Advertisement

நீதிமன்றங்கள் மீது கூடுதல் நம்பிக்கை ஏற்படணும்!

நீதிமன்றங்கள் மீது கூடுதல் நம்பிக்கை ஏற்படணும்!

ந.தேவதாஸ், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சாட்சிகளும், ஆதாரங்களும் தான், ஒரு வழக்கின் தீர்ப்பை, நீதிமன்றங்கள் நிர்ணயிக்கிறது. ஒவ்வொரு வழக்கின் வாய்தாவிலும், புதிய மனுவை போட்டு, வழக்கை இழுத்தடிக்கும் போக்கும் தொடர்கிறது. இதனால், தீர்ப்பின் காலக்கெடுவை நிர்ணயிக்க முடிவதில்லை. வாய்தாவில், சாதனை புரிந்த அரசியல் தலைவர்களையும் கண்டிருக்கிறோம்.சுதந்திரத்திற்கு முன், நடந்த வரலாற்று சம்பவத்தை நினைவுகூர்கிறேன்...சுதந்திர காலத்தில் கலகம் செய்ததாக கைது செய்யப்பட்ட, 46 விடுதலை போராட்ட வீரர்களின் சார்பில், ஆங்கிலேய நீதிபதி முன், வழக்கறிஞர் ஒருவர் வாதம் செய்தார். வாதாடிய வழக்கறிஞரிடம், உதவியாளர் ஒருவர், ஒரு காகிதத்தை நீட்டினார்.அதை படித்த வழக்கறிஞர், அதை மடித்து, பாக்கெட்டில் வைத்து, தொடர்ந்து வாதத்தை தொடர்ந்தார். உணவு இடைவேளையின் போது நீதிபதி, 'பாக்கெட்டில் என்ன காகிதம்' என வழக்கறிஞரிடம் கேட்டார். 'என் மனைவி இறந்து விட்டதை கூறப்பட்ட செய்தி' என்றார்.பதறிய நீதிபதி, 'வாதத்தை அப்படியே நிறுத்தி சென்றிருக்கலாமே' எனக் கேட்க, வழக்கறிஞர், 'நான் போவதால், பிரிந்த என் மனைவி உயிரை மீட்டு வர சாத்தியமில்லை. ஆனால், என் வாதத்தால், 46 மனித உயிர்களை, துாக்கு மேடைக்கு அனுப்பாமல் மீட்க சாத்தியமிருக்கிறதே' என்றார்.வியந்த நீதிபதி, உடனே, 46 பேரையும் விடுதலை செய்தார். வழக்கறிஞர் வேறு யாரும் அல்ல. இரும்பு மனிதர், சர்தார் வல்லபபாய் படேல் தான். அப்படிப்பட்ட அருமையான மனிதர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி, இந்தியா. ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக இருக்கிறது.ஒரு வழக்கில் ஒரு வழக்கறிஞர் ஆஜரானால், குற்றவாளி சார்பாக, பலர் ஆஜராகும் நிலை ஏற்பட்டுள்ளது.பொதுவாக, கிராமப்புறங்களில், ஆல மரத்தடியில் அமர்ந்து, விசாரித்து வழங்கப்படும் பஞ்சாயத்து தீர்ப்புகள் அனைவாராலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளக்கூடியது; இங்கு மனசாட்சிக்கு இடமுண்டு.ஒவ்வொரு வழக்கின் தன்மையை பொறுத்தே, தீர்ப்பின் காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான, பாலியல் பலாத்கார வழக்குகளை மட்டும் விரைந்து விசாரித்து, கடுமையான தீர்ப்பை வழங்க வேண்டும்.இதெல்லாம் நடக்கும் பட்சத்தில், நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு கூடுதலான நம்பிக்கை ஏற்படும்!

டி.என்.பி.எஸ்.சி., தேர்வுநம்பகத்தன்மையாகநடக்கணும்!

க.அருச்சுனன், செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: தமிழக அரசு தேர்வாணையத்திற்கு, அத்தி பூத்தாற் போல், நல்ல அதிகாரிகள் சிலர் நியமிக்கப்படுவது உண்டு.ஆணையத்தின் செயலராக இருந்த, உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., நேர்மையை அரசு விரும்பாததால், வேறு பதவிக்கு மாற்றப்பட்டார்.இன்று, டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணைய முறைகேட்டில் ஊழியர்கள், இடைத்தரகர்கள் என, 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு ஒன்று, இரண்டு என, கைது படலம் தொடர்கிறது.இந்த முறைகேடு, அதிகாரிகளின் பின்புலமோ, அரசியல்வாதிகளின் பின்புலமோ இல்லாமல் நடைபெற வாய்ப்பில்லை.நல்ல நேர்மையான அரசியல்வாதிகளால் நியமிக்கப்படும், தேர்வாணைய உறுப்பினர்களின் கட்டுப்பாடுகளை மீறி, நல்ல உள்ளங்களால் எதுவும் செய்து விட முடியாது.ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலர், 'நமக்கு ஏன் வம்பு' என, அரசியல்வாதிக்கு துணைபோகும் நிலைக்கு வந்து விடுகின்றனர். அரசியல்வாதிக்கே, குறுக்கு வழியை சொல்லும் நிலைக்கு சிலர் வளர்கின்றனர்.டி.என்.பி.எஸ்.சி., வழக்கின் முக்கிய குற்றவாளி, ஜெயகுமாரிடம் பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில், எந்த அரசியல் தலையீடும் இன்றிதேர்வாணையத்தின் முறைகேடுகளை, போலீசார் வெளிக் கொண்டு வர வேண்டும்.'குரூப் - 4' தேர்வை, 16 லட்சத்து, 29 ஆயிரத்து, 865 பேர் எழுதினர். அவர்களில், 99 பேர் மட்டும் தவறு இழைத்துள்ளனர் என்பது, ஏற்கத் கூடியதாக அல்ல!இத்தருணத்தில், 'டி.என்.பி.எஸ்.சி.,யின் முறைகேடுகளை, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கக் கோரிய மனுவில் போதிய விபரங்கள் இல்லை' என, மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.சி.பி.சி.ஐ.டி., போலீசார் உரிய முறையில், இந்த வழக்கை விசாரித்து, உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். அப்போது தான், டி.என்.பி.எஸ்.சி., மீது, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். தேர்வும் நம்பகத்தன்மையாக நடந்தேறும்!

எதிர்க்கட்சிகள்ஏமாற்று வேலையைமக்கள் புரிந்துள்ளனர்!

வீ.ரா.கோபால், சென்னையிலிருந்து எழுதுகிறார்: ஒரு பொய்யை பலமுறை சொன்னால், அது மெய்யாகி விடும் என்ற நினைப்பில் எதிர்க்கட்சிகள் நடந்து கொள்வது, எந்த விதத்திலும் பயன் தராது. இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்பட்டால் மட்டுமேல தங்களுக்கு எதிர்காலம் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.குடியுரிமை திருத்த சட்ட மசோதாவைஎதிர்த்து, டில்லி உட்பட பெருவாரியாக மாநிலங்களிலும் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.'பா.ஜ.,வுக்கு எதிராக, டில்லி சட்டசபை தேர்தலில் ஓட்டளித்துள்ளனர்' என, முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுவது, 'கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஓட்டவில்லை' என்பதை போல் உள்ளது.டில்லியில், காங்கிரஸ் டிபாசிட் இழந்து பரிதாபமாக தோற்றுப் போனதும், குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடியதால் தான் என, எடுத்துக் கொள்ளலாமா... டில்லி மக்களிடையே இந்த சட்டத்திற்கு ஆதரவு இருக்கிறது என்பதால் தான், ஆம் ஆத்மி கட்சியும், தன் தேர்தல் பரப்புரையில் எங்கும்எதிர்த்து பேசவில்லை.அதைத் தவிர, பல இலவசங்களை தேர்தல்வாக்குறுதிகளாக அள்ளி வீசியதும், ஆம் ஆத்மி கட்சி வென்றுள்ளதற்கு சாட்சியென்று புரிந்து கொள்ள வேண்டும்.குடியுரிமை திருத்த சட்டத்தால் இங்குள்ள முஸ்லிம் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது;ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் நீங்கலான மக்களுக்கு, இந்தியாவில் குடியுரிமை பெறத் தேவையான சட்டம் உள்ளது, என, பலமுறை பிரதமர் மோடியும் எடுத்துக்கூறியும், எதிர்க்கட்சிகள் அதை ஏற்க மறுக்கின்றன.ஏற்கனவே இந்தசட்டம், 1985ல் முதன்முதலாக ராஜிவ் பிரதமராக இருந்த போது திருத்தம் செய்யப்பட்டு, தற்போது ஆறாவது முறையாக திருத்தம் செய்யப்பட உள்ளது.காங்கிரசும், இந்த மாற்றங்களை, போராட்டம் செய்பவர்களிடம் எடுத்துக்கூற ஏன் மறுக்க வேண்டும்.எதிர்க்கட்சிகள் வசதிக்காக, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராடுவது அரசியல் லாபம் கருதியே; இதை, டில்லி மக்களும் சரி, இந்திய மக்கள் அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர்.தமிழகத்தில் தி.மு.க., மற்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் போராட்டத்திற்கு ஆதரவு தருவதும், மக்களைத் திசை திருப்பி எப்படியாவது பதவிக்கு வந்து விட வேண்டும் என்ற வெறித்தனமான ஆசையால் தான் என்பதையும் மக்கள் நன்குபுரிந்துள்ளனர்!
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • karutthu - nainital,இந்தியா

    ஒண்ணுமில்லை நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு வக்கீல்கள் என்னமா வாய்தா வாங்கி தண்டனையை ஒத்திப்போடுகிறார்கள் .எனக்கு தெரிந்து உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையே தள்ளிபோடுறாங்க ,,,,,இதை உச்ச நீதிமன்றமும் பார்த்துக்கொண்டுதானிருக்குது அவங்க தூக்கிலிருந்து தப்பித்தால் கூட ஆச்சரியப்பட ஒன்றுமில்லை

Advertisement