Advertisement

செய்தித் துளிகள்

கலிதா ஜியா விடுதலை
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமரும் எதிர்கட்சி தலைவருமான கலிதா ஜியா நேற்று சில நிபந்தனைகளுடன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். கொரோனா பிரச்னையால் அவருக்கு ஆறு மாதங்கள் தற்காலிக விடுதலை வழங்கப்படுவதாக வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற கலிதா ஜியா 2018 பிப்.8 முதல் சிறையில் உள்ளார்.

துப்பாக்கி வாங்க அலைமோதும் கூட்டம்

லாஸ் ஏஞ்செல்ஸ்: அமெரிக்காவில் கடந்த இரு வாரங்களில் துப்பாக்கி விற்பனை உச்சத்தை எட்டியுள்ளது. ஒக்லஹோமா மாகாணத்தில் ஒரு கடையில் மட்டும் துப்பாக்கி விற்பனை 800 சதவீதம் அதிகரித்துள்ளது. இதர நாடுகளில் கொரோனா காரணமாக உணவுப் பொருட்கள் வாங்க மக்கள் முண்டியடிக்கின்றனர். அதற்கு நேர்மாறாக அமெரிக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து துப்பாக்கிகளை வாங்கிச் செல்கின்றனர். கொரோனாவால் சமூக கலவரம் ஏற்படும் என அஞ்சி பாதுகாப்புக்காக துப்பாக்கிகளை வாங்குவதாக விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

சூடான் ராணுவ அமைச்சர் மரணம்

கெய்ரோ: கிழக்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த சூடானில் ராணுவ அமைச்சராக பதவி வகித்த ஜெனரல் கமாலுதின் உமர் நேற்று மரணம் அடைந்தார். அவர்நேற்று முன்தினம் தெற்கு சூடானுக்குச் சென்று கிளர்ச்சியாளர்களின் பிரதிநிதிகளுடன் அமைதிப் பேச்சு நடத்தினார். இந்நிலையில் நேற்று காலை அவர் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக சூடான் அரசு அறிவித்துள்ளது.

நண்பரை கொன்ற இந்தியருக்கு சிறை

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நண்பர்களான சரவணன், அரிமுரம் சிவகுமார், பெருமாள் ஆகியோர் காரில் சென்று கொண்டிருந்தனர். உடன் சிவகுமார், பெருமாளின் உறவினர் நவீன் பார்திபன் இருந்தார். அப்போது அலைபேசியில் சரவணனை அவர் தோழி அழைத்துள்ளார். இதையடுத்து காரை திருப்பச் சொல்லியுள்ளார் சரவணன். அதற்கு சிவகுமார் மறுக்கவே இருவருக்கும் வாய் தகராறு முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் சரவணன் காரின் 'டேஷ்போர்டில்' இருந்த மான்கொம்புகளை எடுத்து சிவகுமார் பெருமாளை தாக்கியுள்ளார். இதில் அவர் இறந்ததை அடுத்து சரவணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் உள்நோக்கமின்றி உயிரிழப்பை ஏற்படுத்தியதாக கூறி சரவணனுக்கு நீதிபதி 18 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

92 ராணுவ வீரர்கள் பலி

நட்ஜமன்னா: மத்திய ஆப்ரிக்காவின் வடக்கே உள்ள நாடு சாத். இங்கு போமா தீபகற்ப பகுதியில் உள்ள ராணுவ முகாம்கள் மீது போகோ ஹரம் பயங்கரவாதிகள் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர். ஏழு மணி நேரம் நீடித்த சண்டையில் ராணுவ வீரர்கள் உயரதிகாரிகள் உள்ளிட்ட 92 பேர் உயிரிழந்தனர். 24 ராணுவ வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ஏராளமான ஆயுதங்களை போகோ ஹரம் பயங்கரவாதிகள் அள்ளிச் சென்றனர். ''முதன் முறையாக அதிக அளவில் ராணுவ வீரர்களை இழந்துள்ளோம்'' என சாத் அதிபர் டெபி இட்னோ தெரிவித்துள்ளார்.

பாரீசில் திண்டாடும் விலைமாதர்கள்

பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வருவாய் இழந்த விலைமாதர்கள் உத்தரவை மீறி சாலைகளில் வாடிக்கையாளர்களை அழைக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். பிரான்சில் பாலுறவுக்கு அழைக்கும் ஆண்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவும் வாடிக்கையாளர்கள் வருவதில்லை என புலம்பும் விலை மாதர்கள் செலவுகளை சமாளிக்க வலைதளம் மூலம் நிதி திரட்ட துவங்கியுள்ளனர்.

இஸ்ரேல் பார்லிமென்ட் சபாநாயகர் ராஜினாமா

ஜெருசலம்: கடந்த வாரம் இஸ்ரேலில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அந்நாட்டு பார்லிமென்ட் கூட்டத் தொடரை சபாநாயகர் யுலி எடல்ஸ்டெய்ன் தள்ளி வைத்தார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. புதிய சபாநாயகர் தேர்வை தடுக்கவே பார்லி. கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டதாக குற்றம் சாட்டின. இது தொடர்பான வழக்கில் பார்லி.யை மீண்டும் கூட்டுமாறு இஸ்ரேல் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை ஏற்க மறுத்து சபாநாயகர் யுலி எடல்ஸ்டெய்ன் நேற்று ராஜினாமா செய்தார். ''மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிடுவதை ஏற்க முடியாது'' என அவர் தெரிவித்துள்ளார். இவர் ஏழு ஆண்டுகள் சபாநாயகராக பதவி வகித்துள்ளார்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement