Advertisement

வீடுதோறும், சுகாதாரப் பிரிவினர் கண்காணிப்பு! கொரோனா தடுப்பு பணி அதி தீவிரம்

Share
அவிநாசி:அவிநாசி வட்டாரத்தில், வீடு, வீடாக சென்று, குடியிருப்போரின் உடல் நிலையை கண்காணிப்பது, பொது இடங்களில் சமூக இடைவெளி கடை பிடிக்க செய்வது போன்ற பணியில், பொது சுகாதாரப்பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி என பல மாவட்டங்களின் சந்திப்பு பகுதியாக அவிநாசி உள்ளது.அவிநாசியில் உள்ள மக்கள், பல்வேறு காரணங்களுக்காக, வியாபாரம், கல்வி உள்ளிட்ட பல காரணங்களுக்காக வெளியூர் சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
இந்நிலையில், வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, உஷார் நடவடிக்கையாக, பொதுப்பணித் துறையினர், வீடு, வீடாக சென்று குடியிருப்புவாசிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அவிநாசி வட்டாரத்திலுள்ள, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை கண்காணிக்கும் வகையில், 50 வீடுகளுக்கு, ஒரு அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வீடுகளில் வசிப்போரின் பெயர், பாலினம், வயது, குடும்பத் தலைவரின் மொபைல் எண் போன்ற விவரங்களை சேகரிக்கின்றனர். யாருக்கேனும் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்னை இருப்பின், மருத்துவர்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்கின்றனர்.குறிப்பாக, யாரேனும் வெளியூர் சென்று வந்துள்ளனரா என்பதை, விசாரிக்கின்றனர்.
வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல் மேற்பார்வையில், இப்பணி நடந்து வருகிறது.அதே போல், காலை நேரங்களில், மளிகைக்கடை மற்றும் காய்கறி கடைகளில், சமூக இடைவெளி இல்லாமல் பொருட்களை விற்கும் கடைக்காரர்களை எச்சரிக்கின்றனர். 'சமூக இடைவெளி பின்பற்றாத பட்சத்தில், கடைக்கு சீல் வைக்கப்படும்' எனவும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
தகவல் சொல்லுங்க!
பொது சுகாதாரப்பிரிவினர் கூறியதாவது:அவிநாசி வட்டாரத்தை பொறுத்தவரை, இதுவரை கொரோனா வைரஸ் தொற்று யாருக்குமில்லை. இருப்பினும், பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கேனும் சளி, காய்ச்சல், இருமல் போன்ற தொந்தரவு இருப்பின், உடனடியாக, எவ்வித தயக்கமுமின்றி அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.தங்கள் வீடுகளுக்கு அருகே, புதியவர்கள் யாரேனும் தென்பட்டால் அவர்கள் குறித்த தகவலை பொது சுகாதார பிரிவினருக்கு, தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement