Advertisement

பயம் நன்று...! கொரோனா வைரஸ் பரவிடுமோ என்று...பதறாமல் இருந்தால் மீளலாம் வென்று!

Share
கோவை : கொரோனா வைரஸ் நம்மை தொற்றி விடுமோ என்று கவலைப்படாமல், வீட்டினுள்ளே பத்திரமாக இருப்பதன் வாயிலாக, வீண் பதற்றத்தை தவிர்த்து, நோய் தொற்றை தவிர்க்கலாம் என்கிறார், மனநலமருத்துவர் மோனி.வீட்டில், கடைகளில், பேருந்தில் என எங்கும் கொரோனா குறித்துதான் மக்கள் பேசுகின்றனர்.


சாலையில் நடந்து செல்லும் ஒருவர் தும்மினாலோ, இருமினாலோ அவருக்கு நோய்த்தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் வருகிறது. தொண்டையில் லேசான வலி, உடல் அசதியாக இருந்தாலே வைரஸ் பரவி விட்டது என்ற பயம் தொற்றுகிறது. 'நோய் குறித்து பயப்படுங்க; ஆனால் கவலைப்படாதீங்க' என்கிறார், மனநல மருத்துவர் மோனி.அவர் கூறியதாவது:பயம் என்பது, மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடு. நமக்கு ஓர் ஆபத்து ஏற்படப்போகிறது என்றால், பயம் என்பது இயல்பாகவே வரும்.இது, நம்மை எச்சரிக்கையுடன் செயல்பட்டு, பாதுகாப்பாக இருக்க உதவும். ஆனால், அதீத பயமும், தேவையில்லாத பதற்றமும் தான் பிரச்னை.கொரோனோ வைரஸ் தாக்குதல், ஒரு தொற்றுநோய் என்பதால், பயம் ஏற்படுவது இயல்புதான்.


இந்த பயம், நோய் குறித்து நம்மை அதிகமாக சிந்திக்க வைக்கும்.இதனால், நோயின் அறிகுறிகள், பரவும் முறைகள், தடுக்கும் வழிமுறைகள் குறித்து அறிந்துகொண்டு, விழிப்புணர்வுடன் இருப்போம்.நோய் குறித்து பயமில்லாத வரையில், அதன் தீவிரத்தன்மையை நாம் உணர மாட்டோம். ஆகவே, இந்த நேரத்தில் பயம் ஏற்படுவது நல்லதே.வீண் பதற்றம் வேண்டாமே!அதே சமயம், சிலர் நோய் தொற்று இல்லாமலே தங்களுக்கும், காய்ச்சல், தொண்டைவலி, மூச்சுத்திணறல் இருப்பதாக சிலர் உணர்கின்றனர்.நோயை பற்றி எந்நேரமும் சிந்தித்து, அதிக கவலைக்குள்ளாவதால், ஏற்படும் மனப்பதட்டமே இப்படி தவறாக எண்ண காரணம்.என்ன செய்ய வேண்டும்?n நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை, அவர்களின் பதிவுகள் நேர்மறை எண்ணத்தை அளிக்கும். பயத்தை விட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றுவது நம்பிக்கையை அதிகரிக்கும்.n எதிர்காலத்தை எண்ணி பயப்படுவதை விடுத்து, நிகழ்கால வேலைகளை முழு ஈடுபாட்டுடன் மேற்கொள்ள வேண்டும்.


'நான் நலமுடன் இருக்கிறேன்' என உங்களுக்கு, நீங்களே அடிக்கடி செல்லிக்கொள்ளுங்கள். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது பதட்டத்தை தணிக்கும்.n கொள்ளை நோய் பரவும் சமயத்தில், கவலை, மனஅழுத்தம், பயம், கோபம், குழப்பம் ஏற்படுவது இயல்பு. இந்த நேரங்களில், குடும்பத்தினர், நண்பர்கள் போன்ற நம்பிக்கை மிக்க உறவுகளுடன் பேசுவது, மனதை ஆறுதல்படுத்தும்.n வீட்டில் இருந்து, சமூக விலகலை கடைப்பிடிப்பது மட்டுமின்றி ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவு பழக்கம், சரியான துாக்கம், உடற்பயிற்சி, குடும்பத்தினருடன் நேரம் செலவிடல் போன்றவை, உளவியல்ரீதியாக நம்மை வலிமையாக்கும்.இவ்வாறு, டாக்டர் மோனி தெரிவித்தார்.

கொரோனா குறித்து சமூக ஊடகங்களில், வரும் வதந்தி தகவல்களை நம்புவதால், வீண் பதற்றம் ஏற்படுகிறது. அவற்றை நம்பி ஏமாற வேண்டாம். உலக சுகாதார நிறுவனம், இந்திய மருத்துவ கவுன்சில், அரசு, சுகாதாரத்துறை வெளியிடும் நம்பகத்தன்மையுள்ள செய்திகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.டாக்டர் மோனி மனநல மருத்துவர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement