Advertisement

கற்றுக் கொண்டே இருப்போம்!

வாசித்தல் என்பது மனிதன் ஆயுள் முழுக்க, தொடர்ந்து செய்யும் பயிற்சி. வாசித்தல் வழியாகத்தான் கற்றல் நடக்கிறது. பிற வழிகளில் மனிதன் கற்றுக் கொள்வது விதிவிலக்குகள் என கொள்ளலாம்.வாசித்தலை நேசித்தலே வாழ்க்கை! 'சுவாசித்தல்' எவ்வளவு அவசியமோ அவ்வாறே வாசித்தலும்! கற்றுக்கொள்ளுதல் என்கிற அச்சில்தான் வாழ்க்கை வண்டி ஓடுகிறது. பள்ளி, கல்லுாரிகளுடன் கற்றல் முடிவதில்லை. நாளெல்லாம் கற்றுக்கொண்டிருந்தால் வாழ்வில் பற்றுக் கொண்டிருக்கிறோம் என பொருள்.'ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்' என எளிமையாகச் சொன்னார் அவ்வை. 'நீ இப்பிறவியில் கற்க கல்வி, அதாவது கற்றல் ஏழு பிறவிகட்கும் உன்னோடு கூட வரும்,' என்கிறார் திருவள்ளுவர். மேலும் 'தொட்டனைத்துாறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் துாறும் அறிவு' என்கிறார். கற்கக் கற்க அறிவு ஊறிக் கொண்டே இருக்கும்.பள்ளி, கல்லுாரியைவிட்டு வெளியில் வந்து கற்றுக் கொள்வதில்தான் விஷயம் இருக்கிறது. பள்ளிப் படிப்பை தொடர முடியாமல், பாதியில் விட்டு வந்து, வெளியில் கற்று, வேலை பார்த்துக் கொண்டே கற்றவர்கள்தான் அறிஞர்கள், விஞ்ஞானிகள், சமுதாய சீர்திருத்தவாதிகள், கவிஞர்களாகியிருக்கின்றனர்.

முதல்படி

நாளிதழ்கள் படிப்பது ஒரு கலை. அதிலிருந்து கற்றல் பயிற்சியை துவங்கலாம். அதை ஆழமாக படித்து பழகிவிட்டால், உங்கள் பொது அறிவு பூரிக்கத் தக்க வகையில் புதுமலராய் மணம் வீசும். வேலைவாய்ப்பிற்கான பொது அறிவுத் தேர்வில் உங்களுக்கே முதல் மதிப்பெண். மேம்போக்காக செய்திகள் படித்தவர் உங்களருகில் நிற்க முடியாது.நாளிதழ்கள் ஒரு அறிவுச் சுரங்கம்! கற்றறிய அங்கு அதிகம் உள்ளன. அதில் நாட்டு நடப்பு, வேலைவாய்ப்பு, புது சட்டங்கள், அரசாணைகள், நீதிமன்ற உத்தரவுகள், அரசியல், ஒப்பந்தங்கள், வெளிநாட்டுச் செய்திகள், அறிவியல், ஆன்மிகம், சினிமா, விளம்பரம் என பல்வேறு அம்சங்கள் உள்ளன. கற்றலின் முதல்படியாக நாளிதழ்களை தினமும் படிக்கும் பழக்கத்தை கைக்கொள்ளுங்கள்.

கற்றுக் கொண்டே இருத்தல்

கற்றுக்கொண்டே இருக்கிற வழக்கறிஞர்கள்தான் கட்சிக்காரர்களுக்கு நல்லமுறையில் சேவை செய்து, நீதித்துறையில் முன்னேற முடியும். கற்றுக்கொண்டே இருக்கிற ஆசிரியர்கள்தான் மாணவர்களின் கல்வியறிவை மேம்படச் செய்து, பணியில் சிறக்க முடியும். கற்றுக்கொண்டே இருக்கிற பொறியாளர்கள் அவர்களின் துறையில் புதுமையை புகுத்தி புரட்சி காண முடியும். கற்றுக்கொண்டே இருக்கிற விஞ்ஞானிகளால்தான் நவீன உலகின் பாதகங்களைக் குறைத்து, மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தித் தர முடியும்.ஒவ்வொரு துறையில் உள்ளவர்களின் 'கற்றல்'தான் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்கிறது. கற்றல் இல்லாமல் ஏனோதானோ என்று இருப்பவர்கள் புகுந்த துறையில் தமது திறமை விளங்கச் செய்ய முடியாது. அவர்களால் நாட்டிற்கு பயன் இல்லை.

கற்றலின் பெருமை

2100 ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட சங்க இலக்கியங்கள் கற்றலின் பெருமையை, அதன் சிறப்பை விரிவாகப் பேசுகின்றன. உதாரணமாக ஆரியப்படை கடந்த மன்னன் பாண்டியன் நெடுஞ்செழியன் கற்றலின் பெருமையை பாடல் வழியாகச் சொல்கிறான். புறநானுாற்றில் உள்ள அப்பாடலை பாருங்கள்:''உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே!பிறப்போர் அன்ன உடன் வயிற்றுள்ளும்சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்.ஒருகுடிப் பிறந்த பல்போருள்ளும்மூத்தோன் வருக என்னாது அவருள்அறிவுடையோன் ஆறு அரசு செல்லும்.கீழ்ப்பால் ஒருவன் கற்றபின்மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே!''இப்பாடலின் பொருள்...கற்றுக்கொடுக்கும் ஆசிரியரை வணங்கி அவரது கஷ்ட, நஷ்டங்களில் பங்கேற்க வேண்டும். அவருடன் அணுக்கம், இணக்கமாக இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்றாலும், கற்றுச் சிறப்புப் பெற்ற ஒருவனிடம்தான் தாயின் மனம் செல்லும். மூத்தவர் என்றில்லாமல் கற்றவரையே அழைத்து, அரசர் யோசனை கேட்பார். ஒடுக்கப்பட்ட ஒருவர் கற்றறிந்த மேதை எனில், அவரை உயர்குடியில் பிறந்தவர் வணங்க நேரிடும்.ஆக, அம்மாவும் சரி, அரசரும் சரி, கற்றறிந்தோரை ஏற்றிப் போற்றுவர் என்று 20 நுாற்றாண்டுகளுக்கு முன்பே, எண்ணிப் பாடியிருப்பது இன்றும் பொருந்துகிறது.

எங்கும் சிறப்பு

''மன்னனும் மாசறக் கற்றோனும்சீர் துாக்கின்,மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்;மன்னர்க்குத்தன்தேசமல்லால் சிறப்பில்லை,''கற்றோர்க்குச்சென்ற இடமெல்லாம் சிறப்பு''!அவ்வையின் பாடல் கற்றவரின் சிறப்பை, இமயத்தின் உயரத்திற்கு ஏற்றி வைத்திருக்கிறது என்பதை யாரால் மறுக்க முடியும்?

கற்று முன்னேறுக

உழைத்து வாழ வேண்டும் என்கிற முத்திரையை நெஞ்சில் பதித்துக் கொண்டு முன்னேறுகிறவர்களுக்கு அவசியம் தேவை 'கற்றல்'.உங்கள் தொழில் சம்பந்தமான புத்தகங்கள், செய்திகளை ஒவ்வொரு நாளும் தவறாமல் கற்றுக் கொள்ளுங்கள். படிக்க நேரம் இல்லை; வேலை செய்யவே நேரம் சரியாக இருக்கிறது என்று சொல்லக்கூடாது.சோம்பலில் மாட்டாதீர்கள். நாளைய வெற்றி உங்களுக்கே என்று நம்பி படியுங்கள். நல்லதே நடக்கும்.ஒருவர் பொறியியல் படித்து, வேலைக்கு முயற்சித்தார். கணினி நிறுவனத்தில் பணியாற்றினார். 'வேலை கிடைத்துவிட்டது. இனி என்ன; மகிழ்ச்சியாக இருக்கலாம்' என நினைக்கவில்லை. கற்கும் ஆர்வம் குறையவில்லை. தொழில் அறிவை மேம்படுத்தினார். ஒரு கட்டத்தில் அவருக்கு இணையாக கணினி அறிவு பெற்றவர் இல்லை என்ற நிலை வந்தது. இன்று 'கூகுள்' நிறுவன சி.இ.ஓ.,வாக இருக்கிறார். உலகில் அதிக சம்பளம் பெறும் சி.இ.ஓ.,க்களில் அவர் முதல்வர். அவர்தான் சுந்தர் பிச்சை. கற்றல் ஒரு மனிதனை எந்தளவிற்கு உச்சத்தில் வைக்கும் என்பது சுந்தர் பிச்சை உதாரணம்.
உயிர்வளர்

உடற்பயிற்சியால் உடல், உள்ளம் பண்படும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையலாம். உடல் நலமாக இருந்தால்தான் சாதனைகள் செய்யலாம். உடலை பாதுகாக்கத் தவறிய அறிஞர், கவிஞர் பலர் குறைந்த வயதில் மறைந்திருக்கின்றனர். உடலை பாதுகாக்கக் கற்றுக் கொள்ளுதல், கற்றலின் ஒரு பகுதி. எனவே, 'உடம்பை வளர்த்தேன்; உயிர் வளர்த்தேனே' என்றார் திருமூலர்.ஆர்வமாகப் படிக்கப் படிக்க அரிய வித்தையும் லேசு; ஆழமாகப் பயில ஆழ்கடலும் துாசு. இதை மனதில் இருத்தி கற்றல் பயிற்சி, காரிய முயற்சி செய்வதால் எண்ணியதை எய்தலாம்.-சி.பொன்ராஜ், வழக்கறிஞர்உயர்நீதிமன்ற மதுரைக் கிளை88258 31833.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement