Advertisement

கொரோனாவுக்கு நிவாரணமாக, நியாய் திட்டம் : தன் தேர்தல் வாக்குறுதியை தூசு தட்டும் காங்.,

கடந்த பொதுத் தேர்தலின் போது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த, 'நியாய்' எனப்படும், குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டத்தை, இப்போது அமல்படுத்த, பிரதமர், நரேந்திர மோடி முன்வர வேண்டுமென, கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த, 2019ல் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை, வெளியிடப்பட்டது. அதில், குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்று, நியாய் திட்டம். இதன்படி, நாடு முழுதும் உள்ள, 20 கோடி ஏழை குடும்பங்கள் கண்டறியப்பட்டு, அக்குடும்பம் ஒவ்வொன்றுக்கும், ஒரு ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

பல வெளிநாடுகளில் வழங்கப்படுவதைப் போல, அரசு தானே முன்வந்து, மக்களுக்கு ஊதியம் வழங்கக் கூடிய வகையில் அமைந்த இத்திட்டத்தை, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், இந்தியாவிலும் அமல்படுத்துவோம்' என, காங்கிரஸ் அறிவித்தது.

பரபரப்புஅப்போதைய காங்கிரஸ் தலைவர், ராகுலால் முன்னிறுத்தப்பட்ட இது, நட்சத்திர வாக்குறுதியாக வர்ணிக்கப்பட்டு, பல்வேறு தரப்பினராலும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த வாக்குறுதியால், பா.ஜ.,வே சற்று கலக்கம் அடைந்து, 'இத்திட்டம் சாத்தியமே இல்லை' என, வாதிட்டது.என்றாலும், பா.ஜ.,வும் இதே பாணியில், 'அனைத்து விவசாயிகளுக்கும், ஆண்டுதோறும், 6,000 ரூபாய் வழங்கப்படும்' என, அறிவித்து, தேர்தல் முடிந்தவுடன் முதல் வேலையாக அதை அமல்படுத்தவும் செய்தது.தாங்கள் ஆட்சிக்கு வர முடியாமல் போனதால், நியாய் திட்டத்தை அடியோடு மறந்திருந்த நிலையில், தற்போதைய கொரோனா பரவலால், அத்திட்டம் குறித்து, காங்கிரஸ் மீண்டும் பேச துவங்கியுள்ளது.

இது குறித்து, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், ரன்தீப் சுர்ஜேவாலா, தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:டியர் பிரதமர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. தனி படுக்கைகள், வென்டிலேட்டர்கள், எத்தனை தயார் நிலையில் உள்ளன. டாக்டர்கள், நர்ஸ்கள் ஆகியோரின் உடல்நலத்திற்கு, என்ன உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.7,500தினக்கூலிகள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் என, பல தரப்பினரும், இந்த, 21 நாட்களில், தங்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்யப் போகின்றனர். உங்களது உரையில், இதுபற்றி எதுவும் இல்லை.தங்களுக்கு ஒரு வேண்டு கோள். ராகுல் மற்றும் காங்கிரசால் முன்வைக்கப்பட்ட, குறைந்தபட்ச வருமான உத்தரவாதம் வழங்கும், நியாய் திட்டத்தை நாடு முழுதும் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்திருக்கிறது.

ஜன் தன் அக்கவுண்ட்தாரர்கள், பிரதமர் விவசாயிகள் நலத்திட்ட அக்கவுண்ட்தாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் ஆகியோரது வங்கிக் கணக்குகளில், தயவு செய்து, 7,500 ரூபாயை உடனடியாக செலுத்துங்கள். பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை, இவர்களுக்கு இலவசமாக வழங்குங்கள்.இவ்வாறு, அதில் கூறியுள்ளார். இதே போல, பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங்கும், 'ஏழைகள் மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்' என, தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- நமது டில்லி நிருபர் -

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா

  BJB 2013ல் 12ரூபாய் வங்கி கணக்குத்திட்டம் சேர்ந்தா கேட்காமலேயே அவங்கலே எடுத்துக்கிட்டு மொத்தமா ஏதோ சேர்ந்ததும் தருவாங்க, 2019ல் 6000ரூபாய் திட்டம்னு சொல்லி வடஇந்தியாவில் எவ்வளவு செஞ்சிருப்பாங்கன்னு தெரியாது, வைரஸ் கிருமிகள், நோய் பரவுதல் ஊரடங்கு உத்தரவு மார்ச்26, 2020.. மத்தியஅரசு என்ன செய்யப்போகிறதுன்னு தெரியாது.. 2003ல் சுனாமி வந்தபோது காங்கிரஸ் என்ன செஞ்சாங்கன்னு தெரியாது.. R.Kumaresan. தேர்தல் சமயத்தில் சொல்ற வாக்குறுதிகளை அப்பப்ப மறந்து போயிடுவாங்க.. R.Kumaresan.

 • ஆப்பு -

  நீங்க சொன்ன உடனே குடுத்தா அப்புறம் யாரு எங்களுக்கு ஓட்டுப் போடுவான்.

 • M.P.MADASAMY - Trivandrum,இந்தியா

  திட்டம் மக்களுக்கு பயன் தரக்கூடியதாக இருந்தால் அது எந்த கட்சி கொண்டு வந்ததாக இருந்தாலும் அல்லது எந்த ஆட்சி நடந்தாலும் கட்சி வேறுபாடு பார்க்காமல் நடைமுறைப்படுத்தினால் வாக்களித்தவர்களின் வாழ்க்கை சிறக்க உதவும்.

 • CSCSCS - CHENNAI,இந்தியா

  உங்க கட்சி நிதியை "நியாய" அல்லது "அநியாய" திட்டங்களுக்கு எடுத்து விடவேண்டியதுதானே

 • sekar ng -

  க்ரோனவை வியாபாரம் செய்து முதல் அரசியல் வியாபாரி.

Advertisement