Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'ஓய்வுபெற்றவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கக் கூடாது என்கிறீர்கள். ஆனால், அரசியலில் மட்டும், ஓய்வுபெறும் வயதே கிடையாதா...' என, எதிர் கேள்வி கேட்கத் துாண்டும் வகையில், பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில், தகுதியானவர்களை நிரப்பாமல், ஓய்வுபெற்ற ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால், திறமையான இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

'எத்தனை முறை தான், இதையே கூறுவீர்கள்; வேறு ஏதாவது கூற முடியுமா என பாருங்கள்...' என, அறிவுரை கூற வைக்கும் வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன் பேட்டி: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு அளித்ததன் மூலம், தமிழக மக்களுக்கு, அ.தி.மு.க., வரலாற்று துரோகம் இழைத்து விட்டது; இந்த விவகாரத்தில் கபட நாடகம் ஆடுகிறது.

'எந்த மக்கள் என சொல்லி விட்டால், நன்றாக இருக்கும். உங்கள் சொந்த மக்கள் என, மக்கள் நினைத்து விடப் போகின்றனர்...' என, கேலியாக கூறும் வகையில், தி.மு.க.,வில் சமீபத்தில் இணைந்துள்ள ராஜ கண்ணப்பன் பேட்டி: நான் அடிக்கடி கட்சி மாறுகிறேன் என, என் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. அது சரியல்ல; நான் அடிக்கடி கட்சி மாறவில்லை. மக்கள் நலனுக்காகவே இந்த முடிவை நான் எடுக்கிறேன். விமர்சனம் செய்பவர்கள் பற்றி எனக்கு கவலையில்லை.

'ஆம் ஆத்மியும், தமிழகத்தில் வலுப்பெற்று வருகிறதா; அப்போ, நலிவடைந்து வரும் கட்சி எது என்ற கேள்வி எழுகிறதே...' என, கிண்டலடிக்கத் தோன்றும் வகையில், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின், தமிழக பிரிவின் தலைவர் வசீகரன் பேட்டி: ஆம் ஆத்மி ஆரம்பிக்கப்பட்ட போது, எங்களுடன் இருந்த பலர் இப்போது இல்லை. காரணம், உடனடியாக அவர்கள் பெரிய மாற்றத்தை எதிர்பார்த்தனர். நடக்காததால், வெளியேறிவிட்டனர். எனினும், தமிழகத்தில் எங்கள் கட்சி வலுப்பெற்றுள்ளது.

'மெதுவா பேசுங்க; தி.மு.க.,வுக்கு கேட்டு விடப் போகிறது... முஸ்லிம்களுக்கு எதிரான அரசு என, அக்கட்சி பிரசாரம் மேற்கொண்டு வருகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் அபூபக்கர் அறிக்கை: முஸ்லிம் மக்கள் நலனில், இ.பி.எஸ்., அரசு அக்கறை காட்டி வருகிறது. புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அதுபோல, பிற மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி பெற்றுத் தர வேண்டும்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement