Advertisement

சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத மெட்ரோ நிர்வாகம்

மெது வடையை மென்றபடியே, ''புது மாதிரி லஞ்சம் கேட்டு தொல்லை பண்றாங்க...'' என, பெஞ்ச் விவாதத்தை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''யாரு வே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அரசு மருத்துவமனையில, தினமும், 200 பேர் உள்நோயாளிகளா தங்கி, சிகிச்சை எடுத்துக்கிறாங்க... ''இவங்களுக்கு உதவியா, குடும்பத்தினரோ, உறவினர்களோ இருப்பாங்க... இவங்களிடம், மருத்துவமனை ஊழியர்கள், பணம் கேட்டு தொல்லை பண்றதா புகார்கள் வருதுங்க...''அதே போல, தற்காலிக பணியாளர்கள் தரப்புல, பணம், காசு எதுவும் கேட்காம, காலை மற்றும் மாலை நேரங்கள்ல டீ, காபி, டிபன் வாங்கி குடுங்கன்னு கேட்கிறாங்க... ''பாவம், ஏழை, எளிய நோயாளிகள் ரொம்பவே சிரமப்படுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எங்களுக்குள்ள எந்த கோஷ்டியும் இல்லைன்னு, 'சீன்' போட்டுட்டு போயிருக்காங்க பா...'' என, அடுத்த மேட்டருக்கு சென்றார், அன்வர்பாய்.''எந்த கட்சி விவகாரமுங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''மதுரை, அ.தி.மு.க.,வுல, அமைச்சர்கள் ராஜு, உதயகுமார், எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பான்னு, மூணு கோஷ்டிகள் இருக்குது... ''மூணு பேருமே, மாநகர், மேற்கு, கிழக்கு மாவட்டச் செயலர்களாகவும் இருக்காங்க பா...''அரசு விழாக்கள்ல கூட, மூணு பேரையும் சேர்ந்தாப்புல பார்க்க முடியாது... முதல்வர், இ.பி.எஸ்., முதல்வர் பதவியில, மூணு வருஷங்களை முடிச்சு, நாலாவது வருஷத்துல அடியெடுத்து வச்சிருக்காரே... ''இதுக்காக, மூணு பேரும் சேர்ந்து, முதல்வரை பார்த்து, மதுரை மாவட்ட சாதனை மலரை குடுத்து, வாழ்த்து சொல்லிட்டு வந்திருக்காங்க பா... 'எங்களுக்குள்ள கோஷ்டி இல்லை... ஒற்றுமையா தான் இருக்கோம்'னு காட்டிக்க தான், இப்படி சேர்ந்து போயிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''சுப்ரீம் கோர்ட் உத்தரவையே மதிக்காம செயல்படறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்தார், குப்பண்ணா.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.''சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு, 2013ம் வருஷம், 'இன்டர்வியூ' நடத்தி, நிலைய கட்டுப்பாட்டாளர் பணிக்கு, 327 பேரை, 'செலக்ட்' செஞ்சா... இதுல, 250 பேருக்கு வேலை குடுத்தா ஓய்...''மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்துல, மீதம் இருக்கறவாளுக்கு வேலை தரோம்னு சொல்லியிருந்தா... ஆனா, மெட்ரோ பணிகளுக்கு ஆட்கள் நியமனத்தை, தனியார் கான்ட்ராக்டர்கள் கையில குடுத்துட்டா ஓய்...''இதனால, வேலைக்கு காத்திருந்தவா, உயர் நீதிமன்றத்துக்கு போக, வேலை குடுக்கணும்னு, தீர்ப்பாயிடுத்து... ''இதை எதிர்த்து, மெட்ரோ நிர்வாகம், உச்ச நீதிமன்றத்துல அப்பீலுக்கு போக, அங்கயும் தொழிலாளர்களுக்கு சாதகமா தான் தீர்ப்பு குடுத்தா ஓய்...''ஆனாலும், வேலை தராம மெட்ரோ நிர்வாகம் இழுத்தடிக்கறது... கேட்டா, 'இப்ப, பதவிகள் காலியில்லை'ன்னு சாக்கு போக்கு சொல்லி இழுத்தடிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement