Advertisement

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே லட்சியம்! மாற்றுத்திறனாளி வீரர் மனோகரன் நம்பிக்கை

''உலக, பாரா ஒலிம்பிக் ஜூடோ போட்டியில், தங்க பதக்கம் வென்று, இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும்,'' என்கிறார், ஜூடோ போட்டிகளில், 10க்கும் மேற்பட்ட தேசிய விருதுகள் பெற்று, பிரிட்டனில் நடக்கும், பாராலிம்பிக் தகுதி போட்டிக்கு தேர்வாகி உள்ள மனோகரன், 31. சென்னை, செங்குன்றம் அடுத்த சோழவரம், சோழிப்பாளையம் கிராமத்தில் வசிக்கும், அவரை சந்தித்து பேசிய போது...


உங்களை பற்றி?


ஏழ்மையான குடும்ப பின்னணி. எனக்கு பார்வை குறைபாடு இருப்பதே, 5 வயதுக்கு பின் தான் தெரிந்தது. அரசு பள்ளியில், 10ம் வகுப்பு வரை மட்டுமே படித்தேன். பார்வை பிரச்னையால், தொடர்ந்து படிக்க முடியவில்லை.


ஜூடோ ஆர்வம் வந்தது எப்படி?


நான், 2004ல், பள்ளி படிப்பு முடிந்ததும், எங்கள் ஊரில் உள்ள தொழிற்சாலையில், மூட்டை துாக்கும் வேலை செய்தேன். அங்கு என் நிலையை அறிந்து, அதற்கேற்ப வேலை கொடுத்தனர்.அப்போது தான், மற்றவர்களுக்கு மத்தியில், என்னை அடையாளப்படுத்திக் கொள்ள, ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்பி, சிவகுமார் என்பவரிடம் கராத்தே கற்றுக்கொள்ள துவங்கினேன். அதில், 2 அடி இடைவெளியில், நிழலாக தெரிந்த வீரர்களுடன் பயிற்சி பெற்றேன்.


அப்போது, 2008ல், அங்கு பயிற்சிக்கு வந்த, சித்த மருத்துவரின் ஆலோசனையால், ஜூடோ கலையில் பயிற்சி பெற்றேன். அவர் மூலம், 2009 - 10ல், சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில், தமிழக ஜூடோ பயிற்சியாளர் உமாசங்கரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அவரிடம் பயிற்சி பெற்றேன். அப்போது தான், தமிழகத்தில், பாரா ஜூடோ கலை அறிமுகமானது.


முதல் போட்டி எது?


உத்தர பிரதேசத்தில், 2012ல், பார்வையற்றோர் தேசிய ஜூடோ போட்டி நடந்தது. அது தான் என் முதல் போட்டி. தமிழகத்தில் இருந்து, நான் மட்டும் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது; அதில், வெள்ளிப்பதக்கம் வென்றேன்.


அடுத்தடுத்த வாய்ப்பு கிடைத்ததா?


முதல் போட்டியை தொடர்ந்து, 2014ல், டில்லியில் நடந்த, தேசிய ஜூடோ போட்டியில், தங்கப்பதக்கம் பெற்றேன். அந்த வெற்றியால், அதே ஆண்டு, தென்கொரியாவில் நடந்த ஆசிய பாரா விளையாட்டு போட்டியில், பங்கேற்று, வெண்கலப்பதக்கம் வென்றேன்.மேலும், 2016ல், தென் ஆப்பிரிக்காவிலும், 2019ல், லண்டனிலும் நடந்த காமன் வெல்த் போட்டிகளிலும், தங்க பதக்கங்கள் வென்று, நாட்டுக்கு பெருமை சேர்த்தது, மறக்க முடியாத மகிழ்ச்சியாக இருந்தது.


இப்போது குறிப்பிடக்கூடிய வாய்ப்பு ஏதும் கிடைத்துள்ளதா?


பிரிட்டனில், பாரா ஒலிம்பிக் தகுதி தேர்வுக்கான போட்டிகள் நடக்கின்றன. அதில், இந்தியாவிலிருந்து, தமிழகம் சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து நானும், மீஞ்சூரில் இருந்து மகேஸ்வரி என்பவரும் பங்கேற்கிறோம். அதில் பங்கேற்ற, ஒருவருக்கு, 1.80 லட்சம் ரூபாய் செலவாகிறது. தமிழக அரசிடம், உதவிகோரி விண்ணப்பித்துள்ளோம்.


உங்களுக்கு கிடைத்த உதவிகள் குறித்து?


பார்வை குறைபாடுள்ள என்னை, அடையாளப்படுத்திக்கொள்ள முயன்ற போது, எனக்கு பயிற்சி கொடுத்தவர்கள், அதை இலவசமாக கொடுத்து உதவினர்.தென் ஆப்பிரிக்காவில் நடந்த காமன் வெல்த் போட்டியில் பங்கேற்க, கட்டணமாக, 1.23 லட்சம் ரூபாய் தேவைப்பட்டது. அப்போது, 'தினமலர்' நாளிதழில் வெளியான செய்தியால், எனக்கு அந்த உதவி கிடைத்து, தங்க பதக்கமும் வென்றேன்.


உங்களிடம் பயிற்சி பெற்றவர்கள் சாதிக்கின்றனரா?


முதலில், அவர்கள் எனக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். சோழவரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் அஸ்வின், பள்ளிகளுக்கு இடையே நடந்த, மாநில அளவிலான போட்டிகளில், மூன்று தங்க பதக்கமும், பெடரேஷன் தரப்பில் நடந்த போட்டிகளில், இரண்டு தங்கமும் வென்றார்.


அதே போன்று, மொண்டியம்மன் நகரில் உள்ள, தனியார் பள்ளியில் படிக்கும், 10ம் வகுப்பு மாணவி பூஜா, பள்ளிகளுக்கு இடையே நடந்த மாநில அளவிலான போட்டிகளில், மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.


உங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லையா?


முதல்வர் இ.பி.எஸ்., விளையாட்டு துறையில், 3 சதவீதம் வேலை வாய்ப்பு, உதவி தொகை ஆகியவற்றை வழங்க உத்தரவிட்டுள்ளார். அதற்காக விண்ணப்பித்துள்ளேன். என் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு, வேலை கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன். வழக்கமான ஜூடோவுக்கு கிடைக்கும் வரவேற்பு, பாரா ஜூடோவுக்கு கிடைப்பதில்லை. அதனால், பாரா ஜூடோ கலையை அரசு ஊக்குவிக்க வேண்டும்.


உங்களின் லட்சியம்?


உலக பாரா ஒலிம்பிக் ஜூடோ போட்டியில், தங்க பதக்கம் வென்று, இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். இவரை பாராட்டவும், உதவவும் விரும்பினால், 63827 95496, 99621 41148 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


- நமது நிருபர் -
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement