இருக்க வேண்டும். அதற்கு மக்களிடம், கடன் சாராத பணப்புழக்கம் இருக்க வேண்டும். ஆனால், நடுத்தர மக்களில் பெரும்பான்மையாக உள்ள, மாத சம்பளக்காரர்களின் அகவிலைப்படி, சம்பளம், ஈட்டிய விடுப்பு போன்றவற்றில், அரசு கடிவாளம் போட்டு உள்ளதால், வாங்கும் சக்தி, அவர்களிடம் வெகுவாக குறைந்து விட்டது.அவர்கள், இனி தங்களின் வருமானத்தை சேமிக்கவே முயற்சிப்பர். அவர்கள், பொருட்கள் வாங்குவதில், 'வேண்டுமா, வேண்டாமா' என, நிறைய யோசிப்பர். 'பசியால் துடிப்பவனுக்கு, மீனை கொடுக்காமல், துாண்டிலை கொடு' என்பது, பொருளாதார சித்தாந்தம். ஆனால், இன்று நிலவும், அசாதாரணமான சூழலில், முதலில் மீனை இலவசமாக கொடுத்து, அவன் பசியை தீர்க்க வேண்டும்; அதன் பின், துாண்டிலை கொடுக்க வேண்டும். இதை, மத்திய அரசு உணர வேண்டும்.


தமிழகத்தில் ஏன் போராட்டம்?

ஆர்.ரபிந்த், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நம் நாட்டில், மது மட்டுமல்ல, பல போதை பொருட்கள் விற்பனையாகின்றன. அவற்றை கண்டுகொள்ளாமல், மதுவுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என்று தெரியவில்லை. மற்ற மாநிலங்களில், பிரச்னை இல்லாமல், மது விற்பனை நடக்கிறது. மது பிரியர்களும், அமைதியாக வாங்கிச் செல்கின்றனர். ஆனால் தமிழகத்தில் மட்டும், 'மது விற்பனை செய்யாதே, கடையை திறக்காதே' என, போராட்டம் நடத்தி, கலவரத்தை ஏற்படுத்துகின்றனர்.மதுக் கடைகளை மூடிவிட்டால், கொரோனாவை ஒழித்து விட முடியாது. அனைத்து இடங்களில், சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தான், இன்று, கொரோனாவை தவிர்க்கும் ஒரே வழி.உண்மையை சொல்லுங்கள்... மீன் சந்தைகளிலும், மார்க்கெட்டிலும் காணாத மக்கள் நெரிசலா, 'டாஸ்மாக்' கடையில் இருந்தது?மதுவை விற்பதும், குடிப்பதும் தவறு என்றால், தயாரிப்பது மட்டும் புண்ணியமான செயலா?'குத்தினால் கத்துவேன்; கத்தினால் குத்துவேன்' என்பது போல, தி.மு.க.,
ஆதரவாளர்கள் சிலர், 'டாஸ்மாக் கடையை மூடுங்கள்; நாங்கள் மது தயாரிக்க மாட்டோம்' என்கின்றனர். தி.மு.க., எதிர்ப்பாளர்கள், 'நீங்கள் மதுவை தயாரிக்காதீர்; கடையை தானாக மூடி விடுவர்' என்கின்றனர்.மது விற்பனையை, உயர் நீதிமன்றம் தவறென கூறவில்லை. சமூக இடைவெளியை, நுகர்வோர் பின்பற்றவில்லை என்று தான், தடை விதித்தது. உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் மது விற்பனைக்கு அனுமதி வழங்கி உள்ளது.சில அரசியல்வாதிகள், டாஸ்மாக் கடைக்கு எதிராக, அறிக்கை வெளியிடுகின்றனர். அது, மக்களின் நன்மைக்காக அல்ல; தேர்தலில் பெண்கள் ஓட்டு வாங்குவதற்கான, சுயநல அறிக்கைகள்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • venkat Iyer - nagai,இந்தியா

    ஆர்,பரத் என்ன கூறுகிறீர்கள்,மதுவை குடித்தால் போதையாகி அவர்களுக்கு தனி திமிர் வருகிறது, சட்டம் ஒழுங்கு கட்டுப்படுத்தும் காவலர்களிடம் கூட்டமாக சண்டை போடுகிறார்கள். சமுக இடைவெளியில் வருவதை மதிப்பது கிடையாது.மதுக்கடைகளில் போய் நின்று போய் பார்த்து எழுதுங்கள்

Advertisement