Advertisement

பேச்சு, பேட்டி, அறிக்கை

'உயர்ந்த தத்துவம்ன்னு எதைச் சொல்றீங்க... பிரியாணி சாப்டுட்டு, ஓட்டலுக்குப் பணம் குடுக்காம போவதா... பணம் கேட்டால், கடையை அடித்து நொறுக்குவதா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., சிவா பேச்சு: நாட்டின் உயர்ந்த தத்துவங்களுக்கு, மோடி அரசு முடிவு கட்டி வருகிறது. பேராபத்து நம்மை சூழ்ந்துகொண்டுள்ளது. நாம் யாரையும் எதிர்த்து போராடவில்லை; நம்மை பாதுகாத்து கொள்ளத் தான் போராடுகிறோம்.

'ஏற்கனவே சேர்த்தது போதாதா; இன்னும் பேராசை ஏன் என, தி.க., 'மாஜி'க்கள் குமுறுகின்றனரே...' என, கேட்கத் துாண்டும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை: மதவாதிகள், மாதந்தோறும் தங்கள் சம்பளத்தில், 10 சதவீதத்தை கோவிலுக்கு கொடுக்கின்றனர். அதுபோல, தி.க.,வினர் தங்கள் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை, நம் அமைப்பிற்கு தரலாமே; தங்கள் வேலை முடிந்ததும், இளைஞர்கள் பொதுமக்களிடம் துண்டு ஏந்தலாமே.

பெண்கள் என பொதுவாக சொல்லாதீர்கள்; கட்சி சார்பு, அமைப்பு சார்பு பெண்களில் சிலர் என சொல்லுங்கள்...' என, திருத்தத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேச்சு: பெண்கள் எந்த போராட்டத்தில் அதிகமாக பங்கேற்கின்றனரோ, அந்த போராட்டம் வெற்றி பெறும். அதை யாராலும் தடுக்க முடியாது. இன்று இந்தியாவில் ஏராளமான பெண்கள், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்; இந்த போராட்டம் வெற்றி பெறும்.

'இப்படி ஒரு கவலை உங்களுக்கு இருக்கிறதா... தமிழக மக்கள் ஸ்டாலினுக்கு வேலை வைப்பாங்கன்னு நினைக்கிறீங்க?' என, கிண்டலாக கூறும் வகையில், தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் பேச்சு: பத்தாண்டுகளுக்கு முன், நாங்கள் ஆட்சியை விட்டு இறங்கிய போது, 1 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. இப்போது, 4 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், இதை எப்படி சமாளிக்கப் போகிறோம் என தெரியவில்லை; ஸ்டாலின் சமாளித்து விடுவார்.

'களத்தில் இறங்கிச் செயல்படுவதுன்னா என்ன அர்த்தம் சார்... போராடுறது, குரல் கொடுப்பது மட்டும் தானே... அதைத் தாண்டி, கம்யூ.,காரங்க வேற என்ன செஞ்சிருக்காங்கன்னு தெரியலியே...' என, மடக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் எம்.பி., ரங்கராஜன் பேச்சு: கம்யூனிஸ்ட் அறிக்கையை வாசித்தால் மட்டும் போதாது. மகாத்மா காந்தி, ராஜாஜி, கருணாநிதி, காமராஜர் என பலரும், இந்த அறிக்கையை வாசித்துள்ளனர். எனினும், களத்தில் இறங்கி செயல்படுவதன் மூலம் தான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆக முடியும்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement