Advertisement

தடுப்பு நடவடிக்கையில் களமிறங்கிய போலீசார்

Share
சென்னை : நாடு முழுவதும் போடப்பட்டுள்ள, 144 ஊரடங்கு உத்தரவுக்கு செவிசாய்க்காமல் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகளால், பரபரப்பு ஏற்பட்டது.


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும், 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. உலக அளவில், 160க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவும் கொரோனாவை கருத்தில் வைத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இதற்கு செவிசாய்க்காமல், அலட்சியமாக செயல்பட்டவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.மீன் அங்காடி மூடல்தடையை மீறி, சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடியில், நேற்று சிலர் விற்பனையில் ஈடுபட்டனர். இதனால், மக்கள் கூட்டம் அலைமோதியது. சம்பவம் அறிந்து வந்த சிந்தாதிரிப்பேட்டை ஆய்வாளர் முருகேசன், மீன் அங்காடியில் குவிந்த கூட்டத்தை அப்புறப்படுத்தி, மீன் அங்காடியை மூட நடவடிக்கை எடுத்தார்.


வெளியே வராதீங்க!


மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், திருவொற்றியூர் பகுதிகளில் நேற்று காலை, பணியில் இருந்த போக்குவரத்து போலீசார், ஊரடங்கு உத்தரவை மதிக்காமல், டூ - வீலரில் சுற்றித் திரிந்தவர்களை நிறுத்தி, வெளியே வந்ததன் காரணம் குறித்து கேட்டனர். அதற்கு, 'மருத்து கடை, காய்கறி, மீன்மார்க்கெட், ஏ.டி.எம்.,' போகிறோம் என, பல காரணங்களை சொல்லி, மக்கள் பொறுப்பில்லாமல் வெளியே வந்தனர். இவர்களிடம், 'நோயின் வீரியத்தை புரிந்து கொள்ளுங்கள். அத்தியாவசிய தேவைகளுக்கு அல்லாமல், தேவையின்றி வெளியே சுற்றித்திரிவதை தவிர்க்க வேண்டும்' எனக் கோரினர்.


மீன் விலை உயர்வு


காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில், தினமும் 2,000 விசைபடகுகள், 7,000 பைபர் படகுகளில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க செல்கின்றனர். தினமும், 15 முதல் 18 டன் மீன் விற்பனைக்கு வருகிறது. தினமும், 20 கோடி ரூபாய் மீன் விற்பனை நடக்கிறது. 144 தடை உத்தரவையடுத்து, கடலில் மீன் பிடிக்க படகுகள் செல்ல கூடாது என அரசு அறிவித்துள்ளது. இதனால், ஏற்கனவே கொண்டுவரப்பட்ட மீன்கள் மட்டுமே, மீனவர்கள் தற்போது விற்பனை செய்து வருகின்றனர். இதனால் மீன் விலை இரு மடங்கு உயர்ந்து உள்ளது. இருந்தாலும், காசிமேட்டில், தென்சென்னையில் இருந்து மீன் வாங்க வாடிக்கையாளர்கள் குவிந்தனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மீன்வாங்க இங்கு வரக்கூடாது என, அவர்களை நேற்று போலீசார் எச்சரித்து அனுப்பினர்.


மக்கள் வெள்ளம்


கொத்தவால்சாவடி, புதுவண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை காய்கறி மார்க்கெட்டுகளிலும், நேற்று காலை மக்கள் கூட்டம் அலைமோதியது. வீட்டிற்கு வேண்டியஅனைத்து மளிகை சாமான்கள், காய்கறிகள், பழங்களை பொதுமக்கள் வாங்கி சென்றனர். கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், அவர்களின் வாகனங்களை நிறுத்தி, நடந்து சென்று வாங்கி செல்லுமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தினர்.


கும்பிட்ட எஸ்.ஐ.,


சென்னை அண்ணாசாலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரஷித், சாலையில் சுற்றி வந்த வாகன ஓட்டிகளை, கையெடுத்து கும்பிட்டு, தயவு செய்து வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனக் கூறியது, பார்ப்போரை கண்கலங்க செய்தது. அவரது இச்செயல், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


இது குறித்து அவரிடம்கேட்ட போது ''கொரோனா வைரஸ் பற்றிய புரிதல் இன்னமும் நம் மக்களிடத்தில்போதிய விழிப்புணர்வு இல்லை. இத்தாலி நாட்டில் தினம் தினம், நுாற்றுக்கணக்கானோர் இறந்துள்ளனர். ''அலட்சியமாக உள்ள வாகன ஓட்டிகளை மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக தான் அவர்களை கையெடுத்து கும்பிட்டு, கதறி அழுது வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என, வலியுறுத்தி வருகிறேன்,'' என்றார்.


போலீஸ் போட்ட கோடு


அயனாவரம் மார்க்கெட்டில் இடைவெளி விட்டு பொதுமக்கள் காய்கறி, பழங்கள் வாங்குவதற்காக, கோடுகள் போடும் காவல் துறையினர். அனுமதி மறுப்புகாசிமேட்டில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தும்வகையில், ராயபுரம் உதவி ஆணையர் தினகரன், திருவொற்றியூர் உதவி ஆணையர் ஆனந்தகுமார் தலைமையில், நேற்று காசிமேடில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில், இன்று முதல், காசிமேடில் சில்லரை மீன் விற்பனைக்கு அனுமதி மறுத்ததோடு, பொதுமக்களை அனுமதிக்காமல்வெளியேற்றுவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. மாலை, 6:00 மணிக்குள், மீன் விற்பனை முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Amirthalingam Sinniah - toronto,கனடா

    சட்டம் இக்காவல் துறையினரின் வயிறு சுருங்க உ த வி செய்கிறது.

Advertisement